புதன், 1 பிப்ரவரி, 2017

ஓமந்தூர் .பி.ராமசாமியார் ! எளிமையான முதல்வருக்கு பெயர் - ஒ.பி.எஸ் அல்ல... ஓ.பி.ஆர்.

govi Lenin :ஓமந்தூர் ராமசாமியார் பிறந்தநாள்-பிப்ரவரி 1
அவர் வள்ளலார் பக்தர். ஆனால், தாடி இல்லாத ராமசாமி என்றார்கள்.
பெரியார், கறுப்புசட்டை போட்ட ராமசாமி. இவர் வெள்ளை சட்டை போட்ட ராமசாமி என வர்ணித்தார்கள். காரணம், சமூக நீதியை நிலைநாட்டினார். கோவில் நுழைவு அதிகாரச் சட்டம் மூலம் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் இந்துக் கோவில்களில் நுழைவதற்கான உரிமையை சட்டப்பூர்வமாக்கினார். அறநிலைய பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றினார்.
அவரை கம்யூனிஸ்ட் என்றார்கள். காரணம், ஜமீன்தாரி-இனாம்தாரி முறைகளை ஒழிக்க நடவடிக்கை எடுத்தார். விவசாயிகள் நலனுக்குத் துணை நின்றார். அவர் காந்தியவாதிதான் என்பதன் அடையாளமாக, மதுவிலக்கை முழுமையாகக் கொண்டு வந்தார். ஊழல் ஒழிப்பை முதன்மையாக்கினார். அவர்தான், இந்தியா சுதந்திரமடைந்தபோது தமிழகத்தின் (சென்னை மாகாணத்தின்) முதல்வராக இருந்த (ஓ.பி.ஆர்) ஓமந்தூர் பி.ராமசாமியார் (திண்டிவனம் அருகேயுள்ள சொந்த ஊரான ஓமந்தூரில் அவர் நினைவாக மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது)

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பதவி காலியானபோது, அந்த இடத்திற்கு தலைமை நீதிபதி பரிந்துரைத்த வழக்கறிஞர் என்.சோமசுந்தரத்துக்கு முதல்வர் ஓமந்தூரார் ஏற்பளித்தார். ஆனால் பிரதமர் நேருவின் அமைச்சரவையில் இருந்த கோபாலசாமி அய்யங்கார் தனது மருமகனான வழக்கறிஞர் திருவேங்கடாச்சாரியை நீதிபதியாக்க நினைத்தார். ராஜாஜி ஆதரித்தார். பிரதமர் வரை பஞ்சாயத்து போனது. ஓமந்தூராரிடம், “பிராமணரல்லாதார் அரசாங்கத்தை நடத்தப் பார்க்கிறீர்கள்” என்று நேரு குற்றம்சாட்டியபோது, ”நீங்கள் சொன்னதை வாபஸ் வாங்குங்கள். இல்லையென்றால் என் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளுங்கள்” என நேருக்கு நேராக நேருவிடம் சொன்ன துணிச்சல்காரர் ஓ.பி.ஆர்.
வகுப்புவாதியாக (சாதி கண்ணோட்டத்தில்) செயல்படுகிறார் என்று இந்து பத்திரிகை, ஓமந்தூராரைப் பற்றி எழுதியது. உடனே அதன் ஆசிரியரை அழைத்து, உங்கள் அலுவலகத்தில் பிராமணர்கள் எத்தனை பேர் வேலை பார்க்கிறார்கள்? அதில் அய்யங்கார்கள் எத்தனை பேர்? எனக் கேட்டதுடன், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பிற சமூகத்தவர்களுக்கும் வாய்ப்பு கொடுத்திருக்கிறீர்களா? நீங்கள் வகுப்புவாதியா-நான் வகுப்புவாதியா? என ஒரே போடாகப் போட்டார். அதனால்தான் அறிஞர் அண்ணா தனத திராவிட நாடு இதழில், ‘காந்தி ராமசாமியும் பெரியார் ராமசாமியும்’ என எழுதினார்.
இத்தனைக்கும் ஓமந்தூராரின் அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்த அவினாசிலிங்கம், இந்தித் திணிப்பில் காட்டிய வேகத்தை எதிர்த்து திராவிடர் இயக்கத்தினர் போராட்டம் நடத்தி சிறை சென்ற காலம் அது. எனினும், சமூக நீதியின் அடிப்படையில் ஓமந்தூரார் அரசை ஆதரித்தனர்.
எளிமையின் அடையாளமான ஓமந்தூரார், அரசாங்கம் கொடுத்த பெரிய பங்களாவைத் தவிர்த்தவர். (அப்படிப்பட்டவரின் பெயரில்தான் அரசின் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்ட வளாகம், ஓமந்தூரார் அரசினர் தோட்டம் என்றழைக்கப்படுகிறது) உடல் நலக் குறைவால் ஒருமுறை அரசுப் பொதுமருத்துவமனையில் ஓமந்தூரார் அனுமதிக்கப்பட்டபோது, “எல்லா மக்களுக்கும் செய்கிற வைத்தியமே எனக்கும் போதும். எனக்கு சிகிச்சை அளித்ததைப் பயன்படுத்தி எந்த டாக்டரும் சிபாரிசுக்கு வரக்கூடாது” என்றார்.
23.3-1947 முதல் 6-4-1949 வரை இரண்டாண்டுகள் மட்டுமே முதல்வராக இருந்த ஓ.பி.ஆர் ஆட்சியில் கரூர் அன்புநாதன்கள் கிடையாது. பணக்கட்டுகளை ஏற்றிச் சென்ற கண்டெய்னர்கள் கிடையாது. வருமானவரித்துறையினர் ரெய்டு நடத்தியதில்லை. பிரதமரின் கைப்பொம்மையாக ஓ.பி.ஆர் செயல்படவில்லை.
(ஓமந்தூர் ராமசாமியார் பிறந்தநாள்-பிப்ரவரி 1)
தி.பி.2048 தை 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக