செவ்வாய், 31 ஜனவரி, 2017

கைது செய்யபட்ட 487 பேர்களில் 36 மட்டுமே விடுதலை .. தமிழக அரசு அறிவிப்பு

ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் 36 மாணவர்களை மட்டும் 110 விதியின்கீழ் விடுதலை செய்வதாக இன்று சட்டசபையில் முதல்வர் அறிவித்தார்.
தமிழக சட்டசபையின் நடப்பாண்டின் முதல் கூட்டம், கடந்த 23ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, சட்டசபையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா உள்பட முக்கியப் பிரமுகர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, கவர்னர் உரைக்கு பதில் தெரிவித்து உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் தெரிவித்து வருகின்றனர்.

இன்று காலை சட்டசபை கூடியபோது, அவையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், ‘சென்னை மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதிக் கட்டத்தில் ஏற்பட்ட அசம்பாவித சம்பவத்தில் கலவரக்காரர்களை கட்டுப்படுத்தும்விதத்தில் காவல்துறையினர் குறைந்தபட்ச தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.
அப்போது, காவல்துறையினர் அத்துமீறி நடந்துகொண்டதாக கூறப்பட்ட குற்றச்சாட்டு குறித்து, காவல்துறையினரின் அத்துமீறல் இருந்ததா என்று விசாரணை நடத்தப்படும்.
கலவரம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும். அந்த ஆணையம் விசாரணை செய்து 3 மாதங்களில் அரசிடம் அறிக்கை வழங்கும். அதன்பேரில், தகுந்த நடவடிக்கை தயவுதாட்சண்யமின்றி எடுக்கப்படும். வன்முறைச் சம்பவத்தில் தீ வைத்த காவலர் மீது விசாரணை செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
கலவரத்தில் முற்றிலும் தீக்கிரையாக்கப்பட்ட நடுக்குப்பத்தில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்திற்கொண்டு, தற்காலிக மீன் சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அங்கு ரூ.7௦ லட்சம் செலவில் நிரந்தர மீன் சந்தை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். நடுக்குப்பம், அயோத்திக்குப்பம், மாட்டான்குப்பம் போன்ற பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களுக்கு மீன் பிடிக்கும் உபகரணங்கள் வழங்கப்படும். மேலும் உரிய ஆய்வு விசாரணைக்குப் பின்னர் நடுக்குப்பம், அயோத்திக்குப்பம் பகுதி மீனவர்களுக்கு நிவாரண உதவி வழங்கப்படும்.
கலவரம் தொடர்பாக அவையில் 110 விதியின்கீழ் முதல்வர் உரையாற்றியபோது, ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழகம் முழுவதும் நடைபெற்ற போராட்டத்தில் சென்னையில் 312 பேர்களும், இதர மாவட்டங்களில் 175 பேர்களும் கைது செய்யப்பட்டனர். அதில், சென்னையைச் சேர்ந்த 21 மாணவர்களும், இதர மாவட்டத்தைச் சேர்ந்த 15 மாணவர்களும் ஆக மொத்தம் 36 மாணவர்களை மட்டும் அவர்களது எதிர்காலம் கருதி அவர்கள்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை ரத்து செய்து சட்டபூர்வமாக அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறினார். மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக