வியாழன், 30 மார்ச், 2017

உபியில் மோடியின் வெற்றி கூறுவது என்ன?

aa-Cover-es6sbqcjc447k80jm3oai6o030-20170311095639.Mediசவுக்கு : உத்திரபிரதேசத்தில் பாரதீய ஜனதா ஈட்டியுள்ள இமாலய வெற்றியைக் கண்டு எல்லோருமே பிரமிக்கின்றனர். 2019ல் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல்களில் அக் கட்சி மீண்டும் வெற்றி பெறும், மோடி ஆட்சி தொடரும் என்று பொதுவாக ஊகிக்கப்படுகிறது.
அதெல்லாம் சரி, அதன் பிறகு? ராமர் கோயில் கட்டுவார்களா? பொது சிவில் சட்டம் கொண்டு வருவார்களா? கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் ஆர் எஸ் எஸ் ஷாகாக்களா? பாடத்திட்டத்தில் பாரதூர மாற்றங்கள் ஏற்படுமா? பாகிஸ்தான் மீது அணுகுண்டு வீசுவார்களா? ட்ரம்புடன் சேர்ந்துகொண்டு முஸ்லீம்கள் இந்த நாட்டுப் பிரஜைகளே இல்லை என அறிவிப்பார்களா? இதற்கெல்லாம் விடையில்லை.

ஊடகங்களில் இன்னமும் இக்கேள்விகள் எழுப்பப்படவில்லை. இடதுசாரிகளைத் தவிர வேறு எவரும் இவற்றைப் பற்றி கவலைப்படுவதாகவும் தெரியவில்லை
உ.பி வெற்றி இந்துத்துவாவிற்குக் கிடைத்த அங்கீகாரமல்ல. மாறாக மோடியின் ஆளுமைக்கு அம்மாநில மக்கள் அளித்துள்ள பரிசு. மக்கள் அவரை முழுமையாக நம்புகின்றனர்.
மேல் சாதியினரின் கட்சியல்லவா பாஜக என்றால், இல்லையே, “மோடி சாதிகளுக்கு அப்பாற்பட்டவர்…..அகிலேஷ்யாதவ் நல்ல பையன் தான்…ஆனால் சமாஜ்வாடி ஆட்சியில் யாதவர்கள் மட்டுமே பயன் பெற்றனர்..மோடியோ தான் எல்லா சாதிகளுக்கும் பொதுவானவர் என்கிறார்…பாருங்க தலித், தலித்னு மாயாவதி கூவுறாங்க…ஆனால் ஜாதவ் இனத்தவருக்கு மட்டுமே அவர் கட்சியில் முக்கியத்துவம்…இப்போது கூட முஸ்லீம்களை சேர்த்துக்கொள்கிறார்…அவர்களுக்கு டிக்கெட் வாரி வழங்குகிறார், மற்ற தலித் பிரிவினரைக் கண்டுகொள்ளவே இல்லை…” எனக்கூறுகின்றனர் மக்கள்.
500, ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்ற முடிவினால் கடுமையாக பாதிக்கப்பட்ட வணிகர்கள் கூட, அதனாலென்ன, கறுப்புப் பணத்தை வெளியே கொண்டுவரவேண்டுமய்யா, மோடி சரியாகத்தான் செய்வார் என்கின்றனர்.
முஸ்லீம்கள் மட்டுமே பாஜகவை விட்டு தள்ளியிருந்திருக்கின்றனர். இந்திய மக்கட் தொகையில் அவர்கள் 14 சதம் என்றால் உ.பி.யில் அவர்கள் 19 சதம். 73 தொகுதிகளில் 30 சதமும் இன்னும் 70 வேறு தொகுதிகளில் 20 சதத்திற்கு அதிகமாகவும் இருக்கின்றனர். ஆனாலும் உங்கள் வாக்குக்கள் எங்களுக்குத் தேவையில்லை எனக் கூறும் வகையில் பாஜக ஒரு முஸ்லீமைக்கூட நிறுத்தவில்லை.
40க்கும் மேற்பட்ட முஸ்லீம்களை காவு வாங்கிய, 50,000க்கும் மேற்பட்டோரை இடம் பெயரச்செய்த 2013 முசாஃபர்பூர் கலவரங்களுக்குப் பொறுப்பானவர்களாகக் கருதப்பட்டவர்களையெல்லாம் பாஜக வேட்பாளர்களாக நிறுத்தியது.
பிரச்சாரத்தின்போது கப்ரிஸ்தானிருந்தால் சுடுகாடும் வேண்டும் என்று மோடி பேசினார். அதாவது ஏதோ இந்துக்களுக்கு மயானபூமியே இல்லாததுபோன்ற ஒரு பிம்பத்தை உருவாக்க முயன்றார். மின் இணைப்பில் முஸ்லீம்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டினார். அமித் ஷா எதிர்க்கட்சிகளை கசாப் என வர்ணித்தார்.
இத்தனைக்குப் பிறகும் பாஜகவிற்கு அமோக வெற்றி, முஸ்லீம்கள் 30 சதத்திற்கும் மேலாக இருக்கும் 42ல் அக் கட்சி 31ஐக் கைப்பற்றியிருக்கிறது.. 97 முஸ்லீம் வேட்பாளர்களை நிறுத்திய பகுஜன் சமாஜ் படுதோல்வி அடைந்திருக்கிறது.
முஸ்லீம்களின் வாக்குக்கள் பிரிந்தது, முத்தலாக் பிரச்சினையினால் பாஜகவிற்கு ஆதரவாக முஸ்லீம் பெண்டிர் திரும்பியது எனப் பல காரணங்கள் கூறுகின்றனர். எதுவாக இருந்தாலும் முற்று முழுதாக முஸ்லீம்களை நிராகரித்தும் வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறது பாஜக என்பதைத்தான் நாம் நினைவில் கொள்ளவேண்டும். இந்துத்துவ வெறியர்கள் பலர் வென்றிருக்கும் நிலையில் அவர்களில் சிலரேனும் அமைச்சர்களாகக் கூடும்.
ஆனாலும் அடுத்த இரண்டாண்டுகளில் மீண்டும் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடக்கவிருப்பதால் உடனடியாக ராமருக்கு அயோத்தியில் ஆலயம் எழுப்பும் பணியில் இறங்கமாட்டார்கள். அதே நேரம் உ.பியின் பாஜக அரசு பல்வேறு முஸ்லீம் விரோத அணுகுமுறைகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் கடைபிடிக்கப்போவது உறுதி.
இதை மோடி தலைமையில் குஜராத்தில் பார்க்கமுடிந்தது. பாஜக ஆளும் மற்ற மாநிலங்களிலும் அந்தந்த பகுதி நிலவரத்தைப் பொறுத்து முஸ்லீம்கள் புறக்கணிக்கப்படுகின்றனர், ஒடுக்கப்படுகின்றனர். அத்தகைய போக்கு உத்திரபிரதேசத்தில் தீவிரமாகும்.
மோடியைக் குறித்த பிரமை மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. வேறொன்றுமில்லை முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நாளொரு மேனியும் பொழுதொரு ஊழலுமாகவே காலத்தை செலவழித்துவிட்ட நிலையில், தன்னளவில் எவ்வித புகாருக்கும் ஆளாகாத மோடி மாமனிதராகத் தென்படுகிறார். அவரது மேடைப் பேச்சு திறனால் மக்களைக் கவரமுடிகிறது.
உங்கள் பிள்ளைகளில் யார் நல்லவனென்றால் கூரையில் கொள்ளிவைப்பவன் தான் என தந்தை சொல்லும் கதைதான். நொந்து போய் கைத்துப் போய், இவர்களுக்கு மோடி எவ்வளவோ மேல் என்று கருதுகின்றனர் மக்கள்.
அவரும் 2014ல் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படவிருக்கிறார் என்றானதிலிருந்தே, தான் ரொம்ப யோக்கியர் போலவும் எல்லா பகுதியினரையும் அரவணைத்துச் செல்பவர் போலவும் நாடகமாடிவருகிறார். உ.பி வெற்றிக்குப் பிறகு கூட எவரும் இது இந்துத்துவத்திற்குக் கிடைத்த வெற்றி எனச் சொல்லவில்லை. உண்மையும் அதுதானே.
மேலே குறிப்பிடதைப் போன்று முஸ்லீம்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்படவில்லை, வெறியர்கள் ஜாடைமாடையாக அவர்களை சாடினர், இந்து சமுதாயம் ஒன்றுதான், சாதிப் பிரிவினை வேண்டாம், முஸ்லீம்களுக்கெதிராக அணி திரளவேண்டும் என்ற ஒரு பிம்பத்தைக் கட்டியெழுப்பினாலும், பொதுவாக பிரச்சாரம் சமாஜ்வாடி அரசு வெறும் ரௌடிகள் ராஜ்ஜியம், யாதவர்கள் மட்டுமே பயன்பெற்றிருக்கின்றனர் என்ற ரீதியில்தான் அமைந்திருந்தது. யதார்த்தமும் அப்படியே இருந்ததால் எப்படியாவது தங்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட்டுவிடாதா என ஏங்கும் மக்கள் பெருவாரியாக பா ஜ கவிற்கு வாக்களித்திருக்கின்றனர்.
கடந்த இரண்டரை ஆண்டுகளாய் என்ன செய்து கிழித்துவிட்டார் மோடியார்? எங்கே முன்னேற்றம்? எதிலே முன்னேற்றம்? வரும், வரும் கொஞ்ச கால அவகாசம் கொடுங்கள் அவருக்கு என மக்களே வாதிடுவதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன் நான் அலகாபாத்திலுள்ள ஆனந்த பவனுக்கு சென்று அங்கு நிறுவப்பட்டிருக்கும் ஜவஹர்லால் நேரு அருங்காட்சியகத்தைப் பார்த்து மெய் மறந்திருந்தேன். ஆனாலும் மூன்று நான்கு பிரதமர்களை அளித்த மாநிலம், காலங்காலமாக நேரு குடும்பத்திற்கே வாக்களித்து வரும் பகுதிகள் எவ்வளவு பின் தங்கியிருக்கிறது, சாலை, மின்சாரம், மருத்துவமனை போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் எவ்வளவு அவதியுறுகிறார்கள் என்பதை நேரடியாகப் பார்க்கமுடிந்தது.
நேரு தொடங்கி ஒருவருமே தங்கள் தொகுதிகளை வளப்படுத்துவதில் அக்கறை காட்டவில்லை என்று தெரிந்தபோது கோபம் கோபமாய் வந்தது. காங்கிரஸ் கட்சிக்கு பாடம் கற்பிக்கவேண்டும், முதலில் இந்த நேரு குடும்பம் அரசியலிலிருந்து அப்புறப்படுத்தப்படவேண்டும் என்றுதான் நினைத்தேன்.
ஆனால் இந்தியர்களின் நிலை மிகப் பரிதாபகரமானது. இந்தியாவைப் பல நூறாண்டுகளுக்குப் பின்னால் தள்ள நினைக்கும் சனாதிகளின் தலைவன் நூறு கோடி மக்களின் இதய நாயகனாக வரிக்கப்படுகிறான். அவன் பின்னாலிருக்கும் விஷச் சக்திகளைத் தடுத்து நிறுத்துவதற்கு காங்கிரஸ் பக்கம் தான் திரும்பவேண்டியிருக்கிறது.
பாஜக டி என் ஏவில் எப்படி மதவாதம் இருக்கிறதோ அதே போல சீரழிந்த நிலையிலும், காங்கிரசின் அடிப்படை நல்லிணக்கக் கூறுகளை நம்மால் காணமுடியும். அவர்கள் முஸ்லீம் எதிர்ப்பு போக்கிற்கு பலியாகலாம்தான், மென்று விழுங்கலாம்தான், ஆயினும் அவர்கள் நேரடியாக முஸ்லீம் விரோத நடவடிக்கைகளில் இறங்கமாட்டார்கள்.
எனவேயே காங்கிரஸ் மேலும் வலுவிழக்கக்கூடாது, தவிர நாம் விரும்புகிறோமோ இல்லையோ, அக்கட்சி மேலும் சிதறுண்டு போகாமல் நேரு குடும்பம்தான் இருப்பதை காக்கமுடியும்.
நண்பர் ஒருவர் குறிப்பிட்டதைப் போன்று பாஜக ஆட்சியிலும் சரி காங்கிரஸ் ஆட்சியிலும் சரி அடித்தட்டு மக்கள் வாழ்வு மேம்பட்டுவிடாது, ஊழலும், வெற்று வாக்குறுதிகளுமே மலிந்து நிற்கும்.
ஆனால் காங்கிரஸ் வெறுப்பரசியலை ஊக்குவிக்காது. பாஜகவோ கண்ணில்படும் சிறுபான்மையினரை, இடதுசாரியினரை வெட்டித்தள்ளவேண்டும், இந்து மேலாதிக்கம் அவசியம் என்ற சிந்தனையை பலமுனைகளிலும் வளர்க்கும். அது நம்மை எதிர்நோக்கும் ஆகப் பெரிய அபாயம்.
ட்ரம்ப் வெற்றி எப்படி மக்கள் தங்கள் நலனுக்கெதிராக வாக்களிக்க முன்வரமுடியும் என்பதை எடுத்துக்காட்டுவதாக கருதப்படுகிறது. நம் மோடி இன்னமும் ஒரேயடியாக அடாவடிப்போக்கில் இறங்காமலிருப்பதன் காரணம் அவர் நல்லவரென்பதால் அல்ல, மாறாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைக் குப்பையில் போட்டு, சிறுபான்மையினரை வேட்டையாடுவதென்பது அவ்வளவு எளிதல்ல என்பதை அவர் நன்கு உணர்ந்திருக்கிறார் என்பதால்தான்.
ஆனால் மெல்ல மெல்ல தங்கள் சுயரூபத்தை பரிவாரத்தினர் காட்டுவர். தாழ்ந்து கிடந்த ஜெர்மனியை வளர்ச்சிப் பாதையில் செலுத்திவிடுவார் என்று நம்பித்தானே மக்கள் ஹிட்லருக்கு பேராதரவு தெரிவித்தனர். ஆனால் வந்தவரை லாபம்  என அவரால் இருக்க முடிந்ததா?
மோடிக்கு ஒன்றும் பெரிய உள்நோக்கமிருக்க முடியாது, பதவி ஆசையிருக்கலாம், கூட இருப்பவர்கள் கொள்ளையடிக்கலாம், ஆனால் பெரிதாக நாசமேதும் செய்துவிடமுடியாது அவரே 2002க்குப் பிறகு திருந்திதானேயிருக்கிறார் என தங்களை ஏமாற்றிக்கொள்ளும் நடுத்தரவர்க்கத்தினருக்கு ஒரு வார்த்தை. காங்கிரஸ், மற்ற கட்சிகள் அனைத்துமே கொள்ளையர் கூடாரமென்று வைத்துக்கொள்வோம்.  அவர்கள் ஆட்சிக்கு வரவிரும்புவது தங்களை வளப்படுத்திக்கொள்ள, மக்கள் நலனில் அக்கறை ஏதுமில்லை என்பதும் சரியே.
ஆனால் அதைத்தாண்டி, எந்த ஒரு சாதி/மத மேலாதிக்கத்திற்காகவும் அரசியலுக்கு வருபவர்களல்ல அவர்கள். இந்த சனாதனிக்கூட்டம் ஆட்சிக்கு வருவதோ இந்து மேலாதிக்கத்தை நிறுவ மட்டுமே. தங்கள் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள, எந்த கொலை பாதகத்திற்கும் அஞ்சமாட்டார்கள்.
இதிலிருந்து எப்படி மீளப்போகிறோம் என்று தெளிவாகச் சொல்லமுடியவில்லை. கையறுநிலைதான். வெளிப்படையாக மதவாதத்தை ஊக்குவிக்காத அனைத்து கட்சிகளும் ஒன்றிணையாதா என பெருமூச்சுவிடலாம், வேறென்ன செய்ய?.
டி.என்.கோபாலன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக