செவ்வாய், 4 ஏப்ரல், 2017

ஜெட் வேகத்தில் ஜியோ 4ஜி : டிராய் சான்றிதழ்ǃ

மின்னம்பலம் : ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 4ஜி டவுன்லோடு வேகமானது, மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களின் வேகத்தைவிட இரு மடங்கு அதிகமாக இருப்பதாக தொலைதொடர்புத் துறை ஒழுங்குமுறை ஆணையமான டிராய் தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் தனது சேவையைப் பயன்படுத்துவோருக்கு வரும் மார்ச் மாதம் வரை இன்டர்நெட் உள்பட அனைத்துச் சேவைகளும் இலவசமாக வழங்கப்படும் என்ற அறிவிப்புடன் களமிறங்கியது ஜியோ. அடுத்த குறுகிய காலகட்டத்திலேயே 10 கோடி வாடிக்கையாளர்களை தனது இணைப்புக்குள் கொண்டு வந்து சாதனை படைத்தது. அதிகளவிலான வரவேற்பு பெற்றாலும் ஜியோ சேவையில் சில குளறுபடிகள் இருப்பதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர்.
குறிப்பாக, ஜியோ 4ஜி சேவையின் டவுன்லோடு வேகம் மிகவும் மந்தமாக இருப்பதாகவும் ஜியோ தனது வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிவிட்டதாகவும் வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்தனர். இந்நிலையில், மற்ற நிறுவனங்களைவிட இரு மடங்கு அதிக வேகத்தில் ஜியோவின் 4ஜி சேவை இருப்பதாக டிராய் தெரிவித்துள்ளது.
தொலைதொடர்புத் துறை ஒழுங்குமுறை ஆணையமான டிராய், தொலைதொடர்பு சேவைகளின் டவுன்லோடு வேகம் குறித்த புள்ளி விவரங்களை மாதாமாதம் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட சோதனையில், ஜியோவின் டவுன்லோடு வேகம் 16.48 MBPS ஆக இருந்ததாக டிராய் புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது. அடுத்ததாக, ஐடியா 8.33 MBPS ஆகவும், ஏர்டெல் டவுன்லோடு வேகம் 7.66 MBPS ஆக இருந்ததாகவும் டிராய் தெரிவித்துள்ளது. அடுத்ததாக, வோடஃபோன் 5.66 MBPS, பி.எஸ்.என்.எல் 2.01 MBPS, டாடா டொகோமோ 2.67 MBPS, ஏர்செல் 2.52 MBPS, ரிலையன்ஸ் கம்யூனிகேசன் 2.01 MBPS என்றளவில் இருப்பதாக டிராய் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக