சனி, 1 ஏப்ரல், 2017

தலை வழுக்கை: மாணவிக்கு பள்ளியில் சேர்க்கை மறுப்பு!


மின்னம்பலம் : உடல் நலக்குறைவால் தலை வழுக்கையான மாணவியை பள்ளியில் சேர்ப்பதற்கு மறுத்த தனியார் பள்ளியின் நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க கல்வித்துறைக்கு டெல்லி பெண்கள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த 13 வயதான மாணவி ஒருவர், வணஸ்தாலி பப்ளிக் பள்ளியில் 9ஆம் வகுப்பில் சேர்வதற்கு நுழைவுத்தேர்வு எழுதி தேர்ச்சிபெற்றுள்ளார். இவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டால் தலையில் வழுக்கை விழுந்துள்ளது. இந்நிலையில், நேர்காணலுக்குச் சென்றபோது அவர் தலை வழுக்கையாக இருந்ததைக் கண்டு பள்ளியில் சேர்ப்பதற்கு பள்ளி நிர்வாகம் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

எனவே, பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் பெண்கள் ஆணையத்தின் தலைமை அதிகாரி சுவாதி மாளிவால், இதுகுறித்து ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுத்து அதற்கான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கல்வித் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, பள்ளி முதல்வர் அனுராதா ஜெயின் பள்ளியில் போதுமான இடம் இல்லை என்பதால்தான் மாணவியின் சேர்க்கைக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நுழைவுத்தேர்வில் அதிகமான மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். எங்கள் பள்ளியில் காலியிடம் இருக்கும்போது மாணவியை பள்ளியில் சேர்த்துக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.
ஆனால் கல்வி இயக்ககத்தின் இயக்குநர் சௌமியா குப்தா இதுகுறித்து பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக