திங்கள், 30 ஜனவரி, 2017

அமெரிக்காவில் பாம்பு பிடிக்கும் தமிழக இருளர் பழங்குடிகள் ..

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத் தில் மலைப்பாம்புகளைப் பிடிக்க, தமிழகத்தைச் சேர்ந்த மலைவாழ் இருளர்கள் 2 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 8 நாளில் 13 மலைப்பாம்புகளைப் பிடித்துக் கொடுத்ததால் அதிகாரிகள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பர்மா மலைப்பாம்புகள் பெரும் பிரச்சினையாக இருந்து வருகின்றன. முயல், மான் போன்ற விலங்குகள், பறவைகளை மலைப்பாம்புகள் தின்று விடுகின்றன. இவற்றின் எண்ணிக்கை கணிசமாக குறைய தொடங்கியது அதிகாரிகளின் கவனத்துக்கு தெரிய வந்துள்ளது. சில விலங்கினங்கள் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
இதையடுத்து தெற்கு புளோரிடாவில் இருந்து பர்மா இன மலைப்பாம்புகளை முற்றிலும் ஒழிக்க வனவிலங்கு துறை, வனவிலங்கு பாதுகாப்புத் துறை, புளோரிடா பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து செயல் திட்டம் தீட்டியுள்ளன. இத்திட்டத்தின் கீழ், பர்மா மலைப் பாம்புகளைப் பிடிக்க தமிழகத்தைச் சேர்ந்த இருளர் இனத்தவர்கள் மாசி சடையன் மற்றும் வடிவேல் கோபால் ஆகியோரை புளோரிடா வனவிலங்கு துறை அதிகாரிகள் வரவழைத்துள்ள னர்.

அவர்களுடன் 2 மொழிப் பெயர்ப்பாளர்களும் வந்துள்ளனர். மாசி, வடிவேல் இருவருமே 50 வயதுடையவர்கள். தமிழகத்தில் இருந்து புளோரிடா வந்த 8 நாட்களில் வேட்டை நாய்களின் உதவியுடன் 13 மலைப்பாம்புகளைப் பிடித்து அசத்தி உள்ளனர். அவற்றில் ஒரு பெண் மலைப்பாம்பு 16 அடி நீளமுடையது. இதனால் அதிகாரிகள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். மலைப்பாம்புகளை இருளர்கள் கண்டுபிடிக்கும் விதம், அவற்றை அவர்கள் பிடிக்கும் விதம் போன்றவற்றை கண்டு புளோரிடாவைச் சேர்ந்த மலைப்பாம்பு நிபுணர்கள் கூட வியப்பு தெரிவித்துள்ளனர் என்று ‘மியாமி ஹெரால்ட்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

புளோரிடாவில் மலைப்பாம்புகள் முதலில் சில மட்டும்தான் இருந்துள்ளன. நாளடவையில் அவை ஆயிரக்கணக்கில் பெருகி உள்ளன. இதனால் மற்ற உயரினங்களுக்கு ஆபத்து அதிகரித்தது. இதையடுத்து மலைப்பாம்புகளைப் கண்டுபிடிக்க போட்டிகளை கூட அதிகாரிகள் நடத்தி உள்ளனர். நீளமான மலைப்பாம்பை பிடித்தால் 1,500 டாலர் பரிசு, ஐபோன் ஆப் போன்றவற்றை அறிவித்துள்ளனர். எனினும், எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. இந்நிலையில், இருளர்கள் மலைப்பாம்புகளைப் சர்வசாதாரணமாக பிடித்து வருவதைப் பார்த்து புளோரிடா மக்கள் ஆச்சரியம் அடைந்து பாராட்டி வருகின்றனர்.
இதுகுறித்து புளோரிடா மீன் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு ஆணையத்தின் மேலாண்மை பிரிவு தலைவர் கிறிஸ்டன் சோமர்ஸ் கூறும்போது, ‘‘பர்மா மலைப்பாம்புகளால் புளோரிடாவின் அரிய பறவைகள், விலங்குகள் கணிசமாக குறைந்துவிட்டன. இந்த இன மலைப்பாம்புகள் புளோரிடாவில் கிடையாது. எப்படியோ பல்கி பெருகிவிட்டன. இந்தியாவைச் சேர்ந்த இருளர்கள் தங்கள் தாய்நாட்டில் மலைப்பாம்புகளைப் பிடிப்பதில் மிகவும் திறமைசாலிகளாக உள்ளனர். அதனால், பாம்புகளைப் பிடிக்கும் நுணுக்கங்களை, திறமைகளையும் புளோரிடா மக்களுக்கும் கற்றுத் தருவார்கள் என்று நம்புகிறோம்.
இருளர்கள் 2 பேர், மொழிப்பெயர்ப்பாளர்களுக்கு 68,888 அமெரிக்க டாலர் ஊதியமாக வழங்கப்படும். இவர்கள் பிப்ரவரி மாதம் முழுவதும் புளோரிடாவில் தங்கி பணியாற்றுவார்கள்’’ என்றார். மாசி, வடிவேல் இருவரும் புளோரிடா வந்த முதல் நாள், ‘நார்த் கீ லார்கோ’ என்ற பகுதியில் உள்ள ஏரிப் பகுதியில் 4 மலைப்பாம்புகளைப் பிடித்துள்ளனர். இந்தப் பகுதியில்தான் அரிய வகை பறவைகள், விலங்குகள் ஏராளமாக உள்ளன. அதன்பின் ஒவ்வொரு பகுதி யாக மலைப்பாம்புகளைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் hindu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக