வெள்ளி, 27 ஜனவரி, 2017

தமிழ்நாடு மாணவர்கள் வழியில் கர்நாடக மாணவர்கள்! போராட்டத்தில் குதித்தனர்!


கர்நாடகாவில் கம்பாலா போட்டி நடத்த தமிழகத்தில் நடத்திய ஜல்லிக்கட்டு பாணியில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
சிவபெருமானின் மறு அவதாரமாகக் கருதப்படும் கத்ரி மஞ்சுநாதாவுக்கு நன்றிக்கடன் செலுத்தும்வகையில், அறுவடைக் காலத்தில் விவசாயிகள் எருதுகளைப் பூட்டி சேறும், சகதியுமான நிலத்தில் ஓடவிடுவதுண்டு. இதில் வெற்றிபெறும் விவசாயிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுகள் வழங்கப்படுவதுண்டு.
இந்த எருதுப் போட்டி, பாரம்பரிய விளையாட்டாக 'கம்பாலா' என மாறியது. இதில் ‘புக்கரே கம்பாலா’, ‘பலே கம்பாலா' என இரு வகையுண்டு. பலே கம்பாலா, 900 ஆண்டுகளுக்கு முன்னரே கைவிடப்பட்டது. இதையடுத்து நடத்தி வந்த மற்றொரு போட்டிக்கும் தடை விதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு பீட்டா மற்றும் விலங்கு நல அமைப்பினர் இதையெதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் முறையிட்டபோது, கம்பாலா விளையாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், பாரம்பரிய விளையாட்டான கம்பாலா நடத்த வேண்டும் என்பதற்காக தமிழக மாணவர்களைப் பின்பற்றி கர்நாடக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி மாணவர்களும் இளைஞர்களும் பொதுமக்களும் போராட்டம் நடத்தினர். இதற்கு முதலில் அவசரச் சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் நிரந்தரச் சட்டம் வேண்டும் என்று மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின், தற்காலிகமாக இயற்றப்பட்ட அவசரச் சட்டத்துக்குப் பதிலாக தமிழக சட்டசபையில் ஜல்லிக்கட்டு மசோதா சட்டமாக ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இதுபோன்று, கம்பாலாவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரியும், பீட்டாவை தடை செய்யக் கோரியும் மங்களூருவில் மாணவர்கள் கல்விக்கூட வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி ஹூப்ளியிலும் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கம்பாலா போராட்டத்தில் ஈடுபட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், கர்நாடகாவில் நாளை பெரிய அளவில் போராட்டம் நடைபெறவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
கர்நாடக மாநிலம் மட்டுமின்றி, தமிழகத்தை முன்னுதாரணமாகக் கொண்டு பல்வேறு மாநிலத்தவரும் தங்களுடைய பாரம்பரிய விளையாட்டுகளை நடத்த போராடவுள்ளதாகக் கூறப்படுகிறது.  மின்னம்பலம

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக