வெள்ளி, 3 பிப்ரவரி, 2017

தீ வைத்த போலீசார் விவரம்! - நக்கீரன் முழு அறிக்கை !

சென்னை போலீஸ் வன்முறையின்போது அப்பாவிகளின் ஆட்டோக்களுக்கு போலீசாரே தீவைத்த சம்பவத்தை தொலைக்காட்சிகளிலும் கைபேசிகளிலும் வீடியோவாகப் பார்த்து நாடே அதிர்ந்துபோனது. இது தொடர்பாக 3 போலீசாரை துறைரீதியாக விசாரிக்கிறார்கள். மூவருக்கும் அழைப்பாணை கொடுக்கப்பட்டு, விசாரணை நடக்கிறது. சம்பவம் நிகழ்ந்த மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் சிட்டிசெண்டர் அருகே பக்கிங்ஹாம் கால்வாயின் கரையில் அமைந்துள்ளது ரூதர்புரம். முன்னூறு போலீசுடன் சென்ற அண்ணாநகர் துணை ஆணையாளர் பெரோஸ்கான் அப்துல்லா, திருமங்கலம் உதவி ஆணையாளர் காமில் பாஷா, தென்சென்னை போக்குவரத்து உதவி ஆணையாளர் யுவராஜ் ஆகியோர் ரூதர்புரத்திற்கு வந்தார்கள். வந்தவர்கள் முதலில் அங்கிருந்த சி.சி.டி.வி. காமிராக்களை உடைத்தார்கள். அதன்பிறகு அந்த வழியாக வந்த பத்திரிகையாளர்களை "ஓடிவிடுங்கள்'' என மிரட்டினார்கள்.
ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என ஓடிவந்த பத்திரிகையாளர்களை காமில் பாஷாவும், யுவராஜும் தாக்க ஆரம்பித்தார்கள். தினகரன் பத்திரிகையின் தலைமைச் செய்தியாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரேஷை அவரது காரில் வைத்தே கடுமையாகத் தாக்கினார்கள்.
அதற்குப் பிறகும் ரூதர்புரத்தின் சந்து பொந்துகளில் ஒளிந்திருந்த பத்திரிகையாளர்கள் போலீசாரின் செயல்களை படமெடுத்து லைவ் ஆக அனுப்பிக்கொண்டிருந்தார்கள்.

 அண்ணாநகர் துணை கமிஷனரின் பாதுகாப்பு படையில் இடம் பிடித்திருப்பவர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ரங்கராஜன் ராஜா. துணை கமிஷனர் எங்கெல்லாம் செல்வாரோ அங்கெல்லாம் செல்பவர். அவர் ரூதர்புரத்தில் களம் இறங்கினார். ஒரு ஆட்டோ டிரைவர் ஓடிவந்தார் என அவரை நையப்புடைத்ததோடு அவருக்கு சொந்தமான ஆட்டோவுக்கும் தீ வைத்தார்.

ரங்கராஜன் உடன் இருந்த காவலர்கள் போலீஸ் தாக்குதலால் கால் உடைந்து போன ஆட்டோ டிரைவருக்கு முதலுதவிகூட செய்யாமல் அவரது ஆட்டோ உட்பட அந்த பகுதியில் உள்ள ஆட்டோ, வேன் அனைத்திற்கும் தீ வைத்தார் ரங்கராஜன் ராஜா.

அங்கிருந்த பொதுமக்களையும் காக்கி கும்பல் தாக்கியதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
எம்.ஜி.ஆர். நகர் காவல்நிலையத்தில் வேலை பார்ப்பவர் லட்சுமி என்கிற மகாலட்சுமி. இவர் முகத்தை மூடிக் கொண்டு போய் ஒரு குடிசைக்கு தீ வைத்தார்.

 ரங்கராஜன் ராஜாவுடன் அண்ணாநகர் காவல் மாவட்டத்தில் பணிபுரிபவர் குணசுந்தரி. இவர் ரங்கராஜனுடன் சேர்ந்து வாகனங்களுக்கு தீ வைத்தார்.

இதையெல்லாம் ரூதர்புரத்தில் இருந்த பொதுமக்களும் தொலைக்காட்சி ஊடகத்தினரும் படமெடுத்தனர். ’நியூஸ்18 தமிழ்நாடு’ செய்தி சேனல் இந்தக் காட்சிகளை நேரடியாக ஒளிபரப்பியது.

 வேறு வழியில்லாமல் போலீசாரின் அத்துமீறல்கள் விசாரிக்கப்படும் என சட்டமன்றத்தில் முதலமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார்.
அதைத் தொடர்ந்து ரங்கராஜன், மகாலட்சுமி, குணசுந்தரி ஆகியோர் சிக்கியுள்ளனர்.

இது பற்றி நம்மிடம் பேசிய ரங்கராஜன், "அன்று அந்த ரூதர்புரம் பகுதியில் வேலை பார்த்தேன். நான் ஆட்டோவை கொளுத்தினேன் என எனது உயரதிகாரிகள் என்னை விசாரணைக்கு வரச்சொல்லி மெமோ கொடுத்திருக்கிறார்கள். நான் எந்த ஆட்டோவையும் கொளுத்தவில்லை'' என்றார்.
மகாலட்சுமியைப் பற்றி விசாரிக்க எம்.ஜி.ஆர். நகர் காவல்நிலையம் சென்றோம். அங்குள்ள அனைவருக்கும் மகாலட்சுமி குடிசையைக் கொளுத்திய விவகாரம் தெரிந்திருக்கிறது. மகாலட்சுமி, குணசுந்தரி ஆகியோரைத் தொடர்புகொள்ள முயற்சிசெய்து வருகிறோம்.
நக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக