வெள்ளி, 27 ஜனவரி, 2017

போலீஸுக்கு நிவாரணமாம்... ஜோர்ஜ் என்கின்ற குட்கா மாமூல் சேட்டன் அறிவிப்பு

கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த வன்முறையில் பாதிக்கப்பட்ட காவல் துறையினருக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று காவல்துறை ஆணையர் ஜார்ஜ் கூறியுள்ளார்.
பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி, சென்னை மெரினாவில் அறவழியில் நடந்த போராட்டம் கலவரத்தில் முடிந்தது. ஆறு நாட்களாக மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு அளித்த காவலர்கள் இறுதியில் மக்கள் மீது தடியடி நடத்தினர்.
பெண்கள், கர்ப்பிணிகள், மாணவர்கள் என அனைவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. பெண்களை காவல் துறையினர் தூக்கிச்சென்ற சம்பவங்களும் நிகழ்ந்தன. இதில், சிலருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டுவது போன்ற வீடியோக்கள் வைரலாகின.

மாணவர்கள், பொதுமக்களுக்கு ஏற்பட்ட சேதங்களைவிட வன்முறையில் மக்களுக்கு பாதுகாப்பு அளித்த மீனவர்களுக்குத்தான் அதிக சேதம் ஏற்பட்டது. மீனவ குப்பத்துக்குள் நுழைந்த காவல்துறையினர் ஆட்டோ, பைக், ஜன்னல் கண்ணாடி ஆகியவற்றை அடித்து நொறுக்கினர். சிலவற்றை தீக்கிரையாக்கினர். எதிர்த்துப் பேசிய மீனவ மக்களை லத்தியால் சரமாரியாக தாக்கினர். மீன் கடைகளை தீக்கிரையாக்கினர்.
மேலும் காவல் துறையினர் இரவிலும் வீடு புகுந்து வீட்டில் இருக்கும் ஆண்களை கைது செய்ததாக புகார்கள் எழுந்தன. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் வன்முறை நடந்ததற்குக் காரணம் காவல் துறையினர் அல்ல. கூட்டத்துக்குள் புகுந்த சில சமூக விரோதிகள் என கூறப்பட்டது.
இந்நிலையில், கலவரத்தில் காயமடைந்த காவலர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று சென்னை பெருநகர காவல் ஆணையர் ஜார்ஜ் அறிவித்துள்ளார். காவல் இணை ஆணையரின் கார் ஓட்டுநர் செந்தில்குமாருக்கு 15,000 ரூபாயும், வன்முறையில் காயமடைந்த காவல் துறையினருக்கு தலா 10,000 ரூபாயும் நிவாரணம் அறிவித்துள்ளார்
ஆனால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்தும், மீனவ மக்கள் குறித்தும் இதுவரை எந்த அறிவிப்பையும் அரசு வெளியிடவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு என்ன செய்யப் போகிறது?  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக