திங்கள், 2 ஜனவரி, 2017

வங்கிகளையும் மத்தியரசையும் கண்டித்து சிபிஎம் கட்சி போராட்டம் .. நிருபர்களை அடித்து நொறுக்கிய ஏவல்துறை

ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் போடாமல் மூடிவைத்திருக்கும் வங்கி நிர்வாகங்களையும், மத்திய அரசையும் கண்டித்து சென்னை மேடவாக்கத்தில், வாலிபர் சங்கம்   ;சிபிஎம் கட்சி போராட்டத்தின் போது போலீசார் நடத்திய தடியடியால், பலர் படுகாயமடைந்தனர். அந்த செய்தியை படம் பிடித்த தீக்கதிர் நிருபர் கவாஸ்கர் தாக்கப்பட்டதுடன் அவர், எடுத்திருந்த புகைப்படங்களையும் போலீசார் அழித்தனர்.
இந்த சம்பவத்திற்கு டி.யூ,ஜெ. மாநிலத்தலைவர் பி.எஸ்.டி.புருஷோத்தமன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ரூ.500, 1000 நோட்டுக்கள் செல்லாதென அறிவித்தும், 50 நாட்களாகியும் புதிதாக வெளியிடப்பட்ட ரூ.2000 நோட்டுக்கள், உரிய அளவில் வங்கி ஏ.டி.எம். மையங்களில் இல்லாததால் இந்தியா முழுவதும் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் 200க்கு மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்த அவலமும் தொடர்ந்து வருகிறது.

50நாட்களில் இப்பிரச்சனை தீரும் என்று அறிவித்த மத்திய அரசு 50 நாட்கள் கடந்த பின்னும் உரிய நடவடிக்கை எடுக்காதது பொது மக்கள் தரப்பில் கடும் கோபத்தையும், விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
இச்செயலை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் போராடி வருகின்றனர். இந்நிலையில் சென்னை மேடவாக்கத்தில் பணம் இல்லாமல் மூடி இருக்கும் ஏ.டி.எம். எந்திரம் எதிரே தென் சென்னை வாலிபர் சங்கத்தினர் ஆர்பாட்டம் நடத்தினர். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தியதில் பலர் காயமடைந்தனர்.
இதை கண்டித்து சி.பி.எம். கட்சியினர் நடத்திய ஆர்பாட்டத்தின் போது போலீசார் நடத்திய தடியடியால் கட்சியின் முக்கிய தலைவர் செல்வாவுக்கு மண்டை உடைந்தது.
வாலிபர் சங்க பொருளாளர் தீபா, சிபிஎம் வனஜா உட்பட பலர் காயமடைந்தனர். இந்நிகழ்வால் அப்பகுதி போர்க்களம் போல் காட்சி அளித்தது. போராட்டம்& போலீசார் தடியடியை படம் பிடித்து செய்தி சேகரித்த தீக்கதிர் நிருபர் கவாஸ்கருக்கு அடி உதை விழுந்தது. அவரது கேமிரா பறிக்கப்பட்டு படங்கள் அழிக்கப்பட்டன.
இந்த தகவல் அறிந்ததும் டி.யூ,ஜெ. மாநிலத்தலைவர் பி.எஸ்.டி.புருஷோத்தமன் பத்திரிகையாளர் பிராச்சினைகள் தீர்க்க சென்னை மாநகர போலீஸ் கமிஷனரால் நியமிக்கப்படட ஐ.பி.எஸ். அதிகாரியும், துணை கமிஷனருமான ஜெயக்குமாருக்கு தொடர்பு கொண்டு தோழர் கவாஸ்கர் தாக்கப்பட்டதையும், கேமிரா பிடிங்கி படங்களை அழத்ததையும் கூறி இச்செயலை கண்டித்தத்தோடு கவாஸ்கரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், கேமிராவை திரும்ப தரக்கோரியும் வலியுறுத்தினார். அதை ஏற்று கொண்ட துணை கமிஷனர், உடனே நடவடிக்கை எடுப்பதாக கூறிவிட்டு, பின்னர் தொடர்பில் வந்து, அங்குள்ள உதவி கமிஷனரிடம் கூறிவிட்டேன். கேமிராவை திருப்பி தந்து விடுவார்கள். இதர நடவடிக்கையும் எடுப்பார்கள் எனக்கூறினார். அவர் கூறும் போது மணி இரவு 9மணிக்கு இருக்கும். ஆனால் துணை கமிஷனர் கூறியும் எந்த நடவடிக்கையையும் பள்ளிகரணை சரக உதவி கமிஷனர் எடுக்கவில்லை.
சம்பவ இடத்திற்கு, தோழர் சமீர் உட்பட பத்திரிக்கையாளர்கள் திரண்டு போராடிய பிறகு இரவு 2 மணிக்குதான் படங்களை அழித்து விட்டு கேமிராவை மட்டும் திருப்பி தந்துள்ளார்கள். இந்த சம்பவம் பற்றி தகவலறிந்த பிரஸ் கிளப் இணைச்செயலாளர் தோழர் பாரதி தமிழன், எம்.யு.ஜெ. தலைவர் மோகன், உழைக்கும் பத்திரிகையாளர் சங்க தலைவர் தோழர் சகாயராஜ் உள்ளிட்ட தோழர்கள் டி.சி ஜெயக்குமாரிடம் பேசி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
தோழர் கவாஸ்கர் மீது தாக்குதல் நடத்தி, கேமிராவை பிடுங்கி புகைப்படங்களை அழித்ததற்கும் போராட்டம் நடத்திய வாலிபர் சங்க இயக்கத்தோழர்கள் மீது நடத்தப்பட்ட போலீஸ் தாக்குதலையும் இதற்கு நியாயம் கேட்க சென்ற சிபிஎம் தலைவர்கள், வாலிபர்கள் மீது நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களையும் டி.யூ.ஜெ. வன்மையாக கண்டிக்கிறது.
இச்சம்பவத்திற்கு காரணமான பெண்தோழர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீசார் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து, தமிழக முதல்வரையும், உள்துறை செயலாளரையும், காவல்துறை தலைவரையும் டி.யூ.ஜெ வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
கடந்த 2016ஆம் ஆண்டில் மட்டும், தமிழகம் முழுவதும் சுமார் 50க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடந்துள்ளது. தோழர் ஜாபர் மீது தாக்கு, தினமலர் டிவி செய்தியாளர் மீது தாக்கு, வடஇந்திய தொலைக்காட்சி பெண் செய்தியாளர் மீது தாக்கு, கவாஸ்கர் மீது தாக்கு என தொடர் கதையாகி வருகிறது. இது பத்திரிகை சுதந்திரம், கருத்து சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும். பத்திரிகையாளர்களின் கடமையை செய்யவிடாமல் தடுக்கும் காட்டுமிராண்டி செயலாகும்.
இச்சம்பவத்திற்கு கடுமையான கண்டனங்களை பதிவுசெய்யும் டி.யூ.ஜெ. அமைப்பு, இதர பத்திரிகையாளர்கள் சங்கங்களுடன் கலந்து பேசி பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு எதிராக மாநிலம் தழுவிய கண்டன இயக்கம் திட்டமிடுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உடனடியாக இப்பிரச்சினையில் தலையிட்டு தவறு இழைத்த போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென டி.யூ.ஜெ. மீண்டும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் டி.யூ.ஜெ. தலைவர் புருஷோத்தமன் வலியுறுத்தியுள்ளார்.  thetimestamil.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக