ஞாயிறு, 12 பிப்ரவரி, 2017

அதிமுகவில் இருபிரிவு : கலவர அபாயம் - உளவுத்துறையின் கடிதம்! பல இடங்களில் முறுகல் நிலை

தமிழகத்தின் சில பகுதிகளில் அதிமுகவில் இருபிரிவைச் சேர்ந்த கட்சித் தொண்டர்கள் சிலர் தங்களின் தலைவர்களுக்கு ஆதரவாக போராட்டம் மற்றும் கவர்னரின் உருவ பொம்மைகளை எரிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதையடுத்து, எம்.எல்.ஏ., எம்.பி., பாஜக முக்கிய பிரமுகர்கள், பாஜக அலுவலகங்கள், மற்றும் கவர்னர் மாளிகைக்கு பாதுகாப்பை அதிகரிக்க வேண்டுமென்று மாநில உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மாநில உளவுத்துறை சார்பில் , சென்னை மாநகர காவல் ஆணையர் உள்பட மாநிலத்தில் உள்ள இதர மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட எஸ்.பி.க்களுக்கும் அனுப்பியுள்ள எச்சரிக்கை அறிவிப்பில் கூறுவதாவது,
அதிமுக கட்சியில் ஏற்பட்ட மாற்றத்தையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து கடந்த 7ஆம் தேதி அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதையடுத்து, தமிழக ஆளுநரின் உருவப்பொம்மையை நேற்று (11.02.2017) சில நபர்கள் எரித்துள்ளனர். மேலும், மதுரை மாவட்டத்தில் ஒரு குறிப்பிட்ட அமைப்பைச் சேர்ந்த சில நபர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்நிலையில் மாநிலத்தின் இதர பகுதியில் இதேபோன்ற போராட்டங்களை சில அமைப்புகள் மேற்கொள்வதையும் அதற்கு போட்டியாக வேறு சில அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபடுவதை அனுமதிக்க கூடாது.
தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து அதிமுக கட்சித் தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலை தொடர்ந்து நீடித்தால் கட்சித் தொண்டர்கள் தங்களது பொறுமையை இழந்து தீவிரமான போராட்டத்தில் ஈடுபடும் வாய்ப்புள்ளது. கட்சித் தலைவர்களும் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற நேரடியாக உண்ணாவிரத போராட்டங்களில் ஈடுபட்டால், அரசியல்நிலை மேலும் தீவிரமடையும் வாய்ப்புள்ளது. அதையடுத்து, பாஜக தலைவர்கள் மற்றும் அவர்களது வீடுகள் மீதும் பாஜக அலுவலகங்கள் மீதும் அதிமுகவினர் தாக்குதல் நடத்தக்கூடும். சிலர் ஆளுநர் மாளிகை முன் போராட்டங்கள் நடத்தவும் வாய்ப்புள்ளது.
எனவே, இதை பயன்படுத்திக்கொண்டு சில சமுக விரோத கும்பல்கள், அமைப்புகள் மற்றும் சில கட்சி தொண்டர்கள் அத்துமீறல்களில் ஈடுபடுவதை அனுமதிக்க கூடாது.
பாதுகாப்பு நடவடிக்கையாக சுற்று பகுதிகளில் உள்ள பதற்றமான இடங்களில் போதுமான பாதுகாப்புகளை வழங்கி எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் . மேலும், ரவுடிகள் மற்றும் சமுக விரோத கும்பல்களை மிகவும் உன்னிப்பாக கவனித்து அவர்கள் அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடுவதில் இருந்து தடுத்து, அவர்களிடம் ஏதேனும் துப்பாக்கிகள், வெடிபொருட்கள் போன்ற ஆயுதங்களை வைத்துள்ளார்களா என்பதை கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தங்கள் பகுதிகளில் உள்ள எம்.எல்.ஏ.க்கள்,எம்.பி.க்கள் அமைச்சர்கள் மற்றும் அதிமுகவின் முக்கியத் தலைவர்கள் மற்றும் கட்சி அலுவலகங்களுக்கு போதுமான பாதுகாப்பு வழங்க வேண்டும் . அதேபோல், பாஜக அலுவலகம் மற்றும் அதன் தலைவர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். மேலும், சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகைக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தின் மூலம் மாநில உளவுத்துறையே, அதிமுகவில் இருபிரிவு இருக்கிறது என்பதை ஒத்துக்கொண்டுள்ளது. அந்த இரு பிரிவைச் சேர்ந்த கட்சித் தொண்டர்களால் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் நிலையை தெரிவித்து பாதுகாப்பை பலப்படுத்தும்படி தெரிவித்துள்ளது. மாநில உளவுத்துறையின் இக்கடிதத்தை, மத்திய உளவுத்துறை, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ளது. அதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகம், இந்த கடிதத்தினை ஆளுநர் அலுவலகத்திற்கு அனுப்பி போதிய பாதுகாப்பை உடனடியாக ஏற்படுத்தும்படி தெரிவித்துள்ளது .  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக