புதன், 1 பிப்ரவரி, 2017

செயற்கை சிறுநீரகம் பாவனைக்கு வருகிறது .. கிட்னி பிரச்னைக்கு விடிவு... அதிக தூரத்தில் இல்லை


சிறுநீரக பாதிப்பு மிகப்பெரிய வியாதியாக உருவெடுத்துள்ளது.  நாட்டின் மக்கள் தொகையில் சில சதவீதம் பேர் சிறுநீரக நோய் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக கூறப்படுகிறது.< சாதாரணமாக ஒரு நோயாளிக்கு சிறுநீரகம் செயலிழந்து விட்டால் அவருக்கு டயாலிசிஸ் செய்ய வேண்டும். வாரம் இரண்டு அல்லது மூன்று முறை டயாலிசிஸ் கட்டாயம் செய்ய வேண்டும். வாழ்நாள் முழுவதும் இதை தொடர வேண்டும். ஒரு முறை டயாலிசிஸ் செய்வதற்கு சுமார் சில  ஆயிரம் ரூபாய் செலவாகும்.
டயாலிசிஸ் என்பது உடலில் ஊசி குத்தி ரத்தத்தை வெளியே எடுத்து எந்திரம் மூலம் சுத்திகரித்து மீண்டும் உடலுக்குள் அனுப்புவது. இதனால் ஊசி குத்தும் வேதனையை அனுபவிக்க வேண்டும். இதற்கு மாற்றுவழி சிறுநீரக மாற்று ஆபரேசன். இது இன்னொருவரிடம் இருந்து சிறுநீரகத்தை தானமாக பெற்று உடலுக்குள் பொருத்துவதாகும்.< ஆனால் சிறுநீரக தானம் கிடைப்பது எளிதான வி‌ஷயமல்ல. ரத்த சொந்தங்கள், ரத்த பிரிவினர்  மட்டுமே தானமாக வழங்க முடியும். மேலும் விபத்துக்களில் உயிரிழப்பவர்களின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்படும் போதும் கிட்னி கிடைக்கும். இருந்தாலும் தேவையான அளவு கிட்னிகள் தானம் கிடைப்பதில்லை. இதனால் பல நோயாளிகள் உயிரிழக்கும் பரிதாபமும் ஏற்படுகிறது.

இதய பாதிப்புக்கு ‘பேஸ் மேக்கர்’ கருவி பொருத்தப்படுவது போல் சிறுநீரகம் செயலிழந்தால் பொருத்துவதற்கு செயற்கை சிறுநீரகம் கண்டுபிடிக்க மாட்டார்களா? என்ற ஏக்கம் சிறுநீரக பாதிப்பால் தவிப்பவர்களிடம் இருக்கிறது.

அவர்களது ஏக்கம் நிறைவேறும் காலம் நெருங்கி கொண்டிருக்கிறது. 15 ஆண்டுகளுக்கும் மேலாக கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பல கோடி செலவிட்டு நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் செயற்கை சிறுநீரகத்தை வில்லியம் பி‌ஷல், சுவோராய் ஆகியோர் கண்டுபிடித்துள்ளனர்.

கையடக்கமான  இந்த கருவி, காபி கப் அளவில் நானோ தொழில் நுட்ப முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்படும் மைக்ரோசிப்பை பயன்படுத்தி அதில் சிறுநீரக முடிச்சுகளில் இருந்து திசு செல்களை எடுத்து சல்லடையில் தேனடை உருவாக்குவது போல் செல்களை வளர வைக்கிறார்கள்.

பின்னர் அந்த எந்திரத்தை அடிவயிற்றுக்குள் வைத்து சிறுநீரக ரத்த நாளங்களுடன் இணைத்து பொருத்தி வைத்து விடுவார்கள். இந்த செயற்கை கருவி ரத்த சுத்திகரிப்பு மட்டுமின்றி இயற்கையாக சிறுநீரகம் செய்யும் வேலைகளை செய்யும்.

பரீட்சார்த்த முறையில் இந்த கருவி இதுவரை 12 நோயாளிகளுக்கு பொருத்தி சோதனை செய்யப்பட்டுள்ளதாக சென்னையில் நடைபெற்ற டேங்கர் பவுண்டே‌ஷன் விழாவில் கலந்து கொண்ட டாக்டர் சுவோராய் தெரிவித்தார்.

இவர் கலிபோர்னியா பல்கலைகழகத்தில் இந்த கருவி ஆராய்ச்சி பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளார். அவர் மேலும் கூறும்போது, “100 நோயாளிகளிடமாவது இந்த கருவியை பொருத்தி சோதனை செய்ய வேண்டும். பாதுகாப்பு சோதனை அடுத்த ஆண்டு தொடங்கும். அடுத்த 3 ஆண்டுகளில் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கிறோம்” என்றார்.

இந்த கருவி பயன்பாட்டிற்கு வந்ததும் சிறுநீரக மாற்றுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய கண்டுபிடிப்பு பற்றி சென்னையில் உள்ள பிரபல சிறுநீரக மாற்று சிகிச்சை நிபுணர் டாக்டர் சவுந்தரராஜன் கூறியதாவது:-

நம்நாட்டில் 1½ முதல் 2 லட்சம் பேருக்கு ஆண்டு தோறும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. ஆனால் சுமார் 20 ஆயிரம் பேருக்குத்தான் சிறுநீரகங்கள் கிடைக்கிறது. மற்றவர்கள் டயாலிசிஸ் மூலமாகத்தான் வாழ்நாளை கழிக்கிறார்கள்.

இந்த செயற்கை சிறுநீரக கண்டுபிடிப்பு அரிய சாதனையாகும். இன்னும் சோதனை நிலையில் இருக்கும் இந்த கருவி இதுவரை மனித பயன்பாட்டுக்கு வரவில்லை.

உரிய அங்கீகாரத்துடன் இந்த கருவி பயன்பாட்டுக்கு வரும்போது சிறுநீரக நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என  அவர் கூறினார்.  முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக