ஞாயிறு, 12 பிப்ரவரி, 2017

‘உங்களை நம்பித்தான் போறேன்!’ கலங்கிய சசிகலா

இன்று காலை 8 மணிக்கு போயஸ் கார்டனில் செங்கோட்டையன் கார் நுழைந்தது. செங்கோட்டையனை தொடர்ந்து அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் வந்து சேர்ந்தார். அவர்கள் இருவரையும்.கார்டனுக்கு வரச் சொல்லி அதிகாலையில் அழைப்பு வந்திருக்கிறது. அதனால் இருவரும் கார்டன் வந்து சேர்ந்திருக்கிறார்கள். அவர்கள் வரும்போதே சசிகலா தயாராக இருந்திருக்கிறார். 'நேற்று நாம கூவத்தூர் போயிட்டு வந்தாலும் எனக்கு அங்கே இருந்து வந்த தகவல்கள் எதுவும் சரியாக இல்லை. நைட் சி.வி.சண்முகமும், செல்லூர் ராஜூவும் விடிய விடிய பேசி இருக்காங்க. ஆனாலும் 12 பேர் மட்டும் சமாதானம் ஆகவே இல்லையாம். அவங்களை எப்படியாவது சமாதானம் செய்தாகனும்.' என்று சசிகலா சொல்லி இருக்கிறார். ' நாங்க பார்த்துக்குறோம்மா...' என செங்கோட்டையன் சொல்ல... ' அப்படித்தான் நீங்களும் எடப்பாடியும் சொன்னீங்க... ஆனா இப்போ அதிகம் உங்க கொங்கு மண்டலத்தில் இருந்துதான் அங்கே போயிட்டு இருக்காங்க. இப்போ அதிருப்தியில் இருப்பவர்களும் உங்க பகுதியில்தான் அதிகம் இருக்காங்க. நான் இன்றைக்கும் கூவத்தூர் போகலாம்னு முடிவு பன்ணிட்டேன்.' என்று சொல்லி இருக்கிறார்.
' நாங்க பார்த்துட்டு வந்துடுறோம்மா...’ என்று செங்கோட்டையன் மீண்டும் சொல்லி இருக்கிறார். ஆனால் சசிகலா சமாதானம் ஆகவில்லை. சசிகலா கூவத்தூர் கிளம்புவது காலை 10 மணிக்கெல்லாம் உறுதியாகிவிட்டது. இனியும் சசிகலாவை சமாதானம் செய்ய முடியாது என்று தெரிந்ததும் அடுத்த ஆபரேஷனில் இறங்கினார் செங்கோட்டையன். நேற்று சசிகலா கூவத்தூர் போன போது அந்த கிராமத்து மக்கள் அவரை மறிப்பதற்காக காத்திருந்தனர். ஆனால் போலீசார் ஒரு வழியாக தடுத்து சசிகலாவை அனுப்பிவிட்டனர். இன்று அப்படி எதுவும் நிகழ்ந்து விடக் கூடாது என்பதற்காக அந்த கிராமத்து மக்களுடன் சி.வி சண்முகத்தை வைத்து பேச்சு வார்த்தை நடத்தச் சொன்னார் செங்கோட்டையன். ’உங்க கிராமத்துக்கு என்ன வேணுமோ அதை நாங்க செஞ்சு கொடுக்குறோம். சின்னம்மா இங்கே வரும் போது எந்தப் பிரச்னையும் செய்ய வேண்டாம்’ என சி.வி சண்முகம் கிராமத்தினரை சமாதானப் படுத்தி இருக்கிறார். அது மட்டுமல்லாமல், அந்த கிராமத்து மக்களை வைத்தே சசிகலாவுக்கு ஆரத்தி எடுக்கவும் ஏற்பாடு செய்துவிட்டார். இதெல்லாம் முடிவு செய்யப்பட்டதும் செங்கோட்டையனுக்கு தகவல் சொல்லப்பட்டது. அவர் சசிகலாவுக்கு தகவல் சொல்லி புறப்படத் தயார் செய்தார். ஜெயலலிதா இருந்த வரை அவரது பயண திட்டங்களை வகுத்த செங்கோட்டையன் இன்று சசிகலாவுக்கு பயணத் திட்டத்தை வகுத்தார். எந்தப் பிரச்னையும் இல்லாமல் சசிகலாவின் கார் கூவத்தூரை நோக்கிப் போனது. சசிகலாவுக்கு முன்பு இன்னொரு காரில் சாரதியாக சென்றார் செங்கோட்டையன். அங்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்ததை சசிகலாவே எதிர்பார்க்கவில்லை. செங்கோட்டையனைப் பார்த்துச் சிரித்துவிட்டுதான் ரிசார்ட் உள்ளே போயிருக்கிறார் சசிகலா.” என்று முடிந்தது அந்த மெசேஜ்.
“உள்ளே என்ன நடந்தது?” என்று கேட்டது ஃபேஸ்புக்.
“எல்லா எம்.எல்.ஏ.க்களையும் அழைத்து கான்ஃப்ரன்ஸ் ஹாலில் உட்கார வைத்து வழக்கம் போல, அம்மாதான் எல்லாம் என சசிகலா உருகினார். ஆனால் அதன் பிறகு அதிருப்தியில் இருந்த அந்த 12 எம்.எல்.ஏக்களை தனித்தனியாக ஒரு அறைக்கு அழைத்துப் பேசி இருக்கிறார். ‘நீங்க அவரு பக்கம் போனால் நாம ஆட்சி அமைக்க முடியாது. நீங்களும் நானும் இந்த இடத்தில் இருக்க காரணம் அம்மா தான். அம்மாவை நினைச்சுப் பாருங்க. உங்களுக்கு என்ன தேவையோ அதை எல்லாம் நான் செஞ்சு கொடுக்குறேன்...’ என்று உருக்கமாகப் பேசி இருக்கிறார். அந்த எம்.எல்.ஏக்கள் யாருமே பதில் எதுவும் சொல்லவில்லையாம். ‘உங்களை நம்பித்தான் போறேன்’ என்று சொல்லிவிட்டு கூவத்தூரில் இருந்து கிளம்பிவிட்டார்.” என்ற பதிலுக்கு செண்ட் கொடுத்துவிட்டு ஆஃப்லைனில் போனது வாட்ஸ் அப்  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக