சனி, 1 ஏப்ரல், 2017

ஜியோ பிரைம்: கால அவகாசம் நீட்டிப்பு! சித்திரை 15 வரை ..


மின்னம்பலம் :ஜியோ பிரைம் திட்டத்தில் இணைவதற்கான கால அவகாசம் நேற்றுடன் (31-03-2017) முடிவடைவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த கால அவகாசத்தை வருகிற (ஏப்ரல்) 15ஆம் தேதி வரையில் நீட்டிப்பதாகவும், மேலும் ரூ.303 அல்லது அதற்குமேல் ரீசார்ஜ் செய்தால் வரும் ஜுன் மாதம் வரை அனைத்து சேவைகளும் இலவசமாக வழங்கப்படும் எனவும் ஜியோ அறிவித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ, கடந்த செப்டம்பர் மாதம் தனது இலவச வாய்ஸ் கால் மற்றும் இலவச இன்டர்நெட் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இச்சலுகை டிசம்பர் மாதம் வரையில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு பின்னர், மூன்று மாதங்களுக்கு நீட்டித்து மார்ச் மாதம் 31ஆம் தேதி வரை (நேற்று) வழங்கப்படும் என்று அறிவித்தது.
மேலும் மார்ச் 31ஆம் தேதிக்குப் பிறகும் ஜியோ சேவையைப் பயன்படுத்த வாடிக்கையாளர்கள் ரூ.99 கட்டணம் செலுத்தி ஜியோ பிரைம் திட்டத்தில் இணைய வேண்டும் என்று ஜியோ அறிவித்திருந்தது. இந்நிலையில், ஜியோ பிரைம் திட்டத்தில் இணைவதற்கான கால அவகாசத்தை வரும் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நீட்டிப்பதாக ஜியோ அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஜியோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஜியோ பிரைம் திட்டத்தில் இணைவதில் வாடிக்கையாளர்கள் அதிகளவில் ஆர்வம் காட்டுவதால் இந்தத் திட்டத்தில் இணைவதற்கான காலக்கெடு வரும் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.303 அல்லது அதற்குமேல் ரீசார்ஜ் செய்தால் வரும் ஜுன் மாதம் வரை அனைத்து சேவைகளும் இலவசமாக வழங்கப்படும்’ என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 28ஆம் தேதி வரையிலான நிலவரப்படி, ஜியோ பிரைம் திட்டத்தில் இணைந்தோர்களின் எண்ணிக்கை 5 கோடிக்கும்மேல் இருந்தது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களில் அதிகளவிலான வாடிக்கையாளர்கள் இந்தத் திட்டத்தில் இணைந்ததன் மூலம், 7.5 கோடிப்பேர் ஜியோ பிரைம் உறுப்பினர்களாக தங்களை இணைத்துக்கொண்டுள்ளனர். வாடிக்கையாளர்களின் நலனுக்காக, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஜியோ கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக