வெள்ளி, 3 பிப்ரவரி, 2017

செத்து மடியும் உயிரினங்கள் : பீட்டாவுக்கு விஜயகாந்த் கேள்வி!

மின்னம்பலம் :எண்ணூர் அருகே நடந்த கப்பல் விபத்தால், கடலில் கலந்த எண்ணெய் கழிவுகளை சுத்தம் செய்யும் பணியை தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்த் இன்று நேரில் ஆய்வு செய்தார்.
ஈரானிலிருந்து சமையல் எரிவாயு ஏற்றிக்கொண்டு, எண்ணூர் துறைமுகத்தில் இறக்குமதி செய்துவிட்டு திரும்பிய எம்.டி.பி.டபிள்யூ மாப்பிள் என்ற கப்பலும், மும்பையில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிவந்த டான் காஞ்சிபுரம் என்ற கப்பலும் எண்ணூர் துறைமுகத்திலிருந்து 1.8 நாட்டிக்கல் மைல் தொலைவில், கடந்த 28ஆம் தேதி நேருக்குநேர் மோதிக் கொண்டன. இதில், கச்சா எண்ணெய் ஏற்றிவந்த கப்பலில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் கடலில் கலக்கத் தொடங்கியது. இதன்காரணமாக, சென்னை எண்ணூர் துறைமுகத்தையொட்டி 24 கிலோ மீட்டர் தொலைவுக்கு கச்சா எண்ணெய் பரவியுள்ளது. புதுச்சேரிக்கும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எண்ணெய் படலம் கடல்நீரை மூடியுள்ளதால் மீன், ஆமை உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் செத்து மிதக்கின்றன. இதனால் மீன்பிடித் தொழிலை நம்பி வாழும் மக்கள் வேலையிழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர்.

ஏற்கனவே, இலங்கை கடற்படையால் சிறைப்பிடிப்பு, வர்தா புயல், நடுக்குப்பம் மீனவ மக்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதல் போன்ற பல்வேறு இன்னல்களைத் தொடர்ந்து மீனவர்கள் கடுமையான சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இதனால் மீன் விற்பனையும் கடுமையான சரிவை சந்தித்துள்ளது. இந்நிலையில், தற்போது கடலில் கச்சா எண்ணெய் கலந்துள்ளது.
இதை அகற்றும் பணி ஒப்பந்த அடிப்படையில் பணியாட்கள்மூலம் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நடந்து வருகிறது. இருப்பினும், பிற நாடுகளைப்போல நவீன தொழில்நுட்பக் கருவிகள் இல்லாததால் எண்ணெயை அகற்றும் பணி மிகவும் மந்தமாக உள்ளது. கடலில் கலந்த எண்ணெய் கழிவுகளை சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 91 டன் எண்ணெய் கழிவுகள் கடலிலிருந்து எடுக்கப்பட்டிருப்பதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், எண்ணூர் பகுதியை தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்த் இன்று நேரில் ஆய்வு செய்தார். அதன்பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: ‘கடலில் எண்ணெய் அகற்றும் பணி மிகவும் மெதுவாக நடந்து வருகிறது. ஆயிரம் பேர் டீசல் அகற்றும் வேலையைப் பார்த்தாலும் பணி மந்தமாகவே நடைபெற்று வருகிறது. புதிய நவீன கருவிகளை வாங்கி எண்ணெய் படலத்தை அப்புறப்படுத்த வேண்டும். எண்ணெய் கழிவுகள் வாளிகளில் அகற்றப்படுகிறது. வாளிகளில் அகற்ற கடல் என்ன கிணறா? வாளியில் அள்ளிக் கொட்டினால் என்றைக்கு இந்தப் பணிகள் முடியும்? குப்பமானாலும் எண்ணூரானாலும் ராமேஸ்வரமானாலும் மீனவர்கள்தான் பாதிக்கப்படுகின்றனர். லஞ்சம் வாங்குவதில் அக்கறை காட்டுவோர், புதிய கருவிகள் வாங்குவதில் அக்கறை காட்ட வேண்டும். கடலில் எண்ணெய் கலந்துள்ளதால் மீன்கள், ஆமைகள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் இறந்து போய்விட்டன. எண்ணெய் அகற்றும் பணியில் மத்திய, மாநில அரசுகள் விரைந்து செயல்பட வேண்டும். ஜல்லிக்கட்டு நடத்த எதிர்ப்புத் தெரிவித்து தடை வாங்கும் பீட்டா அமைப்பு, செத்து மடிந்துகொண்டிருக்கும் அரிய வகை கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்க குரல் கொடுக்காதது ஏன்? எண்ணெய் படலத்தை அகற்றும் பணி விரைவில் நிறைவடைந்து மீனவர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்பதும் கடல்வாழ் உயிரினங்கள் காக்கப்பட வேண்டும் என்பதும் தேமுதிக-வின் விருப்பம்’ என்று அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக