வெள்ளி, 3 பிப்ரவரி, 2017

கூர்வாழின் நிழலில் ! சிங்கள மக்களின் இதயத்தை வென்ற தமிழினியின் வாழ்க்கை வரலாறு

rishantranslations.: தமிழினியின் உயிர்க் கொடை ;இதை ஏன் எழுத வேண்டும்? என என்னை நானே பல தடவைகள் கேட்டுக் கொண்டேன். என்னை எழுத ஊக்குவித்தது ஒரே ஒரு பதில்தான். அது, நான் உயிராக நேசிக்கும் மக்களிடம், எனது குரல்வளைக்குள் சிறைப்பட்டிருக்கும் சில உண்மைகளை வெளிப்படையாகக் கூற வேண்டும் என்பதாகும். இலங்கை சமூகத்துக்கு விலை மதிப்பற்ற கொடையாகக் கருதப்படுகிறது முன்னாள் போராளியும், புலிகளின் அரசியல்துறை மகளிரணித் தலைவியாகவுமிருந்த தமிழினி எழுதிய அவரது வாழ்க்கைச் சரிதத்தின் சிங்கள மொழிபெயர்ப்புத் தொகுப்பு. இந்திய காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வெளிவந்த ‘ஒரு கூர் வாளின் நிழலில்’ தொகுப்பானது,  ‘Thiyunu asipathaka sevana yata’ எனும் தலைப்பில் திரு.சாமிநாதன் விமலினால் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, 260 பக்கங்களில், எழுத்தாளர் தர்மசிறி பண்டாரநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ளது. இத் தொகுப்பே அண்மைக்காலமாக இலங்கையில் அதிகம் விற்பனையான சிங்கள மொழி புத்தகமாக அறியப்பட்டுள்ளது. சுரஸ பதிப்பகத்தால் வினியோகிக்கப்படும் இத் தொகுப்பானது, ஒரு மாதத்துக்கு இரண்டு பதிப்புக்களென அச்சிடப்படுகிறது எனும்போது, இப் புத்தகம் சிங்கள மொழி வாசகர்களை எந்தளவுக்கு ஈர்த்துள்ளதென்பதை அறியக் கூடியதாக இருக்கிறது.




         தமிழினி ஜெயக்குமாரன், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைய நேர்ந்த காரணங்கள் உட்பட, அந்த இயக்கத்தில் போராளியாகி பின்னர் புலிகளின் அரசியல்துறை மகளிரணித் தலைவியாகி, இறுதி யுத்தத்தில் இராணுவத்தில் சரணடைந்து, சிறையிலடைக்கப்பட்டு, புனர்வாழ்வு பெற்று, விடுதலை பெறும் வரையான அவரது அனுபவங்கள் விரிவாக இத் தொகுப்பில் எழுதப்பட்டிருக்கின்றன. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நல்லதும், தீயதுமான செயற்பாடுகளையும் இராணுவத்தின் நல்லதும், தீயதுமான செயற்பாடுகளையும் குறித்து நேர்மையாக, சுய அனுபவங்களோடு அவர் தனது கருத்துக்களை முன்வைத்திருப்பதை இத் தொகுப்பில் காணக் கூடியதாக இருக்கிறது.




             “சுனாமி வேலைத் திட்டத்தின் போது, கிழக்கில் தமிழ் இளைஞர் யுவதிகள், இஸ்லாமியர்கள், சிங்களவர்கள் போன்ற பல தரப்பட்டவர்களோடு இணைந்து பணியாற்றும் சந்தர்ப்பங்கள் எனக்குக் கிடைத்தன. அச் சந்தர்ப்பங்களில் வெளிப்பட்ட ஒன்றிணைந்த மக்களின் பெருந்தன்மையும், பேராச்சரியம் தந்த மக்கள் சக்தியும் என்னுள்ளே மிகப் பெரும் உற்சாகத்தைத் தந்தன. அந்த ஆக்கபூர்வமான சக்தியானது, இலங்கையின் அரசியல் தலைமைகளால் யுத்தத்துக்காகப் பாவிக்கப்பட்டு, யுத்தத்தினாலேயே அழிக்கப்பட்டு விட்டன.”


              “இராணுவத்தினரதும், விடுதலைப் புலிகளினதும் உயிரற்ற சடலங்கள் மழை நீரில் ஈரமாகி ஆங்காங்கே விறைத்துப் போய்க் கிடந்தன. செந்நிறக் குருதி, மழை நீரோடு கலந்து பெருக்கெடுத்துக் கொண்டிருந்தது. சொற்ப நேரத்துக்கு முன்பு எதிரி மனப்பான்மையோடு எதிரெதிராக நின்று போரிட்டவர்கள், பெரு நிலத்தின் மீது உயிரற்றவர்களாக வீழ்ந்து பரந்திருக்கும் காட்சி, தாயின் மடியில் உறங்கிக் கொண்டிருக்கும் கைக் குழந்தைகளை நினைவுபடுத்தின.


               அனைத்து வேற்றுமைகளும், மோதல்களும், பகைமையும் ஒன்றுமற்றதாகிப் போகுமிடம் யுத்த களம்தான் என்பதை முழுமையாகப் புரிந்து கொள்ளத் தேவையான அறிவு உண்மையிலேயே அப்போது எனக்குள் இல்லாமலிருந்தது.”


              “குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நான் சட்ட வைத்தியப் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டேன். எனது வைத்தியப் பரிசோதனையை மேற்கொண்ட இளம் பெண் வைத்தியர், அவருக்குத் தெரிந்த தமிழில் என்னோடு உரையாடினார். ‘உயிரொன்றைக் கொலை செய்வது பாவம். இந்த உலகம் எவ்வளவு அழகானது? ஏன் நீங்கள் இவ்வளவு காலமாக தீவிரவாத உறுப்பினராக இருந்தீர்கள்? இதற்குப் பிறகாவது உயிர்கள் மீது அன்பு செலுத்துங்கள்’ போன்ற அவரது அறிவுரைகள் எனது மனதை மிகவும் பாதித்தன.


                நான் போராளியா? தீவிரவாதியா? என்னை போராளியாகவும், தீவிரவாதியாகவும் ஆக்கிய முதன்மைக் காரணங்கள் குறித்து நான் சிந்தித்தேன். அரசியலால்தான் அது. ஆயுதங்களால் மாத்திரமே எமக்கு விடுதலையைப் பெற்றுக் கொள்ள முடியும் என கற்றுக் கொடுக்கப்பட்ட அரசியலால். ஆயுதமேந்தியதாலேயே நீயொரு தீவிரவாதியென முத்திரை குத்தப்பட்டதும் அரசியலாலேயே.


               இளமைக் காலத்தில் எனக்கு எவ்வளவு கனவுகள், எதிர்பார்ப்புகள், ஆசைகள் இருந்தன? அடுத்தவர்களது வாழ்க்கையை நேசிக்கும் சிறுமியாக நான் சிறு வயதில் வளர்ந்தேன்.


               எனது வாழ்க்கையைத் தியாகம் செய்து மக்களின் எதிர்காலத்தைச் சிறப்பாக்க முடியுமென்ற நம்பிக்கையினால் நான் போராட்டத்துக்குக் கொண்டு செல்லப்பட்டேன். எனினும் விடுதலையின் பெயரால் செய்யப்பட்ட அழிவுகளுக்கும், படுகொலைகளுக்கும் நானும் காரணமாக இருந்திருக்கிறேன். அதை மறைப்பதற்கோ, மறுப்பதற்கோ முயற்சிப்பது எனது மனசாட்சிக்கு துரோகம் இழைப்பதாக எனக்குத் தோன்றியது.”


             “கடந்த காலம் கற்றுத் தந்தவை எம்மை அடுத்த வெற்றி மற்றும் சரியான பாதையை நோக்கி கொண்டு செல்ல வேண்டும். இந் நாட்டு மக்களுக்கும், எதிர்கால சந்ததியினருக்கும் நான் கூற முயற்சிக்கும் செய்தியை எவ்வளவு தூரம் வெற்றிகரமாகக் கூறியிருக்கிறேனென எனக்குத் தெரியாது. எனினும் நான் மிகுந்த முயற்சியெடுத்து, இந்த இதயம் நிரம்பிய பாரத்தினாலும், தடையேதுமற்று வழிந்தோடிய கண்ணீராலும் இப் புத்தகத்தை எழுதியிருக்கிறேன். நான் எனது பள்ளிக் காலத்தில், எனது சமூகத்துக்கு ஏதேனும் நல்லதைச் செய்ய வேண்டுமென்ற நோக்கத்தில் போராளியாக ஆனேன். எனது வாழ்க்கையின் இறுதி மூச்சு வரை போராளியாகவே இருந்து மக்களுக்கு சேவை செய்ய விரும்பியிருந்தேன். ஆயுதமேந்தியோ அல்லது பழிக்குப் பழி வாங்குவதன் மூலமோ எனது சமூகத்துக்கும், தேசத்துக்கும், உலகத்துக்கும் எவ்வித நல்லதையும் எம்மால் செய்ய முடியாதென எமது அனுபவங்கள் எமக்கு கற்றுக் கொடுத்தன. உண்மையான சமாதானத்தின் பாதையானது, போரின் பாதையை விட மிகவும் கடினமானதென நான் அறிந்திருந்தேன்.”


              த் தொகுப்பு குறித்து, சிங்கள வாசக சமூகத்தில் பல தரப்பட்ட கலந்துரையாடல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுக் கொண்டிருப்பதைக் காணக் கூடியதாக இருக்கிறது. இத் தொகுப்பு, நேரடியான வாசக ஒன்றுகூடல்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பிரதான கருப்பொருளுக்குரிய நூலாக, ஆகியிருக்கிறது. தமிழினி ஜெயக்குமாரன் எனும் முன்னாள் போராளி, சிங்கள சமூக வாசகர்களின் நேசத்துக்குரிய பெண்ணாக மாறியிருப்பதை, அவ் வாசகர்களது கலந்துரையாடல்கள் தெரியப்படுத்துகிறது. இத் தொகுப்பு குறித்து அவ் வாசகர்கள் சிலர் கூறியுள்ளதை தமிழில் மொழிபெயர்த்துக் கீழே தருகிறேன்.


  து ஜூலை மாதம். கசப்பான நினைவுகளை எமக்கு மீதமாக்கித் தந்திருக்கும் மாதம். சிங்கள, தமிழ் மக்கள் பகைமையின் முள் விதைகளை செழிப்பாக்கிய மாதம். மனித ஜீவிதங்களுக்கு கறுந் தழும்பொன்றைச் சேர்த்தவாறு கறுப்பு ஜூலையை உருவாக்கிய மாதம். இம் மானிட ஜீவிதங்களில் இணைந்து கொண்டுள்ள இக் கரிய தழும்பை நீக்கி, சகோதரத்துவத்தால் நிரம்பி வழியும் மாதமாக இந்த ஜூலை மாதத்தையும், எதிர்காலத்தையும் மாற்றுவதே இப்பொழுது எமக்கு அவசியமாக இருக்கிறது. அச் சகோதரத்துவத்தின் கைகளைக் கோர்க்க இத் தொகுப்பும் ஒரு காரணமாக அமைந்திருக்கிறது எனக் கருதுகிறேன்” என்கிறார் வாசகர் பியல் ரஞ்சித்.



   “மிழினியின் இந்த சுயசரிதைத் தொகுப்பானது, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயற்பாடுகள் குறித்த அவரது மன நிலையை வெளிப்படுத்துகிறது.” எனக் கூறும் வாசகர் தில் நிரோ த சில்வா, தனது அக் கருத்துக்குக் காரணமான சில பத்திகளை தொகுப்பிலிருந்து குறிப்பிட்டுக் காட்டுகிறார். அதை வழிமொழியும் வாசகர் ஷானக “ஆயுதங்களால் பெற்றுக் கொண்டது எதுவுமல்ல, தீவிரவாதம் தமிழ் மக்களுக்கு உரித்தாக்கியுள்ளவை எவை என இப் புத்தகத்தைப் படிப்பதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும்” என்கிறார்.

    இத் தொகுப்பு குறித்து வாசகர் பி.கே.தீபாலின் பார்வை வேறு மாதிரியாக இருக்கிறது. அது ஒட்டுமொத்தமான சிங்கள சமூகத்தின் அக உணர்வை வெளிப்படுத்துவதாகத் தோன்றுகிறது.


   “ந்தப் படைப்பை நான் வாசிக்கவென எடுத்தபோது, இதை வாசிப்பதன் மூலம் விடுதலைப் புலிகள் இயக்கம் குறித்தும், அவர்களது செயற்பாடுகள் குறித்தும் ஏதேனும் அறிந்து கொள்ளக் கிடைக்குமென நான் நினைத்தேன். எனினும், தொகுப்பை வாசித்து முடித்ததும் வாழ்க்கை குறித்தும், மனிதாபிமானம் குறித்தும் ஆழமான உணர்வுகளால் எனது இதயம் நிறைந்து போனது.

    இளமைக் காலத்தில் தவறான வழி காட்டல் அத்தோடு எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாகிப் போனதால் சந்தர்ப்பவாத அரசியலுக்கு ஒரு இரையாய் அவர் ஆகிறார். ஒருபோதும் பூமியில் வெற்றியைச் சாத்தியமாக்காத போராட்டமொன்றுக்காக கொலைகார, மிலேச்ச இயக்கமொன்றின் உறுப்பினராக ஆனது அவரது வாழ்க்கையின் துயரமாகும். ஒரு பெண்ணாக கிடைக்கக் கூடிய உயர் பதவியான தாய்மைப் பதவிக்குப் பதிலாக, தீவிரவாத இயக்கத்தின் உறுப்பினராக ஆனது உண்மையிலேயே கவலை தரத் தக்கதாகும். அது அவருக்காக இல்லை. அவர் நினைத்ததைப் போல அவரது மக்களுக்காகவும் இல்லை. துரதிர்ஷ்ட வசமாக அதை நியாயப்படுத்த அவராலும் இயலவில்லை.

    மனிதாபிமானத்தை நேசிக்கும் ஒரு மனிதனாக வன்முறைக்கும், மிலேச்சத்தனத்துக்கும், தீவிரவாதத்துக்கும் நான் எதிரி. அதனால், இத் தொகுப்பை வாசிப்பதற்கு முன்பு வரை அவரும் எனது கோபத்துக்கும், வெறுப்புக்கும் உரியவராக இருந்தார். இப்பொழுது நான் சொல்கிறேன். தமிழினி ஜெயக்குமாரனாகிய அவரை, (தற்போது உயிருடன் இல்லாத போதும்) அன்பான சகோதரத்துவத்துடன் நான் இன்று அரவணைத்துக் கொள்கிறேன்” எனக் கூறுகிறார் பி.கே.தீபால்.

        அதை ஒத்த ஒரு கருத்தை முன்வைக்கிறார் வாசகர் திலும்.டி.திசாநாயக்க.

       “வாசிக்க ஆரம்பித்தபோது, தமிழினி, பிரபாகரனை நியாயப்படுத்தப் போகிறார் என்றே நான் நினைத்தேன். ஆனால், முடிக்கும்போது, தமிழினிக்கும் எம்மைப் போலவே அம் மிலேச்சத்தனத்தின் மீது வெறுப்பு இருந்திருக்கிறதென்பதை நான் உணர்ந்தேன்.”


    “மிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடும் எண்ணத்தோடு இயக்கத்தில் சேர்ந்து, முப்பது வருட கால குரூர யுத்தத்தின் சாபத்துக்கு இரையான போராளிகளுக்கு, இறுதியில் எஞ்சியது என்ன என்பதை விபரமாக ஆராய்ந்திருக்கும் தொகுப்பு இது’ என்கிறார் வாசகி நிலக்ஷி கருணாரத்ன. வாசகி ஷ்யாமலீ காரியவசமும் அதே கருத்தை ஒத்த, கருத்தைக் கொண்டிருக்கிறார்.


டந்த காலத்தைப் போல இந் நாட்டில் பயங்கரமான, கசப்பான, துயரங்கள் நிறைந்த ஒரு நிலைமை ஏற்படக் கூடாதென்ற உயர்ந்த நோக்கத்தில் தமிழினி தனது போர் அனுபவங்கள் குறித்து, சுய விவரணத்தை எழுதியிருக்கிறார்.”

    வாசகி பாக்யா முதலிகே, இக் கருத்தையே விரிவாக ஆராய்கிறார்.


    “பெரும்பான்மையான நாம், ஒருபோதும் நேரில் கண்டிராத யுத்தம் குறித்து கேள்விப்பட்டிருப்பதைப் போலவே, அதைப் பற்றிய எமது தரப்பினரது வாழ்க்கைக் குறிப்புக்கள் பலவற்றையும் வாசித்திருப்போம். எப்போதாவது நாங்கள் தமிழ் சகோதரர்களது வாழ்வனுபவங்களை வாசித்திருப்போமானால், அதுவும் கூட சிங்களவர்கள், தமிழர்களைப் பற்றி எழுதிய ஒன்றாகவே அது இருக்கும்.

         தனது இனத்தில், தனது மக்களே செத்துச் செத்து வீழ்ந்து கொண்டிருக்கும்போது தோன்றக் கூடிய அதிர்வில், பயனற்ற யுத்தத்தில் போராளியாக, பதினெட்டு வயதில் தமிழினி விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைகிறார். அன்றிலிருந்து இறுதி யுத்தம் வரைக்கும் இயக்கத்தில் இணைந்திருந்த தமிழினி செலவழித்த காலம் தொடர்பான அநேகமான விபரங்கள் இத் தொகுப்பில் உள்ளன.

          தமிழினி, யுத்தத்துக்காக தனது ஆசாபாசங்களைத் துறந்தது போலவே, ஏனைய தமிழ் சகோதர, சகோதரிகளும் பிரபாகரன் எனும் தமது தலைவன் மீதுள்ள நம்பிக்கையின் அடிப்படையிலேயே அனைத்தையும் துறந்து இயக்கத்தில் இணைந்துள்ளனர். எனினும் இறுதி யுத்தத்தில் போராளிகள் உண்மையை உணர்ந்து கொள்வது, இலங்கை இராணுவத்தின் செயற்பாடுகள் மற்றும் அவர் சந்திக்கும் சிங்களத் தாய்மார்கள் ஆகியன அவருக்குள் அழகான உணர்வுகளைத் தோற்றுவிக்கின்றன.

       ‘சிங்களவர்களாகிய உங்களைப் போலவே தமிழர்களாகிய எங்களுக்கும், எமது இனத்தைக் குறித்து ஈடுபாடு இருக்கிறது. அந்த ஈடுபாட்டால்தான் நாம் போரிட்டோம்’ என தமிழினி எமக்கு ஏதோ கூறவிழைகிறார்.

        இத் தொகுப்பு, சிங்களவர்களாகிய நாம் எல்லோருமே படிக்க வேண்டிய ஒரு புத்தகம். ஒரு பயனுமற்ற, இன வாத யுத்தத்தினால் நாம் எல்லோருமே எவற்றையெல்லாம் இழந்திருக்கிறோம் என்பதை இப் புத்தகத்தை வாசிக்கும்போது உணர்கிறோம். நேசித்த இளைஞன், யுவதி, நேசத்தைக் கூறி விட முடியாமல் போன நபர், தந்தை, தாய், குழந்தைகள், கல்வி, பொருளாதாரம் போன்ற அனைத்தையுமே ஒரு பயனுமற்ற இந்த யுத்தத்துக்காக இரு தரப்பினருமே இழந்திருக்கிறோம்.

       குறுகிய அரசியல் இலாபங்களுக்காக, எமது தேசத்தில் இன வாதத்தைப் பரப்பிய அரசியல்வாதிகள் சுகமாக வீட்டுக்குள்ளிருக்க, அப்பாவி சிங்கள, தமிழ் இளைஞர், யுவதிகள் ஆயுதங்களைக் கையிலேந்தினர். இந்த உண்மையை இன்றும் கூட புரிந்து கொள்ளாத எம் மக்கள், இப்பொழுதும் கூட அந்த அரசியல் ஒப்பந்தங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றனர். தமிழினியைப் போன்ற ஆயிரக்கணக்கான சிங்கள, தமிழ் இளைஞர் சமுதாயம் அதற்காக நஷ்ட ஈட்டைச் செலுத்திக் கொண்டிருக்கின்றனர். தமிழினியின் இப் படைப்பை அனைவரும் வாசித்து உணர்வதை வரவேற்கிறேன்.”

    இப் பெறுமதியான தொகுப்பை பதிப்பித்தமைக்கு பதிப்பாளர் தர்மசிறி பண்டாரநாயக்கவுக்கு நன்றி கூறுகிறார் வாசகர் ஜயந்த கஹடபிடிய.


  “நேற்று இரவும், இன்று மாலையும் தமிழினியின் தொகுப்புடனே கழிந்தது. புத்தகத்தை வாசிக்கும்போது எனக்கு அவரது மனசாட்சியைக் குறித்தோ, எழுத்து நேர்மையைக் குறித்தோ எந்தச் சிக்கலும் தோன்றவில்லை. ஊடகங்களினூடாக நாம் அறிந்திருந்த தமிழினிக்கும், இந்தத் தமிழினிக்கும் உள்ள வித்தியாசத்தை அறிந்து கொள்ள நீங்கள் இப் புத்தகத்தை வாசித்தே ஆக வேண்டும். அவர் தமிழச்சியோ, புலித் தலைவியோ, தீவிரவாதியோ அல்ல என்பதுவும், உங்களையும் என்னையும் போலவே இப் பூமியில் பிறந்து, இலங்கை வரலாற்றில் ஒரு வித துர்ப்பாக்கியமான, மனிதப் பேரவலமான யுத்தத்துக்கு இரையான ஒரு பெண் அவர் என்பதுவும் புலப்படும். மானிட வரலாறுகள் அவ்வாறான பேரவலங்களால் நிறைந்திருப்பது எவ்வளவு துரதிஷ்டமானது?

    ‘இத் தொகுப்பை பிரசுரிப்பது, நான் செய்த தவறொன்றெனக் கருதாதீர்’
    நான் இந்தப் புத்தகத்தை வாசித்து முடிக்கும்வரை அடக்கி வைத்திருந்த கண்ணீரானது, இப் புத்தகத்துக்கு அதன் பதிப்பாளரான தர்மசிறி பண்டாரநாயக்க வழங்கியிருந்த மேற்படி குறிப்பைக் கண்டதும், வெளியே குதித்தது.

    புற்றுநோயால் அகால மரணமடைந்த தமிழினிக்கும், இலங்கை தேசிய ஒருமைப்பாட்டுக்கும் பெறுமதி சேர்த்த பதிப்பாளரே உங்களுக்கும் நன்றி.”

    பதிப்பாளரின் மேற்படி கூற்று குறித்து வாசகர் மதுரங்க ஃபெர்ணாண்டோவின் கருத்து இவ்வாறு இருக்கிறது.

    “தொகுப்பின் இறுதியில் தர்மசிறி பண்டாரநாயக்கவினால் ‘இத் தொகுப்பை பிரசுரிப்பது, நான் செய்த தவறொன்றெனக் கருதாதீர்’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் வாசகமானது, பால் குடத்தை எடுத்து அதில் சாணத் துளியொன்றைக் கலந்தது போலுள்ளது. அவர் அவ்வாறு எழுதியது சில அரசியல்வாதிகளுக்கோ அல்லது எதையும் ஆராய்ந்து பார்க்காமல் கருத்துக்களைப் பரிமாறும் எமது தேசத்தின் ஏனைய மக்களுக்கோ என அறியேன். ஆனால், இந்தப் புத்தகத்துக்கு எதிராக முகப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கும் குறிப்புக்கள், அவற்றைப் பகிரும் மக்கள் மீது எனக்குள்ளே பரிதாபமே தோன்றுகிறது. நிஜமாகவே நாம் அவர்கள் மீது அனுதாபம் காட்ட வேண்டும். ஏனெனில், அவர்கள் உண்மையிலேயே இப் புத்தகத்தை வாசித்திருந்தால், இதன் உள்ளடக்கத்திற்கு, ஒருபோதும் அவர்களால் எதிராக முடியாது என நான் உறுதியாக நம்புகிறேன். அவ்வாறே அந்த அப்பாவி மக்கள், இப் படைப்பை ஆராய்ந்து பார்த்திருந்தால், சந்தேகமேயில்லாது தமிழினியை நேசித்திருப்பார்கள். இதுவரை வாசிக்காதவர்கள், ஒரே மூச்சில் வாசித்து முடித்துவிட முடியுமான இப் புத்தகத்தை எடுத்து வாசியுங்கள்.

           கடந்த கால சிங்கள அரசியல்வாதிகளினது செயற்பாடுகளினால், தமிழ் மக்களுக்கு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைவதைத் தவிர வேறு மார்க்கம் இருக்கவில்லை என்பதையும், விடுதலைப் புலிகள் இயக்கம் எடுத்த சில மோசமான தீர்மானங்கள் மற்றும் செயற்பாடுகளை, அநேகமான இயக்க உறுப்பினர்கள் விரும்பவில்லை எனினும் அவர்களுக்கு வேறு வழியற்றுப் போன விதத்தையும், அவர்கள் சிங்கள மொழியை அறிந்திராததாலும், நாம் தமிழ் மொழியை அறிந்திராததாலும், இனப் பிரச்சினை உக்கிரமடைந்ததையும் அவர் மிகச் சிறப்பான முறையில் முன் வைக்கிறார்.

          இத் தொகுப்பானது, ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, அரசாங்கத்தின் அனுசரணையோடு பதிப்பிக்கப்பட்டு, சர்வதேச அளவில் கொண்டு செல்லப்பட வேண்டுமென எனக்குத் தோன்றுகிறது. ஏனெனில் தமிழினி இத் தொகுப்பை மிகவும் நடுநிலை மனப்பான்மையோடு, நேர்மையாக எழுதியிருக்கிறார். சர்வதேசத்திடம் முன்வைக்க வேண்டிய அனைத்து பதில்கள் மற்றும் உண்மையான இனப் பிரச்சினை குறித்து அவர் சிறந்த வாசிப்பொன்றை இங்கு முன் வைத்திருக்கிறார்.”

        “ந்தத் தொகுப்பை வாசித்தேன். தமிழினி மீது எனக்கு மிகுந்த அனுதாபம் தோன்றியது. போரின் மீது நம்பிக்கை கொண்டு, அதை நடத்திச் சென்ற போதும், இறுதியில் தனது தவறை உணர்ந்து சுய விமர்சனம் செய்ய அவருக்கு சக்தியிருந்திருக்கிறது. புனர்வாழ்வு நடவடிக்கைகளின் பின்னர், சமூகத்தோடு இணைந்து, திருமணமாகி, தொடர்ச்சியாக வாழ்க்கையைக் கொண்டு செல்லும் வாய்ப்பு, துரதிர்ஷ்டமாக அவரிடமிருந்து நழுவியது. வாழ்வின் இறுதித் தருணங்களில் தனது இதயத்திலிருந்த வன்மத்தை அகற்றி, சமாதானத்தின் பாதையில் உண்மையாகவே அவர் நெருக்கமாகியிருக்கிறார் என எனக்குத் தோன்றுகிறது” என்கிறார்  வைத்தியர் சந்திம பிரதீப்.

    “மிழினியின் இத் தொகுப்பை வாசித்தேன். வாசித்து முடித்த பிறகு மனதில் மிகுந்த அனுதாபம் தோன்றியது. தனது வாழ்க்கையின் சிறந்த காலங்களை தான் கொண்டிருந்த கொள்கைகளுக்காகத் தியாகம் செய்து, அவை தனது கண் முன்பே சிதறிப்போவதைப் போலவே, இன விடுதலைக்காக முன்வந்தவர்கள், இனத்தின் அழிவுக்காக செயற்படுவதைக் கண்ட பொழுது, தனது இதயம் உணர்ந்த சுய பச்சாதாபத்தையும் தமிழினி தெளிவாக விவரித்திருக்கிறார். அவற்றைத் தாங்கிக் கொள்ள அவர் எடுக்கும் முயற்சிகள் மிகவும் அனுதாபமூட்டக் கூடியவை.


   எவ்வாறாயினும் ஆகக் கடைநிலையிலுள்ள போராளிகள் கூட அவர்களது தலைவரை அபரிமிதமாக நம்புவதன் மூலம் அவர்களது அழிவை நெருங்கி விடுகிறார்கள். சிங்கள மக்களுக்கும் இது பொதுவானது. நாங்களும், எப்போதும் எமது அரசியல்வாதிகளை நம்பி எமது அழிவைத் தேடிக் கொண்டிருக்கிறோம். இரு சாராரும் ஒன்றுதான். அவர்களும் எமது தேசத்தின் ஒரு சமூகம்.

    கடைநிலைப் போராளி மீது, புதுக் கோணத்தில் பார்க்க இத் தொகுப்பு எம்மைத் தூண்டுகிறது. தமிழினி இத் தொகுப்பில் எந்தப் பொய்யையும் எமக்குக் கூறவில்லை என்பதை ஆணித்தரமாக நம்ப முடிகிறது. ஏனெனில், அவர் இத் தொகுப்பை, புற்று நோயில் பாதிக்கப்பட்டு, மரணம் நெருங்க நெருங்க எழுதியிருக்கிறார். மரிக்கப் போகும் எவரும் ஒருபோதும் பொய் கூறுவதில்லை.

      இதில் பதிப்பாளரின் கூற்றும் கவலையைத் தருகிறது. சிங்கள வாசகர்கள் இத் தொகுப்பை எவ்வாறு ஏற்றுக் கொள்ளக் கூடுமென அவர் பயந்திருப்பார். எவ்விதம் இருந்தாலும், தமிழினி எமது தேசத்தைச் சேர்ந்த, எமது சகோதரியின் கதையை எழுதியிருக்கிறார். அதைப் புரிந்து கொள்வது உங்கள் கையிலேயே இருக்கிறது. இது, வாசித்து முடித்ததும் எனக்குத் தோன்றிய விதம்.

      இத் தொகுப்பினால் கிடைக்கும் வருமானம், புற்று நோய் வைத்தியசாலைக்குச் செல்கிறது எனக் கூறப்பட்டிருப்பதால், புத்தகத்தை வாங்கியதில் பல மடங்கு சந்தோஷம். அனைவரையும் இத் தொகுப்பை வாசிக்கும்படி கூறுகிறேன். ஏனெனில், எமது கொள்கைகளுக்கு மாற்றமாக இருந்த போதிலும், இது நம்மவர் செய்த அளவிலாத் தியாகங்கள் குறித்த வரலாறு” என புதிய வாசகர்களையும் இப் புத்தகத்தை வாங்கி வாசிக்கும்படி தூண்டுகிறார் வாசகர் இரோஷன் ஸ்ரீ டயஸ்.

    இவரது கருத்துக்கு வாசகி டயானா சமன்மலீ இவ்வாறு பதிலளிக்கிறார்.

    “நானும் இத் தொகுப்பை வாங்கினேன். வாசித்தேன். உங்கள் கருத்தோடு நான் முழுமையாக ஒத்துப் போகிறேன். அம் மக்களது வாழ்க்கையின் இளமைக் காலம் முழுவதும் இவ்வாறான கொள்கைகளுக்காகவே கரைந்து போயிருக்கிறது. தாம் செல்லும் வழி தவறானது என உணரும்போது அவர்களால் மீளத் திரும்ப முடியவில்லை. நீண்ட தூரம் பயணித்து விட்டார்கள். அநேகமான விடுதலைப் புலி போராளிகளது வாழ்க்கைச் சரிதம் இவ்வாறுதான் இருக்கக் கூடும். எல்லோருமே இத் தொகுப்பை வாசிக்க வேண்டும்.”

    “தொகுப்பை வாசித்து முடிக்கும்போது வார்த்தைகளில் விவரிக்க இயலா பல எண்ணங்களால் இதயம் நிறைந்து போயிற்று. சிலருடைய கொள்கைகளுக்காக வேண்டி, அப்பாவி மக்கள் முகம் கொடுக்க நேர்ந்தவை குறித்து மிக அருமையாக எழுதப்பட்டிருக்கிறது.

    விடுதலைப் புலிகள் இயக்கத்தின் எழுச்சி, இயக்கம் பலப்பட்ட விதம், யுத்தங்கள் நடந்த விதம், இறுதி யுத்தத்தில் அனேகமானவர்கள் உண்மையை உணர்ந்து கொண்ட விதம், இராணுவத்தின் நடவடிக்கைகள் போல பலவித விடயங்களை அறிந்து கொள்ள முடியுமான தொகுப்பு இது. மீண்டும் இவ்வாறான, துரதிஷ்டவசமான நிகழ்வுகளுக்கு, இத் தேசம் முகம் கொடுக்கும் சந்தர்ப்பங்கள் நேரக் கூடாது என்பதே எனது பிரார்த்தனை. அதற்கு அனைத்து இலங்கையரும் கட்டாயமாக வாசிக்க வேண்டிய புத்தகம் இது” என ஆணித்தரமாக தனது கருத்தை எடுத்துரைக்கிறார் வாசகி பூர்ணிமா சமரசேகர.

    வாசகர் பாக்ய கந்தஉடவின் கருத்து வேறொரு கோணத்தில் அமைகிறது.

    “விடுதலைப் புலிகள் இயக்கமானது, தோற்றுப் போனதன் பிறகு, தமிழினியின் வீழ்ச்சியும் தெளிவாகிறது. புற்று நோயோடு அது இன்னும் அதிகரித்திருக்கும். எவ்வாறாயினும், விடுதலைப் புலிகள் இயக்கப் பெண் போராளிகள், மிகுந்த தியாகங்களைச் செய்திருப்பவர்கள் என்பது நிரூபணமாகியிருக்கிறது. ஆனாலும், அது ஒரு விடுதலை இயக்கமல்ல. அதன் இலக்கு, ஒரு தனி நாடு. அடுத்ததாக ஒரு விடுதலை இயக்கம் ஒருபோதும், பொதுமக்களை இலக்காகக் கொண்டு, குண்டு வெடிக்கச் செய்வதில்லை. (உதாரணம் கோட்டை குண்டுத் தாக்குதல்). அது போலவே பிரபாகரனை கடவுளெனக் கருதி, இயக்கத்தைத் தீர்மானிப்பதுவும் பிழை”.

    “ல்ல நோக்கத்தைக் கொண்டிருந்த மக்களும் கூட, போராட்டம் எனச் சொல்லிக் கொண்டு பிரபாகரன் எனும் ஏகாதிபத்தியவாதியிடம் சென்றிருக்கிறார்கள். போராட்டத்தின் வழிமுறைதான் பிழை. அதைப் பற்றி, பிரபாகரனின் சுயரூபம் குறித்து தமிழினி கூறியிருக்கிறார். இலங்கையில் வெளியாகியுள்ள மிகப் பெறுமதியான தொகுப்பு இது.

    அம் மக்கள் இன்னும் கூட அவர்களது சுயாதீனத்தையே யாசிக்கிறார்கள். அவர்களுடைய உரிமைகள் குறித்து தெற்கிலிருப்பவர்கள் இன்னும் சிந்திக்க வேண்டும். பெரும்பான்மை மனப்பாங்கு இருக்கும்வரை, அவர்களுக்கு அவர்களது உரிமைகள்  கிடைக்கப் போவதில்லை. சிறுபான்மையாக இருப்பதால் அவர்கள் உணரும் மனப்பான்மைக்கு அரசியல் தீர்வொன்று வேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் பிரபாகரன்கள், தமிழினிகள் உதித்துக் கொண்டேயிருப்பார்கள்.

                      அவர்களுக்கு மிகவும் பொருத்தமான வழிமுறையை அமைத்துக் கொடுப்பது தெற்கிலுள்ள அரசியல்வாதிகளின் கடமை. தமிழர் கூட்டமைப்பானது, அம் மக்களின் பிரச்சினைகளை விற்று, கட்சியை நிலைநிறுத்திக் கொள்வதையே செய்து கொண்டிருக்கிறது. அப் பிரச்சினைகள் இல்லாத நாள் வந்தால், அந் நாளானது தமிழர் கூட்டமைப்பினதும் இறுதி நாள் என்பது அவர்களுக்குத் தெரியும்.” என்று வாசகர் பாக்ய கந்தஉடவுக்கு பதிலளிக்கிறார் வாசகர் ஜெயவர்தன.


   “ந்தத் தொகுப்பை எல்லோரும் வாசிக்க வேண்டும். எமக்குத் தெரிந்திராத, நாம் நினைத்துக் கூடப் பார்த்திராத பல விடயங்களை இத் தொகுப்பிலிருந்து அறிந்து கொள்ள முடியும். எமது தேசம் இழந்த பெறுமதியான உயிர்களைக் குறித்து மிகுந்த கவலை தோன்றுகிறது” இது வாசகி உதேஷி மதுபாஷியின் கருத்து.

தனது தாத்தாவிடமிருந்து தனக்குக் கிடைத்த மிகப் பெறுமதியான அன்பளிப்பு இந்தப் புத்தகம்தானென இளம் வாசகியான மாஷி விமலசூர்ய குறிப்பிடுகையில், ‘சமூகத்திற்கு ஒரு விலை மதிக்க முடியாத புத்தகம் இது’ எனக் கூறுகிறார்கள்  இளைஞர்கள் அஸித் கோசல மற்றும் நளின் கல்கந்த ஆரச்சி.


    ந்த இளைஞர், யுவதிகளையெல்லாம் ஒன்றுபடுத்தியிருப்பது தமிழினி எழுதிய இப் புத்தகம். பொதுவாகவே சிங்கள சமூகத்தில் புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து வாசிப்பதென்பது ஒரு தியானத்துக்கு இணையாக கௌரவிக்கப்படுகிறது.
புத்தகங்களை வாசிக்காத இளைஞர், யுவதிகளைக் காண்பது அரிது. அவற்றுக்காக நிறைய செலவழிக்கிறார்கள். புத்தக நிலையங்களில், பண வசதியற்ற மாணவர்களுக்கு புத்தக விற்பனை நிலையத்திலிருந்தே புத்தகங்களை வாசித்து விட்டுப் போக அனுமதியளிக்கிறார்கள். ஏப்ரல் மாதத்தில், சிங்கள புத்தாண்டைக் கொண்டாடிய பிறகு, செப்டம்பர் மாதம் வரவிருக்கும் சர்வதேச புத்தகக் கண்காட்சியில் புத்தகங்களை வாங்குவதற்காக பணத்தை அப்போதிலிருந்தே சேமிக்கத் தொடங்குகிறார்கள்.
தமக்கு வாங்கத் தேவைப்படும் புத்தகங்களின் பட்டியலை எப்போதும் கையில் வைத்திருக்கிறார்கள். இப்போதெல்லாம் அநேகரது பட்டியல்களில் முதன்மையாக இருப்பது தமிழினியின் இப் புத்தகம்தான்.

             தமிழினியின் இந்தத் தொகுப்பு, இலங்கையிலுள்ள அனைத்து சிங்கள புத்தக நிலையங்களிலும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. அத்தோடு, செப்டம்பர் மாத சர்வதேச புத்தகக் கண்காட்சியில் அதிகம் விற்கப்படவிருக்கும் புத்தகப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. இவற்றுக்கும் மேலதிகமாக, இலங்கையில் விற்கப்படும் இத் தொகுப்பினால் இன்னுமொரு நன்மையும் விளைந்து கொண்டேயிருக்கிறது. அதை தமிழினி விதைத்து விட்டுச் சென்றிருக்கிறார்.


              அவரது சுயசரிதத் தொகுப்பின் சிங்கள மொழிப் பிரதிகளை விற்று வரும் வருமானத்தை முழுமையாக, இலங்கை, மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்குக் கொடுக்கும்படி கூறியிருக்கிறார் தமிழினி. அதன் பிரகாரம், அதுவரையில் அவரது தொகுப்பின் பிரதிகளை விற்றுக் கிடைத்த வருமானமான மூன்று இலட்சம் ரூபாய்களை ஆகஸ்ட் மாதம் புற்றுநோய் வைத்தியசாலைக்கு நன்கொடையாக அளித்துள்ளார் அவரது கணவர் ஜெயக்குமாரன். மிகவும் வரவேற்கத்தக்கதொரு தீர்மானம் இது.

           எதிர்வரும் காலங்களில் இத் தொகுப்பு இலங்கையில் இன்னுமின்னும் விற்பனையாகும். அந்த வருமானமும் கூட புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நன்கொடையாகச் சென்று கொண்டேயிருக்கும். ‘யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்’ என தமிழில் ஒரு பழமொழி உண்டு. தமிழினி எனும் பெயரைப் பார்க்கும்போதெல்லாம் அவரது இந் நற்செயல்தான் நினைவுக்கு வருகிறது. நல்லெண்ணத்தோடு அவர் விதைத்துள்ள விதை, விருட்சமாகி என்றென்றும் வசந்தத்தைப் பொழியட்டும், எல்லோருக்குமாக !

- எம்.ரிஷான் ஷெரீப்
mrishanshareef@gmail.com

நன்றி
# அம்ருதா மாத இதழ், விடிவெள்ளி வார இதழ், த ஹிந்து, பதிவுகள் இணையத்தளம், பெண்ணியம் இணையத்தளம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக