செவ்வாய், 31 ஜனவரி, 2017

நீட் நுழைவு தேர்வு மே 7- தேதி நடைபெறும் .. கிராமபுற மாணவர்களின் கல்விக்கு முட்டுகட்டை ?


மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு மே 7-ம் தேதி நடைபெறும் என சிபிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி; எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய அளவில் ஒரே நுழைவுத் தேர்வை (நீட்) நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று நீட் தேர்வுக்கு ஓராண்டு விலக்கு அளிக்கும் அவசர சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்தது. வரும் கல்வியாண்டு முதல் மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய அளவில் ‘நீட்’ நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வு தொடர்பாக மத்திய சுகாதார, குடும்ப நலத்துறை இணையமைச்சர் அனுபிரியா படேல் மக்களவையில் பதிலளிக்கையில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு (நீட்) நுழைவுத் தேர்வு நடத்துவது தொடர்பாக பல்வேறு மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தியது. அதன்படி வரும் 2017-ம் ஆண்டிற்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வு இந்தி, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மராத்தி, குஜராத்தி, அசாம் ஆகிய மொழிகளில் நடத்தப்படும். இந்த நுழைவுத்தேர்வால் இடஒதுக்கீட்டுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவித்து இருந்தார்.


நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும் என்று பல தரப்பினர் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் மருத்துவ படிப்ப‌களுக்கான நாடு தழுவிய பொது நுழைவுத் தேர்வான நீட்டில் இருந்து தமிழகத்திற்கு விலக்களிக்கும் மசோதாவை சட்டப்பேரவையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்தார். எம்பிபிஎஸ்., பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வுக்கு பதிலாக, ப்ளஸ் டூ தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கைக்கு வகை செய்யும் சட்ட முன்வடிவு செவ்வாய்க்கிழமை தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு மே 7-ம் தேதி நடைபெறும் என சிபிஎஸ்சி அறிவித்து உள்ளது. இன்று முதல் மார்ச் 1-ம் தேதி வரையில் நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. நுழைவுத் தேர்வுக்கு http://www.cbseneet.nic.in  என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மே 7-ம் தேதி நாடு முழுவதும் 80 நகரங்களில் 1500 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது. 10 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்வில் கலந்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வருடம் நீட்-I மற்றும் நீட்-II தேர்விற்கு 8,02,594 மாணவர்கள் பதிவு செய்து இருந்தார்கள்.  மாலைமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக