வெள்ளி, 27 ஜனவரி, 2017

கலவரத்தில் ஈடுபட்ட காவல்துறை : உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!


ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பாக நடைபெற்ற கலவரம் குறித்து, பதில் தெரிவிக்கும்படி சென்னை காவல் ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ஜல்லிக்கட்டு போட்டி நடத்த நிரந்தரச் சட்டம் கோரி சென்னையில் போராட்டங்கள் நடைபெற்றன. அமைதியான முறையில் நடைபெற்றுவந்த இந்தப் போராட்டம் இறுதி நாட்களில் கலவரமாக மாறியது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். மேலும் இந்தக் கலவரத்தில் காவல் துறையினரே குடிசைகளுக்கு தீ வைத்தது, வாகனங்களை கொளுத்தியது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இதைத் தொடர்ந்து, காவல் துறையினரின் இந்த நடவடிக்கைக்கு தேசிய மனித உரிமை ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில், காவல் துறையினரின் இந்த நடவடிக்கையை எதிர்த்து அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், இந்தக் கலவரம் குறித்த விசாரணையை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது.
திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த குமார் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, ‘சென்னையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரத்தில் காவல் துறையினர் அத்துமீறி நடந்துள்ளனர். இதற்கான வீடியோ ஆதாரங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. இந்த வீடியோக்கள் அனைத்தும் பொதுமக்களாலும் பத்திரிகையாளர்களாலும் எடுக்கப்பட்டது. காவல் துறையினராலேயே இந்தக் கலவரம் உருவாகியுள்ளது என்பது இந்த ஆதாரங்கள் மூலம் தெள்ளத்தெளிவாக தெரிய வருகிறது. எனவே, இந்தக் கலவரத்தில் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் இந்தக் கலவரம் குறித்து முறையான விசாரணையை மேற்கொள்ள இந்த விசாரணையை சி.பி.ஐ. அமைப்புக்கு மாற்ற இந்த உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’ என்று தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், இதுகுறித்து பதில் தெரிவிக்கும்படி சென்னை காவல் ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக