திங்கள், 2 ஜனவரி, 2017

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸ் தாக்குதல்: இரா. முத்தரசன் கண்டனம்

dyfi-2thetimestamil.com போராட்டத்தில் ஈடுபட்ட ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மீது போலீஸ் தாக்குதல் நடத்தியிருப்பதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள குறிப்பில்,
“பிரதமர் நரேந்திரமோடியின் உயர்பண மதிப்பு நீக்கத்தால் ஏற்பட்டுள்ள வாழ்க்கை நெருக்கடி குறித்து அரசுக்கு தெரிவிக்கவும், மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைக் எதிராகவும் 31.12.2016 அன்று சென்னை மாநகரில், மேடவாக்கம்- மாம்பாக்கம் சந்திப்பில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் மீது பள்ளிக்கரணை காவல்நிலைய உதவி ஆய்வாளரும் காவல்துறையினரும் காட்டுமிராண்டித் தனமான தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பெண்களை இழிவுபடுத்தி அவமதித்துள்ளனர். தீக்கதிர் நிருபர் தாக்கப்பட்டு, அவரது கேமரா பறிக்கப்பட்டு காவல்துறை அத்துமீறல் தொடர்பான படங்கள் அழிக்கபட்டிருப்பது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள எழுத்து உரிமை, செய்தி வெளியிடும் உரிமை மீதான தாக்குதலாகும்.
இந்த சட்ட அத்துமீறல் குறித்து தலையிட்ட மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.செல்வா, எஸ்.குமார் உட்பட பல முன்னணித் தோழர்கள் படுகாயமடைந்து, உள்நோளிகளாக சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் உயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கையை எதிர்த்தும், தட்டுப்பாடில்லாத புதிய பணவிநியோகத்தை வலியுறுத்தியும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பிரதமர் மோடி அறிவித்தது போல் பணத்தட்டுப்பாடு 50 நாட்களில் தீரவில்லை, இன்றும் தொடர்கிறது. பல்வேறு தரப்பினருக்கும் ஏற்பட்ட துயரநிலையை நீக்கவேண்டும் என ஜனநாயக பூர்வமாக வாலிபர்கள் நடத்திய போராட்டத்தில் பள்ளிக்கரணை காவல்துறை அத்துமீறி, அராஜக தாக்குதலில் ஈடுபட்டதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாக கண்டிக்கிறது. அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கவும், எதிர்த்து போராடவும் அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைமீதான தாக்குதலை எதிர்த்து ஜனநாயக சக்திகள் கண்டனக் குரல் கொடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறது.
அத்துமீறி செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், ஜனநாயக வாலிபர் சங்க தோழர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெறவும் தமிழ்நாடு அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது.” என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக