வியாழன், 30 மார்ச், 2017

பஜகவினரே எதிர்பாராத காவி உத்தரபிரதேசம்?


PTI3_11_2017_000139B
சவுக்கு : உத்திரப்பிரதேச தேர்தல் முடிவுகள், பிஜேபியினரையே வியப்பில் ஆழ்த்தியிருக்கும்.   இது போன்ற பிரம்மாண்டமான வெற்றியை அவர்கள் எதிர்ப்பார்த்து இருக்க மாட்டார்கள்.  இந்துக்கள் பெரும்பாலாக இருக்கும் ஒரு நாட்டில், சாதி வேறுபாடுகளை கடந்து, இந்து என்ற ஒரு உணர்வை தட்டி எழுப்பி அவர்களை ஒரு நூலில் இணைக்கும் பணியில் பிஜேபி வெற்றி பெற்றிருப்பதாகவே இந்தத் தேர்தல் முடிவுகளை பார்க்க முடியும்.
இந்திரா மற்றும் ராஜீவ் மறைவுக்குப் பிறகு, சாதி மதம், மொழி பாகுபாடுகளைக் கடந்து அனைத்து பிரிவினருக்கும் ஏற்புடைய ஒரு தலைவர் இந்தியாவில் உருவாகவில்லை.   இதன் காரணமாகவே 1996க்கு பிறகு எந்த ஒரு கட்சிக்கும் மத்தியில் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறி நிலை நீடித்து வந்தது. 
  2014 பொதுத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை பெற்று, மத்தியில் ஆட்சியை பிடித்ததன் மூலம், அந்த வெற்றிடத்தை மோடி நிறைவு செய்திருக்கிறார்.     இத்தகைய இந்த மோடியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தது ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் 2004 முதல் 2014 வரையிலான ஆட்சிக் காலமே என்றால் அது மிகையாகாது.   ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் போன்ற மக்கள் நலத் திட்டங்களை காங்கிரஸ் அரசு அறிமுகப்படுத்தி இருந்தாலும், மக்கள் சகித்துக் கொள்ள முடியாத அளவுக்கு ஊழல். அந்த ஊழலை மூடி மறைக்கும் அயோக்கியத்தனம் போன்றவை பெரிய அளவில் அதிருப்தியை உண்டு செய்தது.    இது நகர்ப்புறங்களில் காங்கிரஸ் அரசு மீது வெறுப்பை ஏற்படுத்தியிருந்தால், காங்கிரஸின்  கூட்டணிக் கட்சிகள் மாநிலங்களில் செய்த அராஜகங்களும், காங்கிரஸின் மீது மேலும் வெறுப்பை அதிகரித்தது.
கடந்த அறுபது ஆண்டுகளாக காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட இதர கட்சிகள் நடத்தி வந்த அரசியலின் தன்மையே வேறு.  சிறுபான்மையினர் பாதுகாப்பு. தலித்துகள் பாதுகாப்பு.   சிறுபான்மையினருக்கு தொடர்ந்து ஆதரவு என்று சுதந்திர போராட்ட காலத்தில் கடைபிடிக்கப்பட்ட பல்வேறு கொள்கைகளை பின்பற்றி வந்துள்ளனர்.    சிறுபான்மையினர் ஆதரவு, குறிப்பாக இஸ்லாமியர் ஆதரவு என்பது பெரும்பாலான இளைஞர்களுக்கு வேப்பங்காயாக கசக்கிறது.   சிறுபான்மையினர் இந்தியாவில் இருந்து விட்டுப் போகட்டும்.  ஆனால் அவர்கள் நாங்கள் சொல்லும்படி, சொல்லும் வகையில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை பெரும்பாலான இளைஞர்களிடம் காண முடிகிறது.    நன்கு படித்து, பெரும் நிறுவனங்களில் வேலை பார்க்கும் இளைஞர்கள் கூட வெளிப்படையாக இஸ்லாமிய வெறுப்பை கக்குகிறார்கள்.   இது வியப்பானதொன்றும் இல்லை.   காந்தி உயிரோடு இருந்தபோது, நாடு முழுக்க அவருக்கு ஏகோபித்த ஆதரவு இருந்தபோதும் கூட, இந்து அடிப்படைவாதிகள் காந்தி கொல்லப்பட வேண்டியவர் என்றுதானே கருதினார்கள் ?
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இன்று வாக்களிக்க தகுதி பெற்றவர்களில் 50 சதவிகிதத்துக்கும் மேலானவர்கள் 18 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள்.    இந்த பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு சுதந்திரப் போராட்டத்தின் விழுமியங்களோ, காந்தியின் இஸ்லாமிய ஆதரவு நிலைபாடோ, இந்தியா ஒரு பன்முகத்தன்மை கொண்ட நாடு என்பதோ புரியவில்லை.  அது குறித்து விவாதிக்கவும் அவர்கள் தயாராக இல்லை.   இந்த பிரிவைச் சேர்ந்தவர்கள் இஸ்லாமியர்களுக்கு தேவைக்கு அதிகமான சலுகை அளிக்கப்படுகிறது என்று உறுதியாக நம்புகிறார்கள்.    இந்தியா இந்துக்களின் நாடு மற்றவர்கள் அனைவரும் இரண்டாம்தர குடிமக்கள் என்பதை வெளிப்படையாகவே பேசுகிறார்கள்.
இந்திய வரலாற்று ஆய்வு நிறுவனம், மத்திய பாடநூல் நிறுவனம், ஐஐடிக்கள், சென்சார் போர்டுகள், திரைப்பட பயிற்சி நிறுவனங்கள் பல்கலைக்கழகங்கள், போன்றவற்றில் இருந்து வந்த கல்வியாளர்கள் மற்றும் நடுநிலையாளர்களை நீக்கி விட்டு, ஆர்எஸ்எஸ் மற்றும் காவி பின்புலத்தோடு உள்ள, தகுதியற்றவர்களை நியமிப்பதைக் கூட இத்தகைய இளைஞர்கள் வரவேற்கிறார்கள்.  அதற்கு ஆதரவாக விவாதம் செய்கிறார்கள். ஆண்டாண்டு காலமாக வளர்த்தெடுக்கப்பட்ட செழுமையான கல்வி நிலையங்கள் காவிமயப்படுத்தப்படுவதை இந்த இளைஞர்கள் முழு மனதோடு கொண்டாடுகிறார்கள்.  இதில் என்ன தவறு என்று வாதிடுகிறார்கள். இந்தியாவில் கொண்டாடப்பட்ட எழுத்தாளர்களும், கலைஞர்களும் மை வீசி தாக்கப்படுவதையும், ஏளனம் செய்யப்படுவதையும், ஏன் சில இடங்களில் கொலை கூட செய்யப்படுவதையும் இந்த இளைஞர்கள் ‘இது நடந்துதான் தீரும்’ என்ற மனநிலையோடுதான் பார்க்கிறார்கள்.
மாட்டுக்கறி உண்டதற்காக ஒரு மனித உயிர் பறிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்க மறுக்கிறார்கள்.   மாடு தெய்வம்.  அதை உண்ணும் மனிதனை கொன்றால் என்ன தவறு என்று கூறுகிறார்கள். சாதீய ஒடுக்குமுறையால், ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் ஒரு இளைஞன் தற்கொலை செய்து கொண்டால் அவன் தலித்தே அல்ல என்று உறுதிபட உரைக்கிறார்கள்.
இதுதான் இன்றைய இளைஞர்களின் மனநிலை.    இத்தகைய மனநிலை இந்தியா முழுக்க பரவிக் கிடப்பதைக் காண முடிகிறது.  திராவிட அரசியலின் தாக்கம் பரவியுள்ள தமிழகத்தில் கூட இத்தகைய குரல்களை காண முடிகிறது. இத்தனை ஆண்டுகாலமாக மனதில் அடக்கி வைக்கப்பட்டிருந்த இந்து என்ற பெருமைக்கு உருவகம் கொடுக்க வந்த மாமனிதராக மோடி இத்தகைய இளைஞர்களால் பார்க்கப்படுகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்னால் உத்தரப் பிரதேசத்தின் எடாவா மாவட்டத்துக்கு சென்று தங்கியிருக்க நேரிட்டது.  அப்போது அந்த மாவட்டம் முழுக்க இந்துக்களும், இஸ்லாமியர்களும் நேரடி எதிரிகளாகவே இருந்ததை காண முடிந்தது.  ஒவ்வொரு இந்து பண்டிகையின்போதும், இஸ்லாமியர்கள் பிரச்சினை செய்வார்களோ என்ற பதற்றமும், ஒவ்வொரு இஸ்லாமிய பண்டிகையின்போதும் இந்துக்கள் பிரச்சினைகள் செய்வார்களோ என்ற அச்சத்தையும் காண முடிந்தது.  ஒவ்வொரு பண்டிகையின்போதும், மாவட்ட நிர்வாகம் இரு தரப்பையும் அழைத்து பேசி பிரச்சினை இல்லாமல் விழாவை முடிக்க பெரும்பாடு பட்டதை காண முடிந்தது.
இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இடையே உள்ள வெறுப்புணர்வை கூர்மைப்படுத்தும் பணிகளைத்தான் பிஜேபி மற்றும் சங் பரிவார அமைப்புகள் 2014ல் பிஜேபி ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் செய்து வருகின்றன.    இந்து மற்றும் இஸ்லாமியர்களிடையே காதல் திருமணம் நடந்தால் அதை எப்படி கலவரமாக்குவது என்பதில் இரு தரப்புகளும் முனைந்து பணியாற்றி வருகின்றன.  இதன் ஒரு பகுதிதான் கர்வாப்சி, கவ்ரக்சக் போன்ற திட்டங்கள்.     நாடெங்கும், பசுவின் பெயராலும், கர்வாப்சி என்ற பெயராலும் நடக்கும் கலவரங்கள் அனைத்தையும் மோடி அமைதியாக பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சிவ சேனாவைச் சேர்ந்த ஒரு தலைவர், இஸ்லாமியர்களுக்கு வாக்குரிமையை ரத்து செய்ய வேண்டும் என்றார்.  பிஜேபி எம்பி சாக்சி மகராஜ் ஒவ்வொரு இந்து பெண்ணும் நான்கு குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.   காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே பெரும் போராளி என்றார்.  பிஜேபி அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி வெளிப்படையாகவே “ராம்ஸாதே” (ராமனின் பிள்ளைகள்), மற்றும் “ஆராம்ஸாதே” (தவறான வழியில் பிறந்த பிள்ளைகள்).  இத்தகைய அருவருப்பான வார்த்தைகளுக்கு பிறகும் இவர் மோடியின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்து வருகிறார்.   மற்றொரு மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், ராஜீவ் காந்தி ஒரு நைஜீரிய பெண்ணை மணந்திருந்தால், அவருக்கு வெள்ளை தோல் இல்லாமல் இருந்திருந்தால் காங்கிரஸார் அந்தப் பெண்ணை தலைவியாக ஏற்றுக் கொண்டிருப்பார்களா என்றார்.  இவரும் இன்னும் அமைச்சராக இருக்கிறார்.   இது போன்ற அருவருப்பான பேச்சுக்களை மோடி அமைதியாக ரசித்துக் கொண்டிருக்கிறார் என்பதை மறந்து விடக்கூடாது.
இது போன்ற பேச்சுக்கள், இந்துக்கள் இடையே பிஜேபிக்கு செல்வாக்கை வளர்க்கும் என்பது மோடிக்கு நன்றாகவே தெரியும்.   மதத்தின் அடிப்படையில் பிரச்சாரம் செய்யக்கூடாது என்ற சட்டத்தையெல்லாம் மதிப்பவரா மோடி ? வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டருக்குள், தேர்தல் சின்னத்தை காண்பிக்கக் கூடாது என்று தெளிவான விதிகள் இருந்தும், தேர்தல் நடந்த தினத்தன்று, வாக்களித்து விட்டு தாமரைச் சின்னத்தை வெளிப்படையாக காண்பித்து செல்பி எடுத்துக் கொண்ட நபர்தான் மோடி என்பதை மறந்து விடக்கூடாது.   வெற்றி என்பது எல்லா விதிமீறல்களையும் மறந்து போகச் செய்யும் என்பதை மோடி அறியாதவர் அல்ல.  ஒரு பெரும் கலவரத்தின் மூலம் இந்தியா முழுக்க அறியப்பட்ட தலைவராக உருவானவர்தான் மோடி என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
2014430102313802734_20
இது போன்ற இஸ்லாமிய வெறுப்பு உணர்வின் ஒரு பகுதியே உத்தரப் பிரதேசத்தின் 403 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட இஸ்லாமியரை நிறுத்தாத பிஜேபியின் தேர்தல் தந்திரம்.  இந்தியாவில் அதிக அளவில் இஸ்லாமியர்கள் இருக்கக் கூடிய ஒரு மாநிலத்தில் ஒரே ஒரு இஸ்லாமியரைக் கூட வேட்பாளராக நிறுத்ததாதன் மூலம், பிஜேபி யாருக்கான கட்சி, யாருடைய கட்சி என்பதை வெளிப்படையாக அறிவித்தார் மோடி.  இதர கட்சிகள் இஸ்லாமியர்களின் வாக்குகளை கவர்வதற்காக ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டிருக்கையில், இஸ்லாமியரின் ஒரு வாக்கு கூட அவசியமில்லை என்பதை மறைமுகமாக அறிவித்தது பிஜேபி.
“ஒரு கிராமத்தில் இஸ்லாமியர்களுக்கான புதைக்குமிடம் உருவாக்கப்பட்டால், இந்துக்களுக்கான இடமும் உருவாக்கப்பட வேண்டும்” என்று உத்தரப் பிரதேசத்தில் பிரச்சாரத்தின்போது பேசினார் மோடி.  இந்துக்கள் புதைக்கவோ, எரிக்கவோ இடமில்லாமல் பிணங்களை வீதியிலா வீசிக்    கொண்டிருக்கிறார்கள் ?   இது மோடிக்கு தெரியாதா ?  நன்றாகத் தெரியும்.   ஆனால் இது பெரும்பான்மை இந்துக்கள் மனதில் என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை மோடி நன்கு உணர்ந்திருந்தார்.   சமாஜ்வாடி கட்சி, காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை போட்டி போட்டுக் கொண்டு இஸ்லாமியர்களை தாஜா செய்து கொண்டிருந்தபோது, இந்துக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் ஒரே கட்சியாக பிஜேபியை மக்கள் பார்த்தார்கள்.  சமாஜ்வாடி கட்சியின் ஆட்சியில் முக்கிய அமைச்சராக இருந்த ஆஸாம் கானின் செல்வாக்கால், இஸ்லாமியர்கள் இந்துக்களின் மீது ஆதிக்கம் செலுத்தியதும் கடந்த ஐந்தாண்டுகளில் உத்தரப் பிரதேசத்தில் நடந்தது.   இவை அனைத்தும் சேர்ந்து இந்துக்களின் பெருமையை காக்கும் ஒரே ஆபத்பாந்தவனாக மோடியை உருவாக்கியது.
கொல்கத்தா நகரம் இந்து இஸ்லாமியர்களிடையே நடைபெற்ற கலவரத்தின் காரணமாக ரத்த வெள்ளத்தில் மிதந்தபோது, அங்கே சென்று உண்ணாவிரதம் இருந்தார் காந்தி.    இஸ்லாமியர்களின் மீது எத்தனையோ வெறுப்புகள் இருந்தாலும் காந்தியின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு கலவரம் நின்றது.   ஆனால் அத்தகைய ஒரு சகிப்புத்தன்மை இன்றைய இந்துக்களிடம் மறைந்து போனது ஏன் என்பதையும் நாம் ஆராய வேண்டும்.
30 ஆண்டுகளுக்கு முன்னால், இந்தியாவில் தீவிரவாதம் கிடையாது.   குறிப்பாக பொதுமக்கள் கூடும் இடங்களில் குண்டு வைக்கும் வழக்கம் கிடையாது.    ரயில்வே நிலையங்கள், பொது இடங்களில் நம்மை சோதனையிடும் வழக்கம் கிடையாது.    அச்சமின்றி, எங்கே வேண்டுமானாலும் சென்று வரலாம் என்ற நிலையே இருந்தது.
ஆனால் 1992 பாப்ரி மசூதி இடிப்புக்கு பிறகு, மும்பை பங்குச் சந்தை குண்டு வெடிப்புக்கு பிறகு, இந்தியா பல தீவிரவாத குண்டு வெடிப்புச் சம்பவங்களை சந்தித்து வந்துள்ளது.     இன்று 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் அனைவருக்கும் இந்த தீவிரவாத சம்பவங்கள் மட்டுமே கண் முன்னால் நிற்கின்றன.    இந்த தீவிரவாதச்  சம்பவங்களில் பெரும்பாலனவற்றில் சம்பந்தப் பட்டவர்கள் இஸ்லாமியர்கள் என்பது முகத்தில் அறையும் உண்மை.   பாப்ரி மசூதி இடிப்பு, அதைத் தொடர்ந்து நடந்த மும்பை கலவரங்கள் மற்றும் குஜராத் கலவரங்கள் ஆகியவை, இஸ்லாமிய இளைஞர்களை தீவிரவாதத்தின் பக்கம் திரும்ப வைத்தன.
இந்த குண்டு வெடிப்புச் சம்பவங்கள் அதைத் தொடர்ந்து இந்தியா முழுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள், பொது இடங்களுக்கு செல்லுகையில் நடத்தப்படும் முழுமையான சோதனை, டிசம்பர் 6 போன்ற தினங்களில் ஆண்டுதோறும் நடத்தப்படும் கடுமையான சோதனை, தீபாவளி, ஹோலி, குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் ஆகிய நாட்களில் நாடெங்கும் நடத்தப்படும் பல்வேறு பதற்றம் அளிக்கக் கூடிய சோதனைகள் அனைத்தும், நாம் பாதுகாப்பற்ற சூழலில் இருக்கிறோம் என்றே பெரும்பாலான இந்துக்களை உணர வைத்துள்ளது.   இத்தகைய பாதுகாப்பற்ற, பதற்றமான சூழலுக்கு காரணமே இஸ்லாமியர்கள்தான் என்று பெரும்பான்மையோரை கருத வைக்கும் வகையில், பிஜேபி மற்றும் சங் பரிவார அமைப்புகள் தொடர்ந்து கருத்தூட்டங்களை செய்து வருகின்றன. அது மக்களிடம் நன்றாகவே எடுபடுகிறது.
இத்தகைய பாதுகாப்பற்ற உணர்வுகளையெல்லாம் அகற்றக் கூடிய ஒரே தலைவன் நான்தான் என்று மோடி செய்யும் பிரச்சாரம் பெரும்பாலான மக்களை சென்றடைந்திருக்கிறது.     இந்தியாவின் சர்வ ரோகங்களையும் தீர்க்கும் ஒரே நிவாரணி, மோடி என்ற பிரச்சாரம் வலுவாக எடுபட்டிருக்கிறது.  பாப்ரி மசூதி இடிப்புக்கு பிறகு நடந்த 1996 தேர்தலில் கூட பிஜேபி 161 இடங்களை மட்டுமே பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.    ஆனால் 1996க்கு பிறகு புதிதாக வாக்களிக்க தகுதியான இள வயதினர், மற்றும் அதன் பிறகு நடந்த பல்வேறு தீவிரவாத சம்பவங்கள் ஆகியவை ஒரு ஆதர்ஷ புருஷனுக்கான தேவையை உருவாக்கியது.    அப்படியொரு ஆபத்பந்தவனாக மோடி உருவானார்.
இந்தியாவில் நடக்கும் தீவிரவாத சம்பவங்கள் மட்டுமல்லாமல், உலகெங்கும் நடக்கும் சம்பவங்களையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.   உலக செய்திகள் அனைத்தையும் கையில் உள்ள ஸ்மார்ட் போன்கள் மூலமாக வீடியோவோடு அறிந்து கொள்ள வாய்ப்பு உள்ள இளவயதினர், ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தினர் வெளியிடும் கொடூரமான வீடியோக்களை தொடர்ந்து பார்த்து வருகின்றனர்.     உலகின் பல மூலைகளில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் நடத்தும் தீவிரவாத சம்பவங்களை அவர்களால் காண முடிகிறது. கொடூரமாக கழுத்தை அறுக்கும் வீடியோக்கள் வெளியாகின்றன. இப்படிப்பட்ட தீவிரவாத சம்பவங்களை அரங்கேற்றும் மனித இனத்துக்கே விரோதிகளான ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினருக்கும் ஆதரவு அளிக்கும் சில இஸ்லாமியர்கள் இந்தியாவில் இருப்பதை பார்க்கும் ஒரு சாதாரண இந்து இளைஞனின் மனதில் என்ன விதமான உணர்வு ஏற்படும் ?  ஓவைசி போன்ற இஸ்லாமிய தலைவர்கள், இந்த வெறுப்புணர்வை மேலும் வளர்த்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தின் டீசர்ட் அணிந்து அவர்களுக்கு நன்றி சொன்ன இளைஞர்கள்
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தின் டீசர்ட் அணிந்து அவர்களுக்கு நன்றி சொன்ன இளைஞர்கள்
மேலும் இன்று பிஜேபிக்கும், மோடிக்கும் மாற்றாக மக்கள் முன்பாக இருக்கும் அடுத்த ஆப்ஷன் என்ன ?    நிச்சயமாக ராகுல் காந்தியோ காங்கிரஸோ இல்லை.   இடது சாரி இயக்கங்கள் தங்கள் அடையாளத்தை இழந்து மிக பலவீனமான நிலையில் இருக்கின்றன.  இடது சாரி தத்துவங்கள் இன்றைய இளைஞர்களிடம் எந்த விதமான தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை.   ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் போன்ற ஒரு சில கல்வி நிலையங்கள் தவிர்த்து, இன்று இடது சாரி இயக்கங்கள், தொலைக்காட்சி ஸ்டுடியோக்கள் மற்றும் சமூக வலைத்தளங்களை தாண்டி தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை.   எழுபதுகளிலும், எண்பதுகளிலும் இருந்த இடதுசாரிகளின் தாக்கம் இன்று சமூகத்தின் எந்த பிரிவிலும் இல்லை.   இந்துத்துவா தத்துவத்துக்கு மாற்றாக இன்று வலுவாக எடுத்து வைக்க எந்த கட்சியிடமும் எந்த விதமான தர்க்கமும், விழுமியமும் இல்லை.   இடது சாரிகளுக்கும், இதர கட்சிகளுக்கும் மாற்றாக உருவெடுத்துள்ளார் என்று நம்பிக்கை அளித்த அரவிந்த் கேஜ்ரிவால், இதர தலைவர்களுக்கும் அவருக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்பதை நிரூபித்துள்ளார்.   இப்படி மாற்று அரசியல்கள் அனைத்தும் பொய்த்துப் போயுள்ளன. எந்த விதமான மாற்று அரசியலும் இல்லை.   இப்படிப்பட்ட சூழலில், பாதுகாப்பற்று உணரும் ஒரு சாதாரண இந்தியனால் யாரைத் தேர்ந்தெடுக்க முடியும் ?
இதே போன்றதொரு அச்சமூட்டும் சூழலில், இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை உமிழ்ந்தே அமெரிக்காவில் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பதையும் மறந்து விடக்கூடாது.
பிஜேபியின் பொருளாதார கொள்கைகள் சோசலிசக் கொள்கைகள் அல்ல.  காங்கிரஸின் பொருளாதார கொள்கைகளில் இருந்து எந்த விதத்திலும் மாறுபட்டது பிஜேபியின் கொள்கைகள் அல்ல.   பிஜேபி அரசு வந்த பிறகு இலங்கையுடனான வெளியுறவுக் கொள்கைகளில் மாற்றம் வந்துள்ளதா என்ன ?  இன்னமும் மீனவர்கள் கொல்லப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.    கூடங்குளம் அணு உலை தொடர்பான கொள்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்ன ?   ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் எரிவாயுக்கள் எடுப்பதில்லையா என்ன ? நியூட்ரினோ திட்டம் கைவிடப்பட்டுள்ளதா என்ன ?    எதுவும் இல்லை.  ஆனால் மோடி அமோக பெரும்பான்மையுடன் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான காரணங்களே மேலே கூறியவை.
அடுத்த பத்தாண்டுகளுக்கு பிஜேபியை முறியடிக்கும் வகையிலான மாற்று சக்தி உருவாகுவதற்கான வாய்பே இல்லை.    ஏகபோகம்தான்.    இதே போன்ற ஏகபோகம் அறுபதுகளில் இருந்தது.   இந்திராதான் எல்லாம்.    அஸ்ஸாமைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் தேவகாந்தா பரூவா, “இந்திராதான் இந்தியா, இந்தியாதான் இந்திரா” என்றார்.   அதை இந்திரா உண்மை என்று நம்பினார்.  அதனால்தான் ஆட்சி கைவிட்டுப் போகும் ஒரு சூழல் ஏற்பட்டபோது நெருக்கடி நிலையை அமல்படுத்தினார்.
நேரு, இந்திரா காந்தியைப் போன்றே ஒரு பிரம்மாண்டமான தலைவராக உருவெடுக்க வேண்டுமென்ற கனவு மோடிக்கு உண்டு.   வரலாற்றில் மிகப்பெரிய தலைவராக பதிவு செய்யப்பட வேண்டும் என்ற கனவு மோடிக்கு உண்டு.  இதற்காகத்தான் உலகத்தின் ஒரு நாடு விடாமல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அத்தகைய தலைவராக அவர் வரலாற்றில் பதிவு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன.
இன்று இந்தியாவின் ஒரே தேசிய கட்சி என்ற நிலையை பிஜேபி அடைந்துள்ளது.   வரும் 2019 பொதுத் தேர்தலிலும் இதே பெரும்பான்மையோடு பிஜேபி வெல்லும் என்பதில் சந்தேகம் இல்லை.    போட்டியே இல்லாத நிலை இன்று உருவாகியுள்ளது.   மோடியின் தலைமைக்கு எதிராக குரல் கொடுக்க பிஜேபியில் ஒருவரும் கிளம்பும் சூழல் எழவே போவதில்லை.   இப்படிப்பட்ட ஒரு சூழலில், மோடி ஒரு ஸ்டேட்ஸ்மேனாக, பெருந்தன்மையாக நடந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். குறிப்பாக இஸ்லாமியர்கள் பாதுகாப்பாக உணரும் வகையிலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.   403 இடங்களில் ஒரு இடத்துக்கு கூட இஸ்லாமிய வேட்பாளரை நிறுத்தாத அவரின் நடவடிக்கையின் மூலமாக இஸ்லாமியர்களை மேலும் அந்நியப்படுத்தியிருக்கிறார் மோடி.
அரசியல் அமைப்பு சட்டத்தில் குறிப்பிட்டுள்ள “அனைவருக்கும் சமமான வாய்ப்பு” என்பதை மோடி உறுதி செய்ய வேண்டும்.   தலித்துகளுக்கும், இஸ்லாமியர்களுக்கும் சமமான வாய்ப்பையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும்.    கல்வி நிலையங்கள் மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள் காவிமயப்படுத்துவதை தடுக்க வேண்டும்.   இப்படி இந்தியாவின் பன்முகத்தன்மையை புரிந்து கொண்டு இந்துக்களுக்கான தலைவராக இல்லாமல் அனைத்துத் தரப்புக்கான தலைவராக மோடி உருவாக முயற்சி எடுத்தால் அவர் வரலாற்றில் ஆகப்பெரிய தலைவராக பதிவு செய்யப்படுவார்.
இல்லையென்றால், இந்தியாவை மதரீதியாக பிளவுபடுத்தி, பாகிஸ்தான், ஈரான், சவுதி அரேபியா போன்ற இஸ்லாமிய நாடுகளைப் போல, இந்துக்களுக்கான காவி இந்தியாவை உருவாக்கினார் என்றே பதிவு செய்யப்படுவார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக