ஞாயிறு, 12 பிப்ரவரி, 2017

காணோம் காணோம் அமைச்சர்களை காணோம் ! காணோம் காணோம் எம் எல் ஏக்களை காணோம்!



சசிகலாவுக்கு எதிராக தனி ஒருவராக போர்க்கொடி தூக்கிய முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு தற்போது ஆதரவு பெருகி வருகிறது. இதனிடையே பல்வேறு எம்.பி.க்கள் அடுத்தடுத்து முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே இன்னொரு பக்கம் எம்.எல்.ஏ.க்களைக் காணவில்லை, அமைச்சர்களைக் காணவில்லை என்று பல்வேறு புகார்கள் கிளம்பியுள்ளன. தினசரி அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களை காணவில்லை என்று வரும் புகார்களால் கமிஷனர் அலுவலக அதிகாரிகள் திணறி வருகின்றனர். இதுவரை காணாமல்போன அமைச்சர்கள் பட்டியலில் உள்ளவர்கள் விபரம் வருமாறு,
அமைச்சர் ஓ.எஸ். மணியன் நாகை மாவட்டம் வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஓ.எஸ்.மணியன். தமிழக கைத்தறித் துறை அமைச்சராகவும் உள்ளார். இந்நிலையில். தமிழக கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியனை காணவில்லை என வேதாரண்யம் பொது மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் செல்லூர் ராஜூ

அமைச்சர் செல்லூ ராஜூவைக் காணவில்லை, கடத்தி விட்டனர், கண்டுபிடித்துக் கொடுங்க என்று மதுரையைச் சேர்ந்த செந்தில் முருகன் புகார் கொடுத்துள்ளார்.
எங்கள் தொகுதி கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவை நேரில் சந்தித்து மனு கொடுக்க அரசு சட்டமன்ற விடுதிக்குச் சென்றபோது அவரை அங்கு காணவில்லை. அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளர் சசிகலா எங்கள் தொகுதி எம்.எல்.ஏ.வை சட்டத்துக்கு விரோதமாக அடைத்து வைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே, செல்லூர் ராஜூவை உடனடியாக காவல் ஆணையர் மீட்டுத் தரவேண்டும். வரும் 13ஆம் தேதி காலை 8 மணிக்குள் மீட்டுத் தரவில்லை என்றால் காவல்துறையை கண்டித்து காலவரையற்ற தர்ணா போராட்டம் நடத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் ஜெயக்குமார்

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரைக் காணவில்லை. கண்டுபிடித்துக் கொடுக்க வேண்டும் என்று கோரி சென்னையில் ஒரு புகார் வந்துள்ளது. பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த நவீன் குமார் என்பவர் இதுதொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரைக் காணவில்லை. அவரை போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்று அச்சமாக உள்ளது. அவரைக் கண்டுபிடித்துத் தரவேண்டும் என்று கோரியுள்ளார் நவீன் குமார்.
அமைச்சர் சி.வி.சண்முகம்

அதேபோல அமைச்சர் சி.வி.சண்முகத்தையும் காணோம் என்று சிலர் கிளம்பியுள்ளனர். அவரது போனும் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளதாம். சமீபத்தில் போதையில், சின்னம்மா.. இல்லை இல்லை.. அம்மாதான் என்று ஆவேசமாக அவர் பேசிய பேச்சு வீடியோவை வைரலாகப் பரவி "வாலிப வயோதிகர்கள்" மத்தியில் பெரும் சிரிப்புகளை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது!
அமைச்சர் காமராஜ்

ஆர்.காமராஜ் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவரை ஒரு வாரமாக காணவில்லை என்றும், செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் காவனூரைச் சேர்ந்த மதுசூதனன் என்பவர் குடவாசல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதே மனுவில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலையும் ஒரு வாரமாக காணவில்லை என்று புகார் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அமைச்சர் சரோஜா

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம், எம்.எல்.ஏ.,வும், சமூகநலத்துறை அமைச்சருமான சரோஜா தற்போது சென்னையில் உள்ளார். சசிகலா ஆதரவாளரான இவருக்கு எதிராக ராசிபுரம், வெண்ணந்தூர், நாகிரிப்பேட்டை ஒன்றியங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வெண்ணந்தூர் நகர, அ.தி.மு.க., துணைச்செயலாளர் சண்முகம் தலைமையில், கட்சியினர் தங்களது தொகுதி எம்.எல்.ஏ.,வும், அமைச்சருமான சரோஜாவை, கடந்த ஒரு வாரமாக காணவில்லை. அவரை கண்டுபிடித்துத் தர வேண்டும் என, போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளனர்.
அமைச்சர் துரைக்கண்ணு

விவசாயத்துறை அமைச்சரான துரைக்கண்ணுவை காணவில்லை என்றும், அவரை சசிகலா குடும்பத்தினர் மறைத்து வைத்திருப்பதாகவும் மகாலிங்கம் என்பவர் பாபநாசம் காவல்நிலையத்தில் புகார் மனுவை அளித்துள்ளார். துரைக்கண்ணு தஞ்சை மாவட்டம் பாபநாசம் தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டவர் ஆவார். துரைக்கண்ணுவை கண்டுபிடித்து தரக்கோரி இன்று உண்ணாவிரதம் மேற்கொள்ளப்போவதாகவும் மனுதாரர் மகாலிங்கம் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் வளர்மதி

அமைச்சர் வளர்மதியை காணவில்லை என ஸ்ரீரங்கம் தொகுதி மக்கள் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக எம்.பி., கோபால்

இதே போன்று அதிமுக எம்.பி., கோபாலையும் காணவில்லை என போலீசில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக