ஞாயிறு, 29 ஜனவரி, 2017

பாஜக - தமிழக காவல்துறை கூட்டு அரசு வன்முறைக்கு எதிரான கண்டனம்

கீற்று.com :ஏறுதழுவல் மீதான இந்திய அரசின் தடையை முறியடிக்கக் கூடிய அழுத்தத்தை வெற்றிகரமாக நிகழ்த்தி, இந்திய அரசினை வென்ற மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் வாழ்த்துக்களையும், நன்றிகளையும் மே பதினேழு இயக்கம் தெரிவிக்கிறது.
ஏறுதழுவல் எனும் சல்லிக்கட்டிற்கான தடையை நிரந்தரமாக நீக்கக் கோரிக்கை வைத்து, போராட்டத்தினை நடத்திய மாணவர்-இளைஞர் மற்றும் இக்கோரிக்கைக்கு வலுசேர்க்கும் விதமாக அமைதிவழிப் போராட்டத்தில் பங்கேற்ற பொதுமக்களை காட்டுமிராண்டித்தனமாக தமிழக காவல்துறை தாக்கியதை வன்மையாகக் கண்டிக்கிறோம். தமிழகத்தை ராணுவ-பாதுகாப்புப் படையினால் நிர்வகிக்கப்படுகிற பகுதியாக மாற்றும் இந்திய அரசின் திட்டத்தின் வடிவமாகவே இந்த வன்முறை தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது.


சட்டத்திற்குப் புறம்பாகவும், மனித உரிமையை மதிக்காமலும், சமூக அறத்திற்கு எதிராகவும் போராடிய மக்களை சென்னை மெரினாவிலும், மதுரை, கோவை, ஈரோடு, அலங்காநல்லூர் போன்ற இடங்களிலும் காவல்துறையினர் கடுமையாக தாக்கி இருக்கிறார்கள். இந்தத் தாக்குதல் பின்னர், போராடிய தோழர்கள் மட்டுமல்லாமல், போராடிய மாணவர்களைப் பாதுகாக்க வந்த அப்பாவிப் பொதுமக்களாகிய நடுகுப்பம், நொச்சிக்குப்பம், அயோத்தியாகுப்பம், பட்டினப்பாக்கம், திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளில் இருக்கும் உழைக்கும் மக்கள் மீதும் கடுமையான தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறது. மேலும், இம்மக்களின் பொருட்களையும், உடமைகளையும் சேதப்படுத்தி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்தவர்கள் பற்றிய விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை என்பது மட்டுமல்லாமல், உயிர்ச்சேதம் பற்றிய தகவல்களும் மறைக்கப்பட்டிருப்பதாக மே17 இயக்கம் குற்றச்சாட்டை முன்வைக்கிறது.
இது குறித்து விரிவான விசாரணையை பாரபட்சமின்றி நடத்தும் வகையிலான சர்வதேச பிரதிநிதிகள் உள்ளடங்கிய ஒரு விசாரணைக் கமிசன் உச்சநீதிமன்ற நீதிபதியின் தலைமையில் உருவாக்கப்பட வேண்டுமென்று கோரிக்கையை முன்வைக்கிறோம்.
மத்திய அரசின் தமிழின விரோத நிலைப்பாடு பொதுமக்களிடம் அப்பட்டமாக அம்பலமாகியதன் காரணமாகவே போராட்டம் தீவிரம் பெற்றதோடு, தமிழகத்தின் பல ஊர்களிலும் பரவியது. காவிரி நதிநீர் ஆணையம் உள்ளிட்ட தமிழகத்தின் உரிமைகளை பாஜக -மோடி அரசு சிதைத்ததாக போராடிய தமிழர்கள் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த தமிழகத்தின் மனநிலையாக இருந்ததை சனநாயக ரீதியாக எதிர்கொள்ள இயலாத பாஜகவின் மத்திய அரசு தனக்கு நெருக்கமான காவல்துறை, அரசு வர்க்க தலைமைகள் மூலமாகவும், தோல்வியடைந்த பலவீனமான மாநில அரசின் உதவியோடும் இந்த பயங்கரவாதத்தினை நிகழ்த்தி இருக்கிறது. இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழும் காலம் வரை அடித்தட்டு மக்களின் மீது தாக்குதலும், சட்டவிரோத கைதுகளும் நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் பதிவு செய்கிறோம்.
மாணவர்கள் - இளைஞர்களின் அயராத போராட்டம் வெற்றியை ஈட்டிக் கொடுத்த நிலையில், அறவழியில் போராடியவர்களின் உளவியலை சிதைக்கும் வண்ணமாகவும், இதற்கு அடுத்துவரும் காலங்களில் தமிழகத்தின் உரிமைப் பிரச்சனைகளில் இது போன்ற எழுச்சியை நடத்திவிடக்கூடாது என்பதாலும் காவல்துறை இந்த பயங்கரவாதத்தினை வெளிப்படுத்தி இருக்கிறது.
மெரினாவினைச் சுற்றி இருக்கும் உழைக்கும் மக்களின் குடியிருப்புகளில் இரவு பகலாக காவல்துறை ரோந்துகளும், கைதுகளும், தாக்குதல்களும், அத்துமீறி வீடுகளில் நுழைவதுமாக அரசபயங்கரவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
போராட்டம் கடந்த 7 நாட்களாக அமைதியாகவும், வன்முறையின்றியும் ஓர்மையுடனும், உற்சாகத்துடனும் நடந்த சமயங்களில் வன்முறையைத் தூண்ட பாஜக-ஆர்.எஸ்.எஸ்-ஏபிவிபி முயற்சித்தது பலமுறை தோல்வி கண்டது. போராடியவர்களை மதரீதியாக பிரிக்கவும் முயன்று பாஜக தோற்றதை அனைவரும் அறிவோம்.
பாஜக கட்சியின் தேசியச் செயளாளர் திரு. எச்.ராஜா, சமூக வலைதளங்களில் மதரீதியாகப் போராடுபவர்களைப் பிரிக்க முயன்று தோற்றதை அடுத்து, நேரடியாக களத்தில் மதவெறி-பிரிவினையை தூண்ட முயற்சித்து தோல்வியடைந்தது. மாணவர்களும், இளைஞர்களும், மே17 இயக்கம் போன்ற சனநாயக இயக்கங்களும் இம்முயற்சியை முன்னின்று தோற்கடித்தன.
கோவையில் 2016 செப்டம்பர் 23ம் தேதி இந்துத்துவ குழுக்கள் நடத்திய வன்முறையைப் போன்று இப்போராட்டத்திலும் வன்முறையைத் தூண்ட முயற்சித்த முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், மே17 இயக்கம், உணவளித்த இசுலாமிய நண்பர்கள்-குடும்பங்கள் ஆகியவற்றினை சமூக விரோதிகளாக சித்தரிக்க எச்.ராஜா முயல்கிறார். அவரது இந்த முயற்சியை வலுப்படுத்தும் விதமாக கோவையில் இருந்த மதவாத சக்திகள், கலவரத்தை ஏற்படுத்த உதவி செய்யும் விதமாக நடந்து கொண்ட காவல்துறையின் உயர் அதிகாரி, மே17 இயக்கம், எஸ்.டிபிஐ கட்சியின் மாணவர் அமைப்பு மற்றும் இதர சனநாயக-இளைஞர் இயக்கங்கள் பெயரைக் குற்றம்சாட்டினார். இளைஞர் இயக்கங்களை சமூகவிரோதிகள் என்று குற்றம்சாட்டுவதன் மூலம் காவல்துறை செய்த வன்முறைகள் அம்பலப்படுவதை திசை திருப்பவதும், இந்துத்துவ குழுக்கள் செய்ய முயன்ற வன்முறைகள் அம்பலமாகாமல் தடுக்கவும் முயல்கிறார்.
மேலும், ஆளும் மத்திய பாஜக-மோடி அரசின் கொள்கைகளான ரேசன் கடைகளை மூடுவது, கருப்புப்பண ஒழிப்பின் பெயரில் பாஜகவின் நேர்மையற்ற செயல்பாடுகள், ஈ-கேஷ் என்பதன் பின்னணியில் இயங்கிய மோடியின் சுயநல அரசியல் ஆகியவை உள்ளிட்ட தகவல்களை மே17 இயக்கம் சமரசமின்றி அம்பலப்படுத்தி வருவதை சனநாயக ரீதியாகவும், நேர்மையாகவும் எதிர்கொள்ள இயலாத பாஜக, மத்தியில் தனக்கு இருக்கும் அதிகார பலத்தைப் பயன்படுத்தி, மே17 இயக்கத்தின் மீது அவதூறு செய்திகளை காவல்துறையின் உதவியோடு பரப்பி இருக்கிறது. இந்த கோழைத்தனமான, சனநாயகவிரோத நிலைப்பாடுகளை மே17 இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
இதே போல பாஜக அரசு மற்றும் தமிழக பாஜக கட்சியின் பொய்ப் பிரச்சாரத்திற்கு துணை செய்வதாகவும், வன்முறையை நியாயப்படுத்துவதாகவும் தமிழக காவல்துறையில் சில மேல் அதிகாரிகள் வெளிப்படையாக தெரிவித்திருப்பது தமிழக காவல்துறை பாஜகவின் கட்டுப்பாட்டில் இருப்பதை அம்பலப்படுத்துகிறது. 23 ஜனவரி 2017இல் பாஜகவின் மூத்த தலைவர் திரு.எச்.ராஜா சமூகவிரோதிகள் என்று பட்டியலிட்ட மே17 இயக்கம் உள்ளிட்ட இயக்கங்களின் பெயர்களை கோவை காவல்துறை ஆணையாளர் திரு.அமல்ராஜும் பட்டியலிட்டு பேசி இருக்கிறார். அரசியல் அறிக்கைகளை வெளியிடும் துறையாக காவல்துறை மாறி இருக்கிறது. இந்த அதிகாரியின் உதவியினாலேயே கோவையில் இந்துத்துவ - பாஜக ஆதரவு சக்திகள் பெரும் கலவரத்தை பொதுமக்களுக்கு எதிராக செப்டம்பர் 2016இல் நடத்தியதை நினைவுபடுத்த விரும்புகிறோம். மேலும் 'தோழர்' எனும் சொல்லை ஒரு பயங்கரவாத சொல்லாக கட்டமைக்கும் காவல்துறையின் விசமப்பிரச்சாரத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
பாஜகவின் உத்தரவிற்கு இணங்க, பலவீனமான தமிழக ஆட்சி சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, தமிழக காவல்துறை மத்திய மாநில உளவுத்துறையின் உதவியுடன் மிகப்பெரும் வன்முறையை நடத்தி இருக்கிறது. இந்த வன்முறை இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழும் தருணம் வரையிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சென்னையில் தொடரும் இந்த வன்முறை பின்வரும் பகுதிகளிலும் நடந்துவருகிறது. நடுக்குப்பம், மீனாம்பாள்புரம், மீர்சாபேட்டை, அயோத்திகுப்பம், நொச்சிக்குப்பம், மாட்டாங்குப்பம், சிவராஜபுரம், ரூதர்புரம், சண்முகபிள்ளை தெரு, ஏகாம்பரம்பிள்ளை தெரு, கணேசபுரம், ரோட்டேரி, நகர் பி.எம் தர்கா, கிருஸ்ணாபேட்டை, டும்பிக்குப்பம், சீனிவாசபுரம், ராம்நகர், ஏனைகுளம், கோகுலம் காலனி, துலுக்கான தோட்டம், செல்லம்மா தோட்டம் உள்ளிட்ட பகுதிகள் கடுமையான தொடர் தாக்குதலுக்குள்ளாகி இருக்கின்றன.
சூழலியல் போராளி தோழர்.முகிலன் அவர்களை காவல்துறை தனித்து பிரித்துச் சென்று கடுமையாக தாக்கி இருக்கிறது. இந்த அளவுகடந்த வன்முறை மக்கள் உரிமைக்காக போராடுபவர்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறது.
அலங்காநல்லூர் கீதா எனும் பெண் மீது கடுமையான தாக்குதலை காவல்துறை நடத்தி இருக்கிறது.. போராட்டத்தில் பங்கெடுக்காது வீட்டில் இருந்த ஒரு பெண்ணின் மண்டையை காவல்துறை அதிகாரி தாக்கி உடைத்து, அவர் காயம்பட்டு விட்டாரா என்று உறுதிசெய்தபின்னர் காவல்துறை அதிகாரி அங்கிருந்து அகன்றிருக்கிறார்.
மதுரையில் பாஜக-ஆர்.எஸ்.எஸ் குழுவினால் பணம் கொடுக்கப்பட்டு அனுப்பப்பட்ட கூலிப்படைகள் இந்திய அரசின் கொடியை எரித்திருக்கிறார்கள், அங்கிருந்த மாணவர்களைத் தாக்கி இருக்கிறார்கள். இந்த வன்முறையாளார்களை அங்கிருந்த மாணவர்கள்-இளைஞர்கள் கையும் களவுமாக பிடித்திருந்திருந்தனர். இந்தக் கும்பலும் காவல்துறையின் ஆதரவுடன் செயல்பட்டு இருக்கிறது. மதுரை போன்ற நிகழ்வுகள் கோவை, சென்னை போன்ற இடங்களில் நடத்திட முயற்சித்தனர். ஒரு திட்டமிடப்பட்ட வன்முறையை பாஜக நிகழ்த்துவதை தடுத்த காரணத்தினாலேயே மே 17 இயக்கம் உள்ளிட்ட சனநாயக இயக்கங்களை தேசவிரோத சக்திகள் என்று பாஜக-காவல்துறை கூட்டுக் குழு செய்தியைப் பரப்புகிறது.
காவல்துறையின் வன்முறை, ஊடகவியலாளர்கள் மீதும் நிகழ்த்தப்பட்டிருப்பது கடுமையான அதிர்ச்சியை அளிக்கிறது. அரசியல் சாசன உரிமைகளை மதிக்காமலும்,சர்வதேச மனித உரிமை விதிகளை மதிக்காமலும் செயல்பட்டு காவல்துறை ஊடகவியலாளர்களை கடுமையாகத் தாக்கி இருக்கிறது.
இந்த வன்முறையில் இருந்து தனது பொறுப்புகளை கைகழுவவும், போராடும் மக்களை குற்றவாளிகளாக மாற்றவும் பொய் வழக்குகளை புனைய ஆரம்பித்திருக்கிறது. குறிப்பாக இந்த வழக்குகளில் இசுலாமியரைப் பிரதான குற்றவாளிகளாக மாற்றும் பணியை பாஜகவின் மதவாத பிரிவினைவாதத் திட்டத்திற்கு உதவியாக காவல் துறை செயல்படுத்துகிறது. பொதுமக்களை குற்றவாளிகளாக்குவதும், அதில் இசுலாமியரை குற்றச்சமூகமாக முன்னிறுத்தும் பணியை செய்யும் தமிழக காவல்துறையின் செயல்பாடு வன்மையான கண்டனத்திற்குரியது.
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பிற பகுதிகளில் காவல்துறை நடத்திய வன்முறைகளை, அதன் ஆதாரங்களை சர்வதேச மனித உரிமை அமைப்புகளுக்கு தெரியப்படுத்தி இருக்கிறோம். காவல்துறையின் இந்த அளவுகடந்த வன்முறை பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. மேலும் சர்வதேச ஊடகங்களுக்கும் இது தெரியப்படுத்தப்பட்டிருக்கிறது. ஐ.நாவின் மனித உரிமைக்கமிசனுக்கும், அதன் உறுப்பு நாடுகள்- அமைப்புகள், மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியவற்றிற்கும் இந்த வன்முறை தெரியப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆதாரங்களைக் கண்ட சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் கண்டன அறிக்கையை வெளியிட ஆரம்பித்திருக்கிறார்கள். ஒரு சில அறிக்கைகளை வெளியிடுகிறோம். ஆஸ்திரேலியாவின் மிகப்பிரபலமான பத்திரிக்கையாளர், மனித உரிமைச் செயல்பாட்டாளர் மரியாதைக்குரிய திரு.ட்ரவர் க்ராண்ட் தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆசிய நாடுகளின் மனித உரிமை அமைப்புகள், அமெரிக்க நாடுகளின் மனித உரிமை அமைப்புகள் இது குறித்து விரைவில் அறிக்கைகள் வெளியிடுவதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.
திரு.ட்ரவர் க்ராண்ட் அவர்களின் அறிக்கை:
“In Australia, India is portrayed as the biggest democracy in the world. These words are said constantly in our media and by our politicians. However the recent actions of the Indian police forces against those legitimately protesting in recent days clearly undermines the idea of a democratic India. A country that scours it’s big cities and remote villages for protestors and locks them up without trial for 6 months is more aligned with some of the most totalitarian Governments on this planet. The Indian Government needs to back off and bring some order to it’s out of control police force. Otherwise there will be a permanent stain left on India’s name throughout the world.
- Trevor Grant – Prominent Australian author and journalist
இதுவரை காவல் துறையால் கொண்டு செல்லப்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். வழக்கு பதிவு செய்யப்பட்ட மாணவர்கள்-இளைஞர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். காணாமல் போன இளைஞர்கள் பற்றிய விவரங்களை காவல்துறை வெளியிட வேண்டும். உழைக்கும் ஏழை எளிய மக்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தும் காவல்துறையின் காட்டுமிராண்டித்தனத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். இந்தத் தாக்குதலை திட்டமிட்டவர்கள், நடத்தியவர்கள் மீது அரசு சார்பற்ற நடுநிலையான விசாரனையை சர்வதேச உதவியுடன் நடத்தப்பட வேண்டும்.
இந்தத் தாக்குதல்களை சனநாயக அமைப்புகள், கட்சிகள், செயல்பாட்டாளர்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த வன்முறை மீதான தமிழகம் மற்றும் தமிழகத்திற்கு வெளியே இருக்கும் செயல்பாட்டாளர்கள் ஆகியோரின் பங்களிப்புடன் கூடிய மக்கள்சார் விசாரனையை மேற்கொண்டு இந்த வன்முறை செயல்பாட்டை சர்வதேச அளவில் அம்பலப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறோம்.
- மே பதினேழு இயக்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக