வியாழன், 30 மார்ச், 2017

தலித் தலைவர்கள் மட்டுமல்ல தலித் இளைஞர்கள் கூட தடம் மாறுகிறார்கள்? முத்துகிருஷ்ணன் தற்கொலை .....

j-muthukrishnan-from-jnu
சேலத்தைச் சேர்ந்த தலித் பி எச் டி மாணவன் முத்துகிருஷ்ணனின் தற்கொலை நம் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை அளித்தது. அது தொடர்பான செய்திகளை சமூக வலைதளங்களில் நிறைய பகிர்ந்துகொண்டோம்.
அச் செய்திகளில் ஒரு குறிப்பிட்ட பரிமாணத்தினை பலரும் தவறவிடுவதாக எனக்குத் தோன்றியது. ஆனால் அது குறித்து அந்நேரத்தில் எழுத தயக்கமாயிருந்தது. அது அபசுரமாகக் கருதப்படக்கூடும் என்ற அச்சம்.
தலித் மாணவர்களின் அவலநிலை குறித்து எல்லோரும் விவாதிதுக்கொண்டிருக்கும்போது நான் அதி மேதாவித்தனமாக, ஆனால் சற்றும் இரக்க உணர்வேயின்றி எழுதுகிறேன் என்று குற்றச்சாட்டுக்கள் எழக்கூடும் என்பதால் ஏதும் எழுதவில்லை. நேரம் வரட்டும் என்று நினைத்தேன்.

இப்போது வந்திருக்கிறது. பெற்றோருக்கு எவ்வித சிக்கல்கள் எழுந்தாலும் சரி, பிறந்த வீட்டிலிருந்து புகுந்தவீட்டிற்கு இயன்றவரை அள்ளிச்செல்லவேண்டும் என நினைக்கும், ஹெலிகாப்டரில் மாப்பிள்ளை அழைப்பு என்று கனாக்காணும் நம் பெண்களை கோபிநாத்தின் நீயா நானாவில் நாம் பார்த்தோம்.
அந்நிகழ்ச்சி இக்கால பெண்களின் மதிப்பீடுகள் குறித்து எத்தனை வேதனை அளித்ததோ அது போன்றதொரு மனநிலைதான் முத்துகிருஷ்ணன் தொடர்பில் வெளியான செய்திகளைப் படித்தபோதும் எனக்கு.
தலித்தாக தன் சொந்த ஊரில் பட்ட அவமானங்களையும், பல்கலைக் கழக்த்தில்  அவை தொடரும் அவலத்தையும், ஆங்கிலம் சரி வரப் பேசமுடியாததால் ஏற்படும் சிக்கல்களையும் அவர் முக நூல் பதிவுகளில் குறிப்பிட்டிருக்கிறார். எனவேயே அவரது சோக முடிவு நம்மையெல்லாம் பாதித்தது.
ஆனால் சில அளப்பரி புகைப்படங்கள், அவரது ரஜினி மோகம், அடித்தட்டு வர்க்கத்தை, சாதியைச் சேர்ந்த அந்த மாணவர், சராசரி நடுத்தர வர்க்கத்தினரின் கனவுகளில் மிதந்தது, விமானத்தில் பறக்க தணியாத ஆசை இவையும் தெரியவந்தபோது எவரும் கேள்விகள் எழுப்பவே இல்லை.
அவர் தலித் தொடர்பான நிகழ்ச்சிகளில் எத்தனை ஆர்வம் காட்டினார் என்பதும் சந்தேகமே.
நம் தலித் மாணவர்கள் மத்தியில் எவ்விதமான மதிப்பீடுகள் வளர்கின்றன, அடித்தட்டு வர்க்கம், மிக மோசமாக நடத்தப்படுகின்றனர், இன்னமும் சேரிகளும் தீண்டாமைக் கொடுமையும், இந்நிலையில் மேற்படிப்புக்குச் செல்லும் வாய்ப்பு பெறுகின்றவருக்கு என்ன விதமான சமூக பிரக்ஞை இருக்கவேண்டும்?
பத்து பதினைந்தாண்டுகள் முன் சேலத்தில் படைபடைக்கும் வெயிலில் விசிக மாநாடு. அங்கு சென்றிருந்த இண்டியன் எக்ஸ்பிரஸ் நிருபர் எனக்கு ஃபோன் செய்து புலம்பினார்: என்ன சார் இது அக்கிரமமா இருக்கு…ஆயிரக்கணக்குல தொண்டர்கள் இங்கே கொளுத்துற வெயில்ல…எத்தனை மணி நேரம் காத்திருக்கிறது பாவம்.. அவங்க…தலைவர் திருமா ஜென்னிஸ்ல இருக்காராம் ஏ சி ரூம்ல……தலித் விடுதலை நல்லா வந்திச்சு போங்க…”
இது குறித்து நான் பின்னர் ஒரு மூத்த விசிக நிர்வாகியிடம் கேட்டபோது, அவர் பொரிந்து தள்ளிவிட்டார்: ”ஏன் நாங்களெல்லாம் ஏ சியில தங்கினா தீட்டுப் பட்ருமா…மத்த தலைவர்களெல்லாம் அதை அனுபவிக்கலாம். திருமாவுக்கு கூடாதா…மத்தவங்களெல்லாம் ஊழல் பண்ணா அரசியல்ல சகஜம்ப்பாம்பீங்க…மாயாவதின்னா மட்டும் போட்டு சாத்துவீங்க..மேல் சாதிகளுக்கு மட்டும்தான் அந்த உரிமையா….”
ஒரு வளரும் எழுத்தாளர். திரை உலகிலும்  மெல்ல மெல்ல அங்கீகாரம் கிடைத்துக்கொண்டிருக்கிறது. என் நண்பர் ஒருவர் வீட்டுக்குச் செல்கிறார். ஏதோ பேசிக்கொண்டிருக்கும்போது, அவரிடம் என் நண்பர், ஒங்க லட்சியமென்ன எனக் கேட்கிறார். உடனே பதிலுக்கு அவர்: ”என்ன பெரிய்ய லட்சியம் வாழுது…என் பொருளாதாரக் கஷ்டமெல்லாம் தீரணும்…ஹாய்யா ஏசி ரூம்ல, இந்த மாதிரி பெரிய ஈசி சேர்ல  ஒக்காந்திகிட்டு, 40 இஞ்ச் டிவில ஏதாவது சினிமா பாக்கணும் எந்தக் கவலையும் இல்லாம…அவ்ளோதான்”
வழக்கம்போல் நான், என் பாணியில், “இப்படியெல்லாம் முன்னேறும் தலித்துக்கள் சிந்திப்பது தவறு, தன் முன்னே உள்ள தடைகளால் மனம் கசந்துபோய் அவர் இப்படி சொல்லியிருக்கலாம், ஆனால் சராசரி மனிதர்களுக்கிருக்கும் கனவுதான் ஒரு எழுத்தாளருக்குமா… என் சமூகத்திற்கிழைக்கப்படும் அநீதிகளை எதிர்த்துக் குரல் கொடுப்பேன்… எனக்கும் ஒரு அந்தஸ்து வந்துவிட்டால் நான் சொல்வதை எல்லோரும் கேட்பார்களல்லவா, அதற்காகவாவது என் நிலை மேம்படவேண்டும் என்றல்லவா அவர் சொல்லியிருக்கவேண்டும்,”  என என் ஆதங்கத்தைச் சொல்ல, எனக்கும் என் நண்பருக்கும் கடும் வாக்குவாதம்.
“ அவர்களது அபிலாஷைகளைப் புரிஞ்சிக்க மாட்டேங்குறீங்க… எழுத்தாளர்கள் உலகம் கூட எப்படி குறுகிப் போய்விடுகிறது அந்த நிலைக்கு சமூகம் அவர்களைத் தள்ளுகிறது…அந்த வேதனைல ஒங்ககிட்ட சொன்னா, நீங்க வேதாந்தம் பேசறீங்க…. ஆதிக்கசாதித் திமிர் ..…ஒங்களுக்கு எல்லாம் இருக்குல்ல..அதான் இப்டியெல்லாம் பேசுறீங்க”ன்னு சொன்ன அந்த நண்பர் அதன் பிறகு சில காலம் என்னுடன் பேசுவதையே நிறுத்திக்கொண்டார்.
மதிப்பீடுகளின் வக்கிரம் எல்லா நிலைகளிலும்தான். மாயாவதிக்கு அண்மைய படுதோல்வி சில செய்திகளைச் சொல்லியிருக்கவேண்டும். அவர் எல்லாம் மின்னணு இயந்திரத்தால் வந்தது என அரற்றிக்கொண்டிருந்தாலும், அவருக்கு உண்மை புரிந்திருக்கும். மக்களை அணிதிரட்டுவதைவிட்டு தொகுதிகளில் சாதி, மத நிலவரம் பற்றி தெரிந்துகொண்டு அதற்கேற்றாற்போல் வேட்பாளர்களை நிறுத்தினால் வெற்றி பெறமுடியும் என கணக்குப்போட்டார். அவர் ஆசையில் மண் விழுந்தது,
முதல்வராயிருந்தபோது ஒப்பீட்டளவில் சட்டம் ஒழுங்கு நிலையினை நிலை நாட்டமுடிந்தது, சற்றே மக்கள் நிம்மதியாயிருந்தனர் என்பது உண்மை என்றாலும் அவர் தலித்துக்களில் ஜாதவ் பிரிவினருக்கே அதிக சலுகை காட்டியது,  அவரது ஊழல் திருவிளையாடல், சிலைகள் வைத்து வீண் செலவு செய்தது,  அதிகார மமதை எல்லாமாகச் சேர்ந்து 2012 தோல்விக்கு வழிவகுத்தது.
அதன் பிறகும் அவர் தன் பாதையினை சீர்செய்துகொள்ளவில்லை. எதற்காகவும் போராடவில்லை. முஸ்லீம் வாக்குக்கள் பெறவேண்டி ஏகப்பட்ட முஸ்லீம் வேட்பாளர்களை நிறுத்திய அவர் 2014 முசாஃபர்பூர் கலவரங்கள் போது அப்பக்கமே தலைவைத்துப் படுக்கவில்லை. மேல்சாதியினர் அடக்குமுறையை எதிர்த்து பெரும் இயக்கம் ஒன்றை துவங்கிய கன்ஷிராமின் வாரிசாக அறியப்பட்டவர் பகுஜன் சமாஜ் கட்சி சர்வ சமஜுக்கானது எனச் சொல்லி  மேல்சாதியினரையும் தன் பக்கம் இழுத்துக்கொள்ள முயன்றார். ஆனால் அவ்வாறு பல பிரிவினரில் வாக்குக்களைப் பெறுவதில் காட்டிய அக்கறையில் ஒரு பங்கினைக் கூட ஜாதவ்களைத் தவிர மற்ற தலித் பிரிவினர் மீது காட்டவில்லை. அவர்களெல்லாம் பாஜக பக்கம் சென்றுவிட்டார்கள் என்பதே பொதுவான புரிதல்.
இங்குள்ள தலித் தலைவர்கள் எப்படியெல்லாம் விலை போயிருக்கிறார்கள் என்பதை நிறைய எழுதியாகிவிட்டது. ஆனால் ஆர்வலர்களோ தலித் என்ற பட்டத்தோடு பொதுவாழ்வுக்கு வந்தால் அவர்களுக்கு சலிக்காமல் வாழ்த்துப்பா பாடுகிறார்கள், விமர்சனம் செய்வதை தவிர்க்கின்றனர்.
இந்த நிலையில் தலித் மக்கள் மத்தியில் நல்ல மதிப்பீடுகள் வளரும்? எல்லாருமே அயோக்கியர்கள், இவர்களால் ஆகப்போவது ஏதுமில்லை, நாம் முன்னேறினால் சரி என்றுதானே நினைப்பார்கள்?
தலித்துக்கள் நிலை இப்படி இருக்கையில், தான், தன் பெண்டு, தன் பிள்ளை என பொதுவாகவே குறுக்கிக்கொள்ளும் பிழைப்புவாதங்களுக்கு பலியாகும் நம் பெண்களைப் பற்றி என்ன சொல்லமுடியும்? அப்படித்தானே அவர்கள் வளர்க்கப்படுகின்றனர்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் புதிதாக ஏதும் சொல்லிவிடுவதில்லை. பெண்களுக்காக நடத்தப்படுவதாகச் சொல்லப்படும் ஊடகங்களும் அத்தகைய தந்தைவழிச் சமூக மதிப்பீடுகளைத்தான் ஆழமாகப் பதியவைக்கின்றன.
இன்றைய காலகட்டம் கூடுதல் கவலையளிப்பதாகும். தலித்துக்களுக்கும், சிறுபான்மையினருக்கும் எதிரான மோடி அரசு, பரிவார சாம்ராஜ்ஜியத்தில் நாம் வாழ்கிறோம். மதவாதம் பேசாத அமைப்புக்களின் தவறுகளாலும், முட்டாள்தனங்களாலும் இன்னும் சில ஆண்டுகள் இங்கே சனாதனிகள் ஆட்சி வலுப்பெறவே செய்யும். இவ்வாறு காந்தி-நேரு கண்ட இந்தியாவே சிதிலமாகிக்கொண்டிருக்கிறது. நாம் என்னதான் செய்வது?
இரண்டாண்டுகளுக்கு முன் மறைந்த கும்பகோணம் பகுதி தலித் தலைவர் டி எம் மணி, மாணவர்களுக்கு உதவ என வகுப்புக்கள் நடத்தி வந்தார்.  அவ்வகுப்புக்களில் பாடங்களோடு சமூகத்தைப் பற்றியும் கற்றுக்கொடுக்கப்பட்டு வந்தது.
”நாங்கள் நடத்தும் வகுப்புக்களால் பயன்பெற்று  மேல் படிப்புக்கும் சென்று உயர் பதவிக்கு வருவோர் உண்டு. ஆனால் அவர்கள் மத்தியில் சற்றும் சமூக உணர்வு இல்லாத பலரை என்னால் பார்க்கமுடிகிறது. தங்கள் சொந்த பந்தங்களுடன் நிறுத்திக்கொள்கின்றனர்,..ஏனைய தலித்துக்களை மோசமாகவே நடத்துகின்றனர்….எங்கள் கடும் முயற்சிகளை மிக எளிதாக சூழல் முறியடித்துவிடுகிறது…இதற்கு தீர்வு ஏதுமில்லை, தொடர்ந்து நாங்கள் முயற்சி செய்யவேண்டும் என்பதைத் தவிர,” என்றார் ஆயாசமாக.
சமூக உணர்வை வளர்ப்பதற்கான விடாமுயற்சியின் தேவை. அதுதான் முத்துகிருஷ்ணனின் முடிவு நமக்கு சொல்லும் செய்தி.  சவுக்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக