செவ்வாய், 31 ஜனவரி, 2017

எண்ணூர் கப்பல் விபத்து .. கடலில் கொட்டிய எண்ணையை அகற்றும் பணி தாமதம்

எண்ணூர் துறைமுகம் அருகே 2 கப்பல்கள் மோதிய சம்பவத்தை தொடர்ந்து மத்தியமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் துறைமுகத்தில் ஆய்வு செய்தார். விபத்துக்குள்ளான கப்பல்களை பார்வையிட்ட அவர், இதுபற்றி முறையாக விசாரணை நடத்தப்படும் என்றார். எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் இருந்து கடந்த 27-ந்தேதி இரவு எரிவாயுவை இறக்கிவிட்டு ஈரான் நாட்டு கப்பல் ஒன்று அங்கிருந்து வெளியேறியது. அப்போது மும்பையில் இருந்து டீசல் ஏற்றிக் கொண்டு எண்ணூர் துறைமுகம் நோக்கி டான் காஞ்சிபுரம் என்ற கப்பல் வந்தது.எதிர்பாராதவிதமாக இந்த 2 கப்பல்களும் மோதிக்கொண்டன. இதில் டீசல் ஏற்றி வந்த கப்பல் பலத்த சேதமடைந்து டீசல் கடலில் கொட்டியது.

சேதமடைந்த இரு கப்பல்களும் நடுக்கடலில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டன. கடலோர பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு அவற்றை கண்காணித்து வந்தனர். துறைமுக அதிகாரிகள் மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.
இந்நிலையில் மத்திய கப்பல் போக்குவரத்து துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நேற்று மாலை எண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அதிகாரிகளை அழைத்து இரு கப்பல்களும் மோதி விபத்துக்கு உள்ளானது குறித்து கேட்டறிந்தார். பின்னர் துறைமுகத்தில் இருந்து சிறிய கப்பலில் நடுக்கடலுக்கு சென்று விபத்துக்குள்ளான 2 கப்பல்களையும் அவர் பார்வையிட்டார்.
அதன்பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் எரிவாயு இறக்கி விட்டு சென்ற கப்பலும், துறைமுகத்துக்கு டீசல் ஏற்றிக்கொண்டு வந்த டான் காஞ்சீபுரம் கப்பலும் துறைமுகத்துக்கு வெளியே நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளாகியது. விபத்துக்குள்ளான கப்பல்களை பார்வையிட்டு முறையான அனுமதி பெறப்பட்ட பிறகே துறைமுகத்துக்கு கொண்டு வரவேண்டும் என்பதால் சேதம் அடைந்த 2 கப்பல்களும் அதே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.நான் நேரில் சென்று பார்வையிட்ட பிறகு 2 கப்பல்களும் துறைமுகத்துக்கு புறப்பட்டன. அவை துறைமுகம் வந்தடைந்த பின்னர் சேதமடைந்த கப்பலில் இருந்து பாதுகாப்பாக டீசல் இறக்கப்பட்டு கப்பல் செப்பனிடப்படும்.
கப்பல் நிறுத்தப்பட்ட நூறு அடி தூரத்தில் எண்ணெய் படலம் இல்லாமல் பிசுறாக காணப்படுகிறது. கப்பலின் டீசல் டேங்கர் மீது மோதியதால் அதில் உள்ள குழாய் வழியாக டீசல் கசிந்து கடலில் கொட்டி உள்ளது.காமராஜர் துறைமுகத்தில் முதல் முறையாக இந்த விபத்து நடந்து உள்ளது. துறைமுகத்துக்கு வெளியே விபத்து நடந்தாலும் இதுபற்றி முறையாக விசாரிக்கப்படும். இரண்டு கப்பல்களில் உள்ள ஊழியர்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது.கடற்கரையில் ஒதுங்கி படிந்து உள்ள எண்ணெய் படலங்களை அகற்ற பல முறைகள் உள்ளன. அந்த முறைகளை கையாண்டு அவை அகற்றப்படும். மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு நல்லதே நடக்குமென்று அவர் கூறினார். மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக