புதன், 1 பிப்ரவரி, 2017

பணமதிப்பு இழப்பு பொருளாதாரத்தில் மோசமான தாக்கம் ... மத்தியரசு முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது

மோதி அரசின் சர்ச்சைக்குரிய செல்லாநோட்டு அறிவிப்பு பொருளாதாரத்தின் மீது ``மோசமான தாக்கத்தை” ஏற்படுத்தியது என்று அரசு ஒப்புக்கொண்டிருக்கிறது. அரசால், வருடாந்திர பட்ஜெட்டுக்கு முதல் நாளான இன்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட `பொருளாதாரக் கண்ணோட்டம்` இந்த செல்லநோட்டு அறிவிப்பு, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மந்தப்படுத்திவிட்டது என்று கூறியது.
மோதி அரசு 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை கடந்த நவம்பர் 8ம் தேதி செல்லாததென அறிவித்தது.
செல்லாத நோட்டு நடவடிக்கை: நியாயங்கள், நோக்கங்கள், விளைவுகள்
கறுப்புப்பணத்தை ஒழிக்கவும், ஊழலுக்கு எதிராகவும், பயங்கரவாதத்துக்கு நிதி அளிப்பதைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை என்று அரசு கூறியது.
ஆனால் இந்த நடவடிக்கையின் விளைவாக, பண நோட்டுப் பற்றாக்குறை ஏற்பட்டு, தனி நபர்களையும், வர்த்தக நிறுவனங்களையும் பாதித்தது.
இந்த ஆண்டு மார்ச் வரை இந்தியப் பொருளாதாரம் 6.5 சதவீதம்தான் வளரும் என்று இந்த அறிக்கை கணித்துள்ளது.இந்த கணிப்பு, கடந்த நிதியாண்டில் ஏற்பட்ட வளர்ச்சியான 7.6 சதவீதத்திலிருந்து குறைவானதாகும்.
ஆனால் இந்த கணிப்பு செல்லாநோட்டு அறிவிப்புக்கு முன் இருந்த தரவுகளை பிரதானமாக அடிப்படையாகக் கொண்டு அமைந்திருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது.


"கறுப்பு பணத்தை வணங்குவோர்" தான் ரூபாய் நோட்டு விவகாரத்தை விமர்சிப்பர்
எனவே, சிலர், உண்மையில் வளர்ச்சி என்பது இதைவிட குறைவானதாக இருக்கக்கூடும் என்று அஞ்சுகிறார்கள்.
நாளை புதன் கிழமை இந்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவிருக்கும் இந்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, பொருளாதாரம் , பண நோட்டுகள் புதிதாக அச்சிடப்பட்டு சந்தையில் விடப்பட்ட பின், மார்ச் மாதத்திலிருந்து ``இயல்பு நிலைக்குத் திரும்பும்`` என்று தான் எதிர்பார்ப்பதாகக் கூறினார்.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் தடையை எதிர்த்து எதிர்கட்சிகள் இன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்
செல்லா நோட்டு அறிவிப்பால் ஏற்பட்ட எதிர்மறைத் தாக்கம் என்பது ``தற்காலிகமானதாக இருக்கும்`` என்று இந்த அறிக்கையை எழுதிய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியன் கூறினார். செல்லாநோட்டு அறிவிப்பு பொருட்களுக்கான கேட்பை ( கிராக்கியை) குறைத்து, நிச்சயமற்ற தன்மையை அதிகரித்ததால், வளர்ச்சி மந்தமடைந்தது `` என்றார் அவர்
ஆனால் , ஊழல் குறைந்து , ரொக்க பரிவர்த்தனையும் குறைந்தால், இந்த திட்டம் ``நீண்ட கால தொலைநோக்கில்`` பார்த்தால் அனுகூலமானதாக இருக்கும் என்று அந்த அறிக்கை கூறியது.
``இந்த அறிக்கை ( செல்லாநோட்டு அறிவிப்பின்) எதிர்மறைத் தாக்கத்தை ஒப்புக்கொண்டிருப்பது திருப்தியளிக்கிறது ``, என்றார் ஐ.டி.பி.ஐ பெடரல் என்ற வங்கியின் தலைமை முதலீட்டு அலுவலர் அனீஷ் ஸ்ரீவத்சவா.
இதுதான் இந்த விஷயத்தில் அரசு முதன் முறையாக இதை ஒப்புக்கொள்வதாக இருக்கிறது - இதற்கு முன்பெல்லாம் அரசு இதை மறுத்தே வந்தது, என்றார் அவர்.  bbc.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக