புதன், 1 பிப்ரவரி, 2017

ஜெயா இங்கிலீஷ் பேசினால் அறிவாளியா ? சர்வாதிகாரியாக இருந்திருந்தால் அண்ணா நூலகத்தை யாழ்ப்பாண நூலகம் போல

ஒரு சர்வாதிகாரிக்குரிய அதிகாரம் ஜெயாவிற்கு இருந்திருக்குமானால், யாழ்ப்பாணம் நூலகத்தைச் சிங்கள இன வெறியர்கள் எரித்துச் சாம்பலாக்கியதைப் போல, அண்ணா நூலகத்தைத் தரை மட்டமாக்கவும் தயங்கியிருக்கமாட்டார்.
படப்பிடிப்பு நேரங்களில்கூட புத்தகமும் கையுமாக இருப்பார். அவரது வீட்டில் பிரமாதமான புத்தகங்கள் அடங்கிய நூல் நிலையம் இருக்கிறது என்பார்கள். அதனை அம்மா நூலகமாக மாற்றுங்கள்.’’ (தமிழ் இந்துவில் வாசகர் கடிதம், 10.12.16)
"ஜெயா படிப்பாளி எனக் காட்டுவதற்கு ஊடகங்கள் உருவாக்கிய சான்று. " ;ஜெயா இங்கிலீஷ் பேசினால் அறிவாளியா ?;காலனிய அடிமை மனோபாவம் காரணமாக, பட்லர் இங்கிலிஷ் பேசுபவனைக்கூட அறிவாளியாகப் பார்க்கும் மூடத்தனம் நமது நாட்டு நடுத்தர வர்க்கத்தின் பொதுப் புத்தியில் உறைந்து போயிருக்கிறது. இந்த ஒரு பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டே ஜெயாவைப் பெரிய படிப்பாளியாக தமிழக மக்களின் முன் நிறுத்தியிருக்கிறது, தமிழகத்துப் பார்ப்பனக் கும்பல். மேட்டுக்குடி குடும்பத்தில் பிறந்து, கான்வெண்டில் படிக்கும் பணக்கார குலக்கொழுந்துகள் போலவே ஜெயாவும் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசும் திறன் கொண்டிருந்தது வியப்பிற்குரிய விசயமல்ல.
அது போல, ஒரு நடிகைக்குப் பல மொழிகள் பேசத் தெரிந்திருப்பதும் அதிசயமான விசயமல்ல. எனினும், இந்த உப்புப் பெறாத விசயத்தை வைத்துக்கொண்டு, மற்றவர்களுக்குக் கைவரப் பெறாத தனித் திறமை ஜெயாவிடம் இருப்பதைப் போலக் காட்டி, அவரை அதிபுத்திசாலியாகவும், புத்திகூர்மை மிக்கவராகவும் புகழந்து தள்ள முடியுமென்றால், ஆங்கிலம் உள்ளிட்டுப் பல மொழிகளைப் பேசக்கூடிய டூரிஸ்டு கைடுகளைக்கூட அறிவாளிகளாக, பன்மொழிப் புலமைமிக்கவர்களாகக் கூறலாம்.
ஜெயாவின் அறிவுத் தரம் என்னவென்பதை அவரது ஆட்சியின் அலங்கோலங்களே எடுத்துக் காட்டுகின்றன. அவரிடம் வெளிப்பட்ட ஆணவ, பொறுக்கிப் பண்பாடோ தமிழகத்தையே கூசிப் போக வைத்தது. கட்சி தொடங்கி சட்டமன்றம் வரையிலான நிறுவனங்களைத் தனது துதி பாடும் பஜனை மடங்களாக மாற்றியதோடு, கட்சி உறுப்பினர் தொடங்கி அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் வரையிலான ஆட்சியாளர்களையும் காலில் விழ வைத்து ரசித்தார். அம்மா, அன்னலெட்சுமி, புரட்சித் தலைவி, நிரந்தர முதல்வர் என்றெல்லாம் பலவாறாகத் தன்னைப் பற்றி, தனது முகத்துக்கு நேராக எடுபிடிகளும் விசுவசாசிகளும் புகழ்ந்து தள்ளுவதை சிரித்தபடியே ரசிக்கும் வக்கிர மனோபாவத்தைத்தான் சாகும் வரையிலும் வெளிப்படுத்தினார்.

ஜெயாவின் காழ்ப்புணர்ச்சி காரணமாகப் புறக்கணிக்கப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் காலியாக உள்ள புத்தக அலமாரிகள்.
தனது எடுபிடிகள் தன்னைப் புகழுவதை மட்டுமல்ல, எதிர்த்தரப்பு குறித்து அக்கும்பல் கொச்சையாக வசைபாடுவதையும் கூட ரசித்து மகிழும் கேவலமான குரூர புத்தியைக் கொண்டிருந்தார். குறிப்பாக, தி.மு.க. தலைவர் கருணாநிதியை, அவரது சாதியைச் சொல்லிக் கேவலப்படுத்திச் சட்டமன்றத்திலேயே வளர்மதி பேசியதை ரசித்து, ‘‘நயத்தக்க நாகரிகத்தை வெளிப்படுத்திய பண்பாளர்தான்’’ ஜெயா. வளர்மதியே பரவாயில்லை என நினைக்கும் அளவிற்கு, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தைக் குடிகாரன் எனச் சட்டமன்றத்திலேயே கேவலப்படுத்திப் பேசியவர்தான் ஜெயா.
போயசு தோட்டத்திலிருந்து சட்டமன்றத்திற்குப் போனாலும், பொதுக்கூட்டங்களுக்குச் சென்றாலும், தனக்காக மக்களின் நடமாட்டத்தை, போக்குவரத்தை நிறுத்தி வைத்து, மக்கள் அனைவரையும் கிள்ளுக்கீரையாக நடத்தினார். செல்லும் வழியெங்கும் தனக்காக வைக்கப்படும் பிரம்மாண்ட கட்−அவுட்டுகளை எண்ணிப் பார்த்து ரசித்தார். கடந்த சட்டமன்றத் தேர்தலின்பொழுது அவர் உரையாற்றிய பொதுக்கூட்டங்களில் மக்கள் வெயிலில் வெந்து, நாவறண்டு செத்தபொழுது, மேடையில் தன்னைச் சுற்றி ஏழெட்டு ஏர்−கூலர்களை வைத்துக்கொண்டு மக்களை ஏளனம் செய்தார்.
பொய்யும் பித்தலாட்டமும் அவரோடு ஒட்டிப் பிறந்தவை. கருணாநிதி அரசு தன்னை லாரி ஏற்றிக் கொல்ல முயற்சித்ததாக ஒரு அனுதாப சீனை உருவாக்கினார். கவர்னர் சென்னாரெட்டி தன் கையைப் பிடித்து இழுத்ததாகக் கூச்சமின்றி ஒரு அவதூறை அவிழ்த்துவிட்டார். 2016 சட்டமன்றத் தேர்தலின்போது தமிழகத்தை மின் மிகை மாநிலமாக மாற்றிவிட்டேன் என்றொரு அண்டப்புளுகை, மோசடியைப் பிரச்சாரமே செய்தார்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, சென்னையில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் தி.மு.க. ஆட்சியில் திட்டமிடப்பட்டுக் கட்டப்பட்டது என்பதாலும், தான் தலைமைச் செயலகம் கட்டத் திட்டமிட்டிருந்த இடத்தில் கருணாநிதி அண்ணா நூலகத்தைக் கட்டிவிட்டார் என்பதாலும், அந்த நூலகத்தைத் திருமண மண்டபமாக மாற்ற முயன்றார், ஜெயா. அவரது அந்தக் காழ்ப்புணர்ச்சி கொண்ட நோக்கத்தை சென்னை உயர்நீதி மன்றம் தடுத்தவுடன், அந்த நூலகத்தை முறையாகப் பராமரிக்காமல் படிப்படியாக அழியும் நிலைக்குத் தள்ளி வருகிறது அ.தி.மு.க. அரசு. தி.மு.க. அரசால் தொடங்கப்பட்ட செம்மொழி ஆராய்ச்சி நிறுவனத்தைக் குப்பைத் தொட்டியாகவே மாற்றிவிட்டது.
ஜெயாவின் பிறந்தநாளையொட்டி அவரது உருவத்தை ஒரு சிறுமியின் கையில், அவரது கதறலைப் பொருட்படுத்தாமல் பச்சைக் குத்தும் அராஜகக் கூத்து.
ஜெயாவின் பிறந்தநாளையொட்டி அவரது உருவத்தை ஒரு சிறுமியின் கையில், அவரது கதறலைப் பொருட்படுத்தாமல் பச்சைக் குத்தும் அராஜகக் கூத்து.
ஒரு சர்வாதிகாரிக்குரிய அதிகாரம் ஜெயாவிற்கு இருந்திருக்குமானால், யாழ்ப்பாணம் நூலகத்தைச் சிங்கள இன வெறியர்கள் எரித்துச் சாம்பலாக்கியதைப் போல, அண்ணா நூலகத்தைத் தரை மட்டமாக்கவும் தயங்கியிருக்கமாட்டார்.
பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்துக் குரல் எழுப்பப்பட்டு வரும் சூழலில், ஜெயாவோ, தனது வசதிக்காக, சென்னையில் உள்ள இராணி மேரி பெண்கள் கல்லூரியை இடித்துவிட்டு, அங்கே புதிய தலைமைச் செயலகம் அமைக்கத் திட்டமிட்டார். இதனை எதிர்த்து அக்கல்லூரி மாணவிகள் உள்ளிருப்புப் போராட்டத்தை நடத்தத் தொடங்கினர். அப்போராட்டத்தில் முன்னணியில் நின்ற மாணவிகளின் வீடுகளைத் தேடிப் போன ஜெயா போலீசு, ‘‘போராட்டத்திலிருந்து விலகவில்லை என்றால், உங்கள் மகள் மீது விபச்சார வழக்குப் போடுவோம்’’ என மிரட்டியது. எப்பேர்பட்ட பண்பட்ட ஆட்சி!
உங்கள் நண்பர்களைச் சொல்லுங்கள், உங்களைப் பற்றிச் சொல்லுகிறோம் என்றொரு பழமொழி உண்டு. ஜெயாவிற்கும் சசிகலாவிற்கும் இடையேயான நெருக்கமான நட்பிற்கு அடித்தளம் போட்டது சினிமா வீடியோக்கள்தானேயொழிய, இலக்கிய ரசனை அல்ல. படிப்பாளி ஜெயா மறைந்துவிட்டார். வீடியோ சப்ளை செய்த வியாபாரி, தோழியாகி, போயசு தோட்டத்தின் நிர்வாகியாகி, அ.தி.மு.க.வின் தலைவியாகி, கோட்டைக்குள்ளும் நுழையக் காத்திருக்கிறார்!
–  பச்சையப்பன்
புதிய ஜனநாயகம், ஜனவரி – 2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக