வெள்ளி, 17 பிப்ரவரி, 2017

கூவதூரில் 18 எம் எல் ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவில்லை .. மேலும் பலர் நம்பிக்கை தீர்மானத்தை எதிர்த்து ...

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமியை 18 எம்எல்ஏக்கள் எதிர்த்து வருகின்றனர். நாளைக்கு சட்டசபையில் இந்த 18 பேரும் முதல்வருக்கு ஆதரவு அளிக்கும் வகையில் தொடர்ந்து சமாதானம் செய்யும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது. 10வது நாளாக இன்றும் சென்னையை அடுத்த கூவத்தூரில் உள்ள ரிசார்ட் ஒன்றில் அதிமுக எம்எல்ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி நேற்று முதல்வராக பதவி ஏற்கும் போது கூவத்தூரில் இருந்து அனைத்து எம்எல்ஏக்களும் ஆளுநர் மாளிகைக்கு வந்தனர். ஆனால் அப்போது 18 எம்எல்ஏக்கள் மட்டும் வரவில்லை. அவர்கள், தாங்கள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பழனிச்சாமிக்கு ஆதரவளிக்க மறுத்து முரண்டு பிடித்து வருகின்றனர்.

முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி நேற்று பொறுப்பேற்ற பிறகு கூவத்தூர் வந்து இந்த 18 எம்எல்ஏக்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. என்றாலும் அவர்கள் சமாதானம் அடையவில்லை. இதனால் இன்று காலை 7 மணி முதல் அவர்கள் 18 பேரிடமும் அதிமுகவின் மூத்த தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்யும் முயற்சி ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், நாளை கூடவிருக்கும் சட்டசபைக் கூட்டத்தில் இந்த 18 எம்எல்ஏக்களும் பழனிச்சாமிக்கு ஆதரவளிப்பார்களா அல்லது நடுநிலை வகிப்பார்களா அல்லது பகிரங்கமாக ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு என்று அறிவித்துவிடுவார்களா என்பது நாளைதான் தெரிய வரும்.

இதனிடையே, நேற்று பழனிச்சாமி முதல்வராக பதவி ஏற்றுவிட்டு கூவத்தூர் மீண்டும் சென்ற போது, அப்பகுதி மக்கள் சாலையில் நின்று பழனிச்சாமிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார்கள். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கூவத்தூர் பகுதியில் ஏற்பட்ட பரபரப்பைக் கட்டுப்படுத்த ரிசார்ட் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 4வது நாளாக தொடர்ந்து இன்றும் 144 தடை உத்தரவு அந்தப் பகுதியில் அமலில் உள்ளது. போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டிருக்கும் அதே வேளையில், சசிகலா உறவினர்களால் போடப்பட்டுள்ள தனியார் பாதுகாப்பு குழுவினரும் ரிசார்ட்டை சுற்றி குவிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் ரிசார்ட்டுக்குள் யாரும் சென்றுவிட முடியாத அளவிற்கு கடும் நெருக்கடியை கொடுத்து வருகின்றன  tamiloneindia

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக