சனி, 1 ஏப்ரல், 2017

ஆர் கே நகர் இடைதேர்தல் தேதி மாற்றப்படலாம்? தினகரன் மீது அன்னியசெலாவணி (Fera) வழக்கு மீண்டும்?

ஆர்.கே. நகரிலிருந்து வந்து கொண்டிருக்கிறேன். ஜூ.வி அட்டையைத் தயார் செய்யவும்’ என வாட்ஸ்அப்பில் வந்து விழுந்தது கழுகார் மெசேஜ். கூடவே, ‘ஃபெரா பொறியில் தினகரன்... தள்ளிப்போகுமா ஆர்.கே. நகர் தேர்தல்?’ என்ற தலைப்பும் வந்தது.சில நிமிடங்களில், முகத்தில் வியர்வை முத்துகள் படர்ந்த நிலையில் வந்த கழுகாருக்காக ஏ.ஸி-யின் டெம்பரேச்சரை குறைத்தோம். ‘‘ஆர்.கே. நகர் அரசியல் டெம்பரேச்சர் நாளுக்கு நாள் அதிகரித்த படியே இருக்கிறது’’ என முன்னோட்டம் கொடுத்துவிட்டு, குறிப்பு நோட்டைப் புரட்ட ஆரம்பித்தார் கழுகார்.“டி.டி.வி.தினகரன் எப்படி இருக்கிறார்?” என்று கேட்டோம்.‘அவர் மற்ற வேட்பாளர்களைவிட கூடுதல் நம்பிக்கையோடும், மற்ற வேட்பாளர்களைவிட கூடுதல் டென்ஷனாகவும் இருக்கிறார்” என்றார் கழுகார்.<‘‘டென்ஷனுக்கு என்ன காரணம்?‘‘மற்ற வேட்பாளர்களுக்கு ஆர்.கே. நகரில் தேறுவோமோ... மாட்டோமோ என்ற கவலை மட்டும்தான் இருக்கிறது. தினகரனுக்கு ஆர்.கே. நகர் தேர்தலோடு, ஃபெரா வழக்கு டென்ஷனும் இந்த நேரத்தில் சேர்ந்துள்ளது. அதுதான் அவருடைய டென்ஷனுக்குக் காரணம். ‘ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் யார் ஜெயிப்பார்கள்?’ என்பதைத் தாண்டி, ‘அங்கே இடைத்தேர்தலே நடைபெறுமா?’ என்கிற சந்தேகங்கள் படர ஆரம்பித்திருக்கின்றன. இதற்குக் காரணகர்த்தா, தினகரன். அவர்மீதான ஃபெரா வழக்கை வைத்து அரசியல் சதுரங்கம் ஆட ஆரம்பித்திருக்கிறது பி.ஜே.பி.’’

‘‘அப்படியா?”

‘‘மார்ச் 15-ம் தேதிதான் தினகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அன்றைய தினத்தில் இருந்தே தனது ஆட்டத்தைத் தொடங்கிவிட்டது   பி.ஜே.பி. ‘இரட்டை இலைச் சின்னத்தை எங்களுக்கு ஒதுக்க வேண்டும்’ என ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தேர்தல் கமிஷனில் கோரிக்கை வைத்தனர். அதன்பிறகு சசிகலா அணியினர் முறையிட்டனர். இரண்டு தரப்பையும் அழைத்து விசாரித்தத் தேர்தல் கமிஷன், தற்காலிகமாக இரட்டை இலைச் சின்னத்தை முடக்குவதாக அறிவித்தது. இதை, தமிழக பி.ஜே.பி தலைவர் தமிழிசை செளந்தரராஜன் வரவேற்றார். தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசரோ, ‘இரட்டை இலை முடக்கப்பட்டதில் பி.ஜே.பி-யின் சதி இருக்கிறது’ என்றும், ‘இரட்டை இலை பி.ஜே.பி-யின் கையில் இருக்கிறது’ என்றும் திரி கொளுத்திப் போட்டார். தினகரன் வேட்பாளர் ஆனதை பி.ஜே.பி கொஞ்சமும் ரசிக்கவில்லை. இரட்டை இலையை முடக்குவதற்கு பன்னீரைப் பகடைக்காயாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்கிற பேச்சுகள் கிளம்பின.’’

‘‘ஆமாம்!”

‘‘பிரசாரத்தில் தினகரன், தி.மு.க-வின் ‘பி டீம்’ ஓ.பன்னீர்செல்வம் எனச் சொன்னாலும், அவர் பி.ஜே.பி-யின் ‘பி டீம்’தான் எனப் பேச்சுகள் உண்டு. ஜெயலலிதா அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் பொறுப்பு முதல்வராகப் பன்னீரை நியமிக்க வேண்டும் என கவர்னர் வித்யாசாகர் ராவ் மூலம் அழுத்தம் தரப்பட்டது தொடங்கி நிறைய காரணங்கள் அடுக்கப்படுகின்றன. பிரதமர் மோடியை பன்னீர்செல்வம் சந்தித்த தருணங்களிலும்கூட, நாடாளுமன்ற மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை அனுமதிக்கப்பட வில்லை. ஜல்லிக்கட்டு புரட்சியில் மோடியும் கடுமையாக வறுபட்டார். அதனால் போராட்டத்தை ஒடுக்கச் சொன்னது மத்திய அரசு. அதை சிரமேற்றுச் செய்தார் பன்னீர்செல்வம். ஜெயலலிதா சமாதியில் தியானம் இருந்து சசிகலாவுக்கு எதிராக கொதித்த நேரத்தில் ‘கட்டாயப்படுத்திதான் என்னை ராஜினாமா செய்ய வைத்தார்கள்’ என்றார் பன்னீர். கூவத்தூர் கூத்து முதல் எடப்பாடி பழனிசாமி அமைச்சரவை மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது வரையில் பன்னீருக்கு மறைமுக ஆதரவை பி.ஜே.பி அளித்தது என விமர்சனங்கள் கிளம்பின.’’

‘‘ஆனால், தினகரன் பி.ஜே.பி-யோடு இணக்கமாக இருக்க முயற்சி செய்கிறாரே? உ.பி உட்பட ஐந்து மாநில தேர்தல்களில், நான்கு மாநிலங்களில் பி.ஜே.பி வெற்றி பெற்றபோது தினகரன் வாழ்த்து தெரிவித்தாரே?’’

‘‘உண்மைதான். பஞ்சாபில் வென்ற காங்கிரஸ் கட்சிக்கும் அவர் வாழ்த்து சொல்லியிருந்தார். அதைக் கவனிக்கவில்லையா? பி.ஜே.பி தலைவர்கள் அதை உன்னிப்பாகக் கவனித்தார்கள். அது அரசியல் மரபு என்பதைத் தாண்டி அதற்கு வேறு பரிமாணங்கள் இருப்பதாக சந்தேகப்படுகிறது பி.ஜே.பி தலைமை. அப்போலோவில் ஜெயலலிதாவைப் பார்க்க வந்த முதல் அகில இந்தியத் தலைவர் ராகுல் காந்திதான். அதன்பிறகுதான் மற்றவர்கள் எல்லாம் வந்தார்கள். ஜெயலலிதாவுக்கு மோடிக்கும் நீண்ட கால நட்பு உண்டு. குஜராத்தில் மோடி ஆட்சியைப் பிடித்தபோது இரண்டு முறை அங்கே போனார் ஜெயலலிதா. குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது, துக்ளக் ஆண்டு விழாவில் பங்கேற்க ஒருமுறை சென்னை வந்தார். அப்போது  மோடிக்கு தன் வீட்டில் விருந்து அளித்தார் ஜெயலலிதா. பிரதமராக இருந்த மோடி, முதல்வர் ஜெயலலிதா வீட்டுக்கு வந்த மரபும்கூட நடைபெற்றது. அந்த அளவுக்கு ஜெயலலிதாவோடு நட்பில் இருந்த மோடி, அப்போலோவுக்கு வந்து ஜெயலலிதாவைப் பார்க்கவில்லை. வந்தாலும் ஜெயலலிதாவைப் பார்க்க முடியாது என தெரியும். கருணாநிதியின் துணைவி ராஜாத்தி அம்மாள்கூட சசிகலாவைப் பார்த்து நலம் விசாரித்தார். இப்படி காங்கிரஸுடனும் தி.மு.க-வுடனும் சசிகலா நட்பு பாராட்டுவதை பி.ஜே.பி கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தது. இதனால்தான் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த ராஜாஜி ஹாலுக்கு வந்த பிரதமர் மோடி, இறுதிச் சடங்கு நடந்த இடத்துக்கு வரவில்லை. ஆனால், ராகுல் காந்தி இறுதிச் சடங்கிலும் பங்கேற்றார்.’’

‘‘எல்லாம் சரி... ஜெயலலிதா எதிர்த்த உதய், உணவுப் பாதுகாப்பு சட்டம், துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் ஆகியவற்றை எல்லாம் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது சசிகலா தரப்பு ஆதரித்ததே?’’
‘‘ஆனால், சசிகலா குடும்பத்தை பி.ஜே.பி நம்பவில்லை. தஞ்சாவூரில் நடந்த பொங்கல் விழாவில் பி.ஜே.பி-க்கு எதிராக பரபரப்பைப் பற்ற வைத்தார் நடராசன். இது பி.ஜே.பி-யைப் பொங்க வைத்தது. இதன்பிறகு தங்கள் வேகத்தைக் காட்ட ஆரம்பித்தார்கள். சசிகலாவை முதல்வர் ஆக்குவதற்காக அவரை அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் தேர்வு செய்து அதற்கான ஆதரவுக் கடிதத்தை அனுப்பியும், கவர்னர் வித்யாசாகர் ராவ் அவரைப் பதவியேற்க அழைக்காததன் பின்னணியில் பி.ஜே.பி-யின் கரமே இருந்தது. இப்போது தினகரனை முடக்குவதற்கும் அந்தக் கரமே சாட்டை எடுத்திருக்கிறது.’’

‘‘கொஞ்சம் தெளிவாகச் சொல்லும்?’’

‘‘இங்கிலாந்து பர்க்கிலே வங்கி வழக்கு தினகரனை பல ஆண்டுகளாக துரத்திக் கொண்டிருக்கிறது. 1995-96 காலகட்டத்தில், ‘டிப்பர் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆஃப் விர்ஜின் இந்தியா’ எனும் இந்திய நிறுவனம், இங்கிலாந்திலுள்ள பர்க்கிலே வங்கியில் தினகரன் அக்கவுன்ட்டில் மிகப்பெரிய தொகை ஒன்றை வரவு வைத்தது. டிப்பர் நிறுவனம் யாருக்குச் சொந்தமானது என்பதை சோதனையிட்டபோது, அது ஒரு போலியான நிறுவனம் என்பது தெரியவந்தது. இதுகுறித்து, அயல்நாடு பணப் பரிமாற்ற ஒழுங்குமுறை சட்டத்தின் (ஃபெரா) கீழ் மத்திய அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. அந்த வழக்குதான் தினகரனுக்குப் பெரிய தலைவலியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.’’

‘‘அந்த வழக்கில் தினகரனுக்கு அபராதம் விதிக்கப்பட்டதே?’’

‘‘ஆம். அந்த வழக்கில் 1998-ம் வருடம், தினகரனுக்கு 31 கோடி ரூபாய் அபராதம் விதித்தது அமலாக்கத் துறை. அதை எதிர்த்து அயல்நாட்டு பணப் பரிமாற்ற ஒழுங்குமுறை மேல்முறையீட்டு வாரியத்தில் மேல்முறையீடு செய்தார் அவர். இதை விசாரித்த மேல்முறையீட்டு வாரியம், அபராதத் தொகையை 28 கோடி ரூபாயாகக் குறைத்து 2000-ம் ஆண்டு மே மாதம் 5-ம்தேதி உத்தரவிட்டது. அதையும் தினகரன் செலுத்தவில்லை. மாறாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், ‘என் மீது எந்தத் தவறும் இல்லை. அதனால், எனக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்ய வேண்டும்’ என்று மனுத்தாக்கல் செய்திருந்தார். அதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ‘28 கோடி ரூபாய் அபராதத்தை தினகரன் கட்டவேண்டும்’ என்று உத்தரவிட்டது. இந்த வழக்கில்தான், மேல்முறையீடு செய்யப் போவதாக, இப்போது ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தாக்கல் செய்த அஃபிடவிட்டில் தினகரன் குறிப்பிட்டு இருக்கிறார்.’’

‘‘ம்ம்ம்...’’

‘‘இப்படி அபராதத்தைச் செலுத்தாமல் இழுத்தடித்துக்கொண்டிருந்த தினகரனுக்கு எதிராக அமலாக்கத் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தனியாக ஒரு மனுவைத் தாக்கல் செய்தது. அந்த மனுவில், ‘தினகரன் அபராதத்தைச் செலுத்தாமல் இழுத்தடிக்கிறார். எனவே, அவரை திவாலானவர் என்று அறிவிக்க வேண்டும்’ எனக் கேட்டிருந்தது. அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. அதுபோல, ஜெ.ஜெ டி.வி வழக்கும் தினகரனுக்கு எதிராக நடந்துகொண்டிருக்கிறது...’’

‘‘அது என்ன ஜெ.ஜெ டி.வி வழக்கு?”

‘‘ஜெயா தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில் அது, ஜெ.ஜெ. டி.வி என்ற பெயரில்தான் இருந்தது. அப்போது அதன் நிர்வாகப்பொறுப்பில் சசிகலா இருந்தார். அவரோடு சசிகலாவின் அக்கா வனிதாமணியின் மகன்களான தினகரனும், பாஸ்கரனும் இருந்தனர். அந்த நேரத்தில், ஜெ.ஜெ. தொலைக்காட்சிக்கு ‘அப்லிங்க்’ வசதிகளை ஏற்படுத்தவும், மற்ற தொழில்நுட்பத் தேவைகளுக்கும், கருவிகளை வாடகைக்கு எடுத்தனர். அதற்காக வெளிநாட்டு நிறுவனங்களான ரிட்சாட், சுபிக்பேக் என்ற நிறுவனங்களில் ஐந்து லட்சம் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்தனர். அதில் விதிமுறைகள் மீறப்பட்டதாகச் சொல்லி, சசிகலா, தினகரன் உள்ளிட்டவர்களுக்கு எதிராகத் தனியாக ஒரு வழக்கைப் பதிவு செய்தது அமலாக்கத் துறை. மொத்தம் ஒன்பது வழக்குகள் சசிகலா, தினகரன், பாஸ்கரன், இளவரசி ஆகியோருக்கு எதிராக உள்ளன. இவற்றில்  தனியாக இரண்டு வழக்குகள் தினகரனை எதிர்த்து மட்டும் நடந்து கொண்டிருக்கின்றன.’’

‘‘இந்த வழக்குகள் எல்லாம் பல ஆண்டுகளாக நடந்துகொண்டுதானே இருக்கின்றன?’’
‘‘ஆமாம். ஆனால், தினகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தினத்துக்குப் பிறகு இந்த வழக்குகளின் விசாரணை, வேகமெடுக்க ஆரம்பித்திருக்கிறது. கடந்த வாரம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தினகரன் நேரில் ஆஜராகவில்லை. ‘ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் பணியின் காரணமாக வழக்கை ஒத்திவைக்க வேண்டும்’ என தினகரன் வழக்கறிஞர்கள் கேட்டார்கள். அமலாக்கத் துறை வழக்கறிஞர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். ‘இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் இந்த வழக்கை, தினமும் விசாரிக்க வேண்டும்’ என அமலாக்கத் துறை விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. ‘வழக்கு விசாரணை தினமும் நடைபெறும்’ என்று கடந்த 27-ம் தேதி உத்தரவிடப்பட்டுள்ளது. அமலாக்கத் துறை இதற்கு முன்னர் இல்லாத வேகத்தில் நீதிமன்றத்தின் கதவுகளை ஓங்கித் தட்டப்போகிறது.’’

‘‘ம்ம்ம்...’’

‘‘சட்டப்படி அமைக்கப்படும் இந்த நெருப்பு வளையத்துக்குள் புகுந்து, தினகரன் மீண்டு வருவது சிரமம் என்கிறார்கள், ஃபெரா வழக்குகளை நன்கு அறிந்தவர்கள். இன்னொரு பக்கம், ஆர்.கே. நகர் தேர்தல் களத்திலும் தினகரனுக்குச் செக் வைக்க முயற்சிகள் நடக்கின்றன. அங்கு நடைபெறும் பணப் பட்டுவாடா தொடர்பான புகார்கள் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகின்றன. அந்தப் புகார்களின் அடிப்படையில் ஆதாரங்களைத் திரட்டும் வேலையும் ரகசியமாகச் செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது, அதிக அளவில் பணப் பட்டுவாடா நடந்ததாகப் புகார் எழுந்ததால், தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. அதேபோல  ஆர்.கே. நகர் தேர்தலும் தள்ளிவைக்கப்படலாம் என்கிறார்கள். இதற்கான ஆலோசனை டெல்லியில் நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் 30-ம் தேதி சென்னை வந்து, ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்திய துணைத் தேர்தல் ஆணையர் உமேஷ் குமார் சின்ஹா, பணப் பட்டுவாடா குறித்துத்தான் அதிகம் விசாரித்தாராம். ஆர்.கே. நகர் தொகுதிக்கு ஐந்து தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்தியாவில் எந்தச் சட்டமன்ற இடைத்தேர்தலிலும் இல்லாத புதுமை இது.’’

‘‘ஓஹோ!”   

‘‘ஒருவேளை இந்தத் தடைகளை எல்லாம் தாண்டி தினகரன் தேர்தலில் வெற்றிபெற்றாலும், உடனடியாக அவரின் பதவி பறிக்கப்படும் அளவில், ஃபெரா வழக்குகளின் போக்கு இருக்கும். அதுவும் விரைவில் வெளியாகும். மொத்தத்தில் தேர்தல் தள்ளி போகலாம். இல்லை, மீண்டும் ஒரு இடைத்தேர்தலுக்கு ஆர்.கே. நகர் தயாராகலாம்’’ என்ற கழுகாரின் கவனத்தைத் திருப்பி, ‘‘மு.க.ஸ்டாலின், ஓ.பி.எஸ் மோதல் இதுவரை இல்லாத அளவில் காரசாரமாக இருக்கிறதே?’’ என்றோம்.
‘‘ஆமாம். ஜெயலலிதா இருந்தவரை தி.மு.க-வில் யாரும் ஓ.பி.எஸ்-ஸை கண்டுகொள்ளவில்லை. ஜெயலலிதா இறந்தபிறகு ஓ.பி.எஸ் முதல்வர் ஆக்கப்பட்டார். சசிகலா குடும்பத்தின் கைகளில் அரசாங்கம் சிக்கிவிடக்கூடாது என்ற எண்ணத்தில், அப்போதுகூட ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க-வினர் ஓ.பி.எஸ்-ஸை கடுமையாக விமர்சிக்கவில்லை. ஆனால், இப்போது நிலைமை வேறு.’’

‘‘இப்போது என்ன பிரச்னையாம்?’’

‘‘ஓ.பி.எஸ்-ஸை இதற்குமேல் வளரவிடக்கூடாது என்று தி.மு.க நினைக்கிறது. காரணம், தி.மு.க-வுக்கு கடந்த 30 ஆண்டுகளாகப் பரம வைரியாக இருந்த ஜெயலலிதா தற்போது உயிருடன் இல்லை. அவருக்குப் பின்னால் வந்த சசிகலா பற்றி தி.மு.க கணிப்பதற்கு முன்பே, அவர் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை வாங்கி சிறைக்குள் முடங்கிவிட்டார். அதற்குப் பிறகு வந்த தினகரனுக்கு மக்களிடம் அறிமுகமும் இல்லை; ஆதரவும் இல்லை. ஆனால், பன்னீர்செல்வத்துக்கு இந்த இரண்டும் அமோகமாக இருக்கிறது. அதுதான் பிரச்னை.’’

‘‘ம்ம்ம்...’’

‘‘பன்னீர்செல்வத்தை வளரவிடுவது எதிர்காலத்தில் மிகப் பெரிய ஆபத்தாக முடியும் என நினைக்கிறார்கள் தி.மு.க-வினர். இப்போதைக்கு இருக்கும் சூழ்நிலையில், ஆட்சி கலைந்து தமிழக சட்டமன்றத் தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்று கருதுகிறார் ஸ்டாலின். எனவேதான், ‘சசிகலா குடும்பத்தை எதிர்ப்பதற்காக அவரை ஆதரித்தது போதும். இதற்குமேல் பன்னீர்செல்வத்தை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தினால்தான், ஆர்.கே. நகர் தேர்தல், எதிர்கால அரசியல் அனைத்துக்கும் நல்லது. நாம் தொடர்ந்து பன்னீர்செல்வத்தை நல்லவர் என்று சொல்லிக் கொண்டிருந்துவிட்டு, தேர்தல் நேரத்தில் அவரை எதிர்த்துக் குற்றச்சாட்டுகளைச்  சொன்னால் அது எடுபடாது’ என்று தி.மு.க-வின் சீனியர்கள் மு.க.ஸ்டாலினிடம் சுட்டிக்காட்டி உள்ளனர். எனவேதான், தற்போது மு.க.ஸ்டாலினை பன்னீர்செல்வம் கடுமையாகச் சாடுவதும், பன்னீர்செல்வத்தை ஒட்டுமொத்த தி.மு.க-வும் பாய்ந்து குதறுவதும் நடந்துகொண்டிருக்கிறது’’ என்று சொல்லி சிரித்த கழுகார், சரேலென பறந்து போனார். 

படங்கள்: மீ.நிவேதன், ஸ்ரீனிவாசலு
அட்டை ஓவியம்: பிரேம் டாவின்சி  விகடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக