திங்கள், 9 ஜனவரி, 2017

கலைஞர் சுயநினைவோடு இல்லை? சால்வையை போர்த்தி போஸ் கொடுத்து ... அங்கும் இங்கும் ஒரே நாடகம் !

p42c  நினைவு தவறிய நிலையில் கருணாநிதி! : தோளில் மஞ்சள் சால்வை போர்த்தி  சும்மா உட்கார வைத்து  படமெடுத்தார்கள்!! p42cசெயல் தலைவர் ஆகிவிட்டாரே ஸ்டாலின்?” ‘‘அது என்ன செயல் தலைவர்? தலைவர் ஆகிவிட்டார் என்றே சொல்லும். ‘தலைவர் பதவி விலகினாலோ, நீண்ட நாட்களுக்குக் கழகப் பணியாற்ற முடியாதநிலை ஏற்பட்டாலோ கழகப் பொதுக்குழு, செயல் தலைவர் ஒருவரை நியமிக்கலாம்.
சட்ட திட்டங்களில் தலைவருக்கு அளிக்கப்பட்ட அனைத்து அதிகாரங்கள், பணிகளையும் செயல் தலைவர் ஆற்றுவார்’ என்று புதிய விதியைச் சேர்த்துவிட்டார்கள்.
இதன்படி பார்த்தால் தலைவரின் அனைத்து அதிகாரங்களும் செயல் தலைவருக்கும் உண்டு. அதனால்தான், ‘ஸ்டாலின் செயல் தலைவர் ஆகவில்லை, தலைவராகவே ஆகிவிட்டார்’ என்று சொன்னேன்.”
‘‘பொதுக்குழுவுக்கு வரும் நிலைமையில் கருணாநிதியின் உடல்நிலை இல்லை. அவருக்கு நினைவு தவறிய நிலைதான். பெரும்பாலும் யாரையும் அடையாளம் தெரியவில்லை. பேச்சும் இல்லை.
வயிற்றில் போட்டுள்ள குழாய் மூலமாகத் திரவ உணவு செலுத்தப்படுகிறது. படுத்த படுக்கையாகத்தான் இருக்கிறார். முதுமையினால் ஏற்பட்ட பாதிப்பு என்றே மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

முன்பு உடலில் இருந்த கொப்புளங்கள் இப்போது இல்லை. திடீர் மூச்சுத் திணறலுக்குக் காரணமான சளி அடைப்பு நீக்கப்பட்டுவிட்டது. ஆனால், தன்னைச் சுற்றிலும் நடப்பதையெல்லாம் அறியும் நிலைமையில் அவர் இல்லை.
அந்த சக்தியைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறார். அதனால்தான் நாளிதழ்களைப் படித்துக் காண்பிப்பது, டி.வி-யில் பாடல்களை ஓடவிடுவது என்று அவருக்கு நினைவூட்ட சில காரியங்களைச் செய்து வருகிறார்கள்.
கருணாநிதியை மருத்துவமனையில் வைத்துக்கொண்டு செயல் தலைவர் ஆகக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் ஸ்டாலின். அதனால்தான் வீட்டுக்கு அழைத்துவந்துவிட்டு, தன்னை நிலைநிறுத்திக்கொண்டார்.”
‘‘ஏனாம் இந்த அவசரம்?”
p42dd  நினைவு தவறிய நிலையில் கருணாநிதி! : தோளில் மஞ்சள் சால்வை போர்த்தி  சும்மா உட்கார வைத்து  படமெடுத்தார்கள்!! p42dd
‘‘கருணாநிதிக்கு ஏதாவது ஆகி, அந்த நேரத்தில் குடும்பத்திலும் கட்சியிலும் கொந்தளிப்பு உருவாகிவிடக்கூடாது என்று ஸ்டாலின் நினைக்கிறார்.
இன்றைய நிலையில் அழகிரி பெரிய அச்சுறுத்தல் இல்லை என்றாலும் சிறு சலசலப்புகூட இருக்கக்கூடாது என்று ஸ்டாலின் நினைக்கிறார்.
அதனால்தான் இந்த அவசரமாம். பொதுவாக, பொதுக்குழு என்றால் அனைவரையும் பேசவிட்டு கடைசியில் கருணாநிதி கருத்துச் சொல்வார்.
அப்படி எந்த நிகழ்வும் வேண்டாம் என்று ஆரம்பத்திலேயே ஸ்டாலின் சொல்லிவிட்டார்.
‘ஒரு மணி நேரத்தில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு தலைவரிடம் ஆசி வாங்கப் போய்விட வேண்டும்’ என்று முதலிலேயே சொல்லிவிட்டார்.
‘மகிழ்ச்சியோடு இந்தப் பதவியை ஏற்கவில்லை’ என்றும் காட்ட நினைத்தார் ஸ்டாலின். அவர் பேச்சும் அப்படித்தான் இருந்தது. வழக்கமாக, ஸ்டாலின் பேசி முடித்ததும் அவருக்குக் கைகொடுத்து சால்வைகள் வழங்குவார்கள்.
இப்போது அவர் செயல் தலைவர் ஆனபோதும் யாரும் சால்வை கொடுக்கக் கூடாது என்று சொல்லிவிட்டார்கள். விட்டால் மொத்தக் கூட்டமும் சால்வைகளைக் குவித்திருக்கும்.
சோகம் தாங்கிய முகத்துடன் உடனடியாக கோபாலபுரம் வந்துவிட்டார் ஸ்டாலின். அவரோடு அன்பழகன், துரைமுருகன் ஆகியோரும் வந்தார்கள்.
கருணாநிதி தோளில் மஞ்சள் சால்வை போர்த்தி உட்கார வைத்து இருந்தார்கள். அவரிடம் ஆசி வாங்குவது மாதிரி புகைப்படம் எடுத்துக்கொள்ளப்பட்டது.’’
‘‘நீர் பயன்படுத்திய வார்த்தைகளைப் பார்க்கும்போது என்ன நடந்திருக்கும் என்பதை யூகிக்க முடிகிறது!”
‘‘புரிந்தால் சரி! போட்டோ எடுத்துக்கொண்டதும் தனது செனடாப் ரோடு வீட்டுக்கு ஸ்டாலின் போனார். அங்கு அவரை ஆரத்தி எடுத்து வரவேற்றார்கள். மருமகன் சபரீசன், தனது மாமனாரைக் கட்டி அணைத்து வரவேற்றாராம்.”
‘‘இன்னும் சிலர் தங்களுக்குப் பதவிகள் கிடைக்கும் என்று நினைத்தார்களே?”
‘‘அவை அனைத்தையும் தள்ளி வைத்துவிட்டார் ஸ்டாலின். பொருளாளர் பதவியைக் கைப்பற்ற கே.என்.நேருவும் எ.வ.வேலுவும் முயன்று வருகிறார்கள்.
ஒருவேளை அன்பழகன் பதவி விலகினால் பொதுச்செயலாளர் பதவியை அடைய துரைமுருகன் முயல்கிறார். இந்த ஆட்டத்தை சில மாதங்கள் கழித்து ஆடலாம் என்று நினைக்கிறார் ஸ்டாலின்!” என்ற கழுகாரின் கவனத்தை போயஸ் கார்டன் பக்கம் திருப்பினோம்.
‘‘அண்ணி, அத்தை, அத்தாச்சி, சித்தி போன்ற வார்த்தைகளை உச்சரிக்கும் கூட்டம், போயஸ் கார்டனிலும் தலைமைச்செயலகத்திலும் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறதாமே?’’
‘‘வராதா பின்னே? பொதுச் செயலாளர் ஆனதும் சசிகலா தனது உறவுக்காரர்கள், குடும்பத்தினரின் தலையில் குட்டு வைத்து எச்சரிக்கும் வகையில் பேசுவார் என்றே கட்சிக்காரர்களும் அதிகாரிகளும் எதிர்பார்த்தனர்.
ஆனால், சசிகலா அப்படி ஏதும் பேசவில்லை. அதனால் ஏற்பட்ட தைரியம் உறவுமுறைகளைச் சொல்லி அதிகாரம் செய்யும் பவர் ஏஜென்ட்டுகள் பெருகிவிட்டனர்.’’
‘‘ம்ம்ம்… சசிகலாவின் கவனத்துக்கு இந்த விஷயங்கள் போனதா?’’
‘‘தெரியவில்லை!’’
‘‘நாடாளுமன்ற மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஒருபுறம்… அமைச்சர்கள் மறுபுறம்… சசிகலாவுக்கு ஐஸ் வைக்கும் வகையில் ‘விரைவில் சசிகலா முதல்வர் ஆக வேண்டும்’ என்று மீடியாக்களிடம் பேசித் திரிகிறார்களே?’’
‘‘ஆனால் அவர்களில் யாருக்கும் பாராட்டுப் பத்திரம் கிடைக்கவில்லை.  முதலில், தம்பிதுரையை வரச்சொல்லி, ஸ்பெஷல் அர்ச்சனை நடத்தினாராம் சசிகலா.
‘நான் முதல்வர் ஆக வேண்டுமென்று  உங்களை அஃபிஷியல் லெட்டர் பேடில் அறிக்கை விடச் சொன்னேனா? ஆனால், நான் சொல்லி நீங்கள் அப்படிச் செய்ததாக ஊரே பேசுகிறது.
என்னை தர்மசங்கடத்தில் தள்ளவேண்டும் என்றே இப்படிச் செய்தீர்களா? யாராவது சொல்லி நீங்கள் அப்படிச் செய்தீர்களா?’ என்று சத்தம் போட… தம்பிதுரை வாயடைத்துப்போய் நின்றாராம்.
அவரைப்போலவே, ‘சசிகலா முதல்வர் ஆகவேண்டும்’ என்று மீடியாக்களிடம் பேசிய அமைச்சர்களுக்கும் தனித்தனிக் கச்சேரி நடந்ததாம். ‘நாம சரியாதானே பேசினோம்’ என்ற குழப்பத்தோடு அவர்கள் வெளியில் வந்திருக்கிறார்கள்!”
‘‘அது இருக்கட்டும்… எப்போது பதவி ஏற்பார் சசிகலா?”
‘‘ஜனவரி 12, 14 ஆகிய தேதிகளைக் குறித்துக் கொடுத்துள்ளார்களாம். மார்கழியாக இருந்தாலும் ஜனவரி 12 பௌர்ணமி தினம், 14-ம் தேதி தை பிறக்கிறது. சலசலப்புகள், முணுமுணுப்புகள்கூட பொங்கல் கொண்டாட்டத்தில் அமுங்கிப் போகும் எனக் கணக்கு போடுகிறார்கள். எல்லாம் சரியாக அமைந்தால், அதிகபட்சம் 18-ம் தேதிக்குள் பதவி ஏற்பு முடிந்துவிடுமாம்!”
‘‘ஓ!’’
‘‘இப்போது இளவரசியை ‘நம்பர் டூ’ என்று கார்டனில் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். சசிகலாவுக்கு சில அன்புக்கட்டளைகள் போட்டுவருகிறாராம் இளவரசி. ‘முன்பைப்போல வீட்டிலிருக்கும் செக்யூரிட்டிகள், சமையல்காரர்கள், உதவியாளர்களிடம் சகஜமாகப் பேச வேண்டாம்.
முதல் மாடி அறையிலேயே இருக்கவேண்டும். அப்போதுதான், மற்றவர்களிடம் சசிகலாவின் இமேஜ் கூடும்” என்று நினைக்கிறாராம் இளவரசி.’’
‘‘இதை சசிகலா ஏற்றுக்கொள்வாரா?’’
‘‘ஏற்றுக்கொள்ளாமலா இருப்பார்! கார்டனில் இரண்டு டெய்லர்கள் இருக்கிறார்கள். அவர்களைத் தவிர்த்துவிட்டு, இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியாதான் சசிகலாவின் புது காஸ்ட்யூம்களை வடிவமைத்தாராம்.
ஜெயலலிதா வழக்கமாகத் தலையில் கொண்டை போட்டுக்கொள்வார். அதேபோல், சசிகலாவின் தலையில் கொண்டை போட வைத்தது கிருஷ்ணப்ரியா என்கிறார்கள் கார்டன் வட்டாரத்தில்.
சசிகலா, அ.தி.மு.க பொதுச்செயலாளராக டிசம்பர் 31-ம் தேதி கட்சித் தலைமை அலுவலகத்துக்கு வந்து பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது, ஜெயலலிதா போலவே அவர் மாறி இருந்தார்.’’
‘‘திவாகரன் வீடும் மகாதேவன் வீடும் பரபரப்பாக இயங்குவதாகச் சொல்கிறார்களே?’’
‘‘ஆம்! புத்தாண்டு காலை மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகளும், அர்ச்சனைகளும் திவாகரன் பெயரில் செய்யப்பட்டன. அவரின் ஆதரவாளராக மாறுவதற்கு அமைச்சர் ஆர்.காமராஜ் தீவிர முயற்சி செய்து வருகிறார்.
விசுவாசத்தைக் காட்ட காலையிலேயே திவாகரனை சந்திக்க வந்த அமைச்சர் ஆர்.காமராஜ் வலது பக்கத்தில் நின்றுகொண்டார். சிறிது நேரத்தில் தனது ஆதரவாளர்களுடன் வந்த முன்னாள் திருவாரூர் மாவட்டச் செயலாளர் எஸ்.காமராஜ் இடது பக்கம் நின்றுகொண்டார்.
எஸ்.காமராஜுடன் டிபன் சாப்பிட்ட திவாகரன், ஆர்.காமராஜுடன் மதிய உணவை முடித்திருக்கிறார். இருவரில் யாரை இனி திவாகரன் கைதூக்கி விடுவார் என்பதுதான் இப்போது மன்னார்குடி சஸ்பென்ஸ்!
அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், துரைக்கண்ணு ஆகியோரும் திவாகரனை  சந்தித்து வாழ்த்து பெற்றுச் சென்றிருக்கிறார்கள். முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் முதல்முறையாக திவாகரனை வந்து சந்தித்திருக்கிறார்.
‘காலில் விழச் சென்றார்’ என்றும், ‘பதற்றத்தில் தவறி கீழே விழுந்துவிட்டார்’ என்றும் மாறி மாறி சொல்கிறார்கள்.
தஞ்சையில் உள்ள மகாதேவன் வீடும் தடபுடலாக இருக்கிறது. அமைச்சர் துரைக்கண்ணு, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், எம்.பி பரசுராமன் எனப் பலரும் புத்தாண்டில் வந்து வாழ்த்து வாங்கிச் சென்றுள்ளார்கள். எல்லோருக்கும் அ.தி.மு.க கரைபோட்ட வேட்டி-சட்டையுடன், இனிப்பும் வழங்கியிருக்கிறார் மகாதேவன்.”
‘‘சரி, சேகர் ரெட்டி விவகாரம் எப்படி இருக்கிறது?’’
‘‘சேகர் ரெட்டி தலைமையில் சர்வேயர் ரத்னம், புதுக்கோட்டை ராமச்சந்திரன், ஆடிட்டர் பிரேம் ஆகியோர் பிடியில்தான் அரசு மணல் குவாரிகள் செயல்பட்டன.
இவர்கள் அனைவருமே இப்போது வருமானவரித் துறையிடம் சிக்கிவிட்டதால் தடைப்பட்டுள்ள மணல் பிசினஸைத் தொடர்ந்து செய்ய மணல்மேல்குடி கார்த்திகேயன் பெயரை மன்னார்குடி திவாகரன் பரிந்துரை செய்துள்ளாராம்.
குடவாசல் ராஜேந்திரனின் மருமகனான இவர், சைலன்ட்டாக திருச்சி ஏரியாவில் மணல் பிசினஸ் செய்துவந்தார். இனித் தமிழ்நாடு முழுவதும் மணலில் கோலோச்சப் போகிறார்.
2011-ம் ஆண்டு தென் மாவட்டங்களில் மணல் பிசினஸை சில மாதங்கள் செய்தவர் இவர். இவரின் அடாவடிப்போக்கினால் கோபம்கொண்ட ஜெயலலிதா, கட்சியில் இருந்தே இவரை நீக்கினார்.
ஜெயலலிதா இருந்த வரை கார்டனுக்குள் இவரால் நுழைய முடியாத நிலை இருந்தது. இப்போது திவாகரனின் நிழலாக மணல் பிசினஸை இவர் கையில் ஒப்படைக்க உள்ளார்கள். மாதா மாதம் பல கோடி கறுப்புப் பணம் இதில் விளையாடுமாம். இப்போதே கார்த்திகேயன் தலைமையில் ஒரு டீம் வசூலில் இறங்கிவிட்டார்கள்.’’
‘‘சேகர் ரெட்டியைத் தொடர்ந்து இப்போது இ.டி.ஏ. குரூப்பில் ரெய்டு நடந்துள்ளதே?’’
‘‘எம்.ஜி.ஆரின் நெருங்கிய நண்பரான பி.எஸ்.அப்துல்ரகுமான் உருவாக்கிய இ.டி.ஏ மற்றும் புஹாரி குழுமங்களில், வருமானவரித் துறை ரெய்டால் பல அரசியல் கட்சிகளும் கலங்கி உள்ளன.
இவர்களிடம் நன்கொடை வாங்காத அரசியல் கட்சிகளே இந்தியாவில் இல்லையாம். சமீபத்தில் இவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் தொடங்கியுள்ள ஆயிரம் கோடி மதிப்பிலான மின் உற்பத்தி நிலைய அனுமதிக்காக சில பி.ஜே.பி பிரமுகர்களைப் பெரிய அளவில் கவனித்துள்ளார்
களாம்.’’
‘‘எதற்காக இந்த ரெய்டு?’’
‘‘இந்த ரெய்டின் பின்னணியில் ஹவாலா விஷயங்கள் இருக்கலாம் என்கிறார்கள். அப்துல் ரகுமான் உயிரோடு இருந்த வரை அவருடைய உறவினர் சலாவுதீன் என்பவர் தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்டு தி.மு.க ஆட்சியில் பல ஒப்பந்தங்களைப் பெற்றார்.
துபாயில் ஸ்டாலினுக்குப் பாராட்டு விழா நடத்தினார். உளவுத்துறை அதிகாரியாக இருந்த ஜாஃபர் சேட்டுக்குப் பல உதவிகளைச்் செய்து கொடுத்தார்.
ராசாத்தி அம்மாளுக்கும் பல நிறுவனங்களை உருவாக்கிக் கொடுத்தார். ராம மோகன ராவ் ஆரம்பத்திலிருந்து இவர்களின் தொழில்துறை ஆலோசகராக இருந்து வருகிறார்.
தி.மு.க ஆதரவாளராக சலாவுதீன் வெளிப்படையாக இயங்கியதால் ஜெயலலிதாவால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். ஆட்சி மாறியவுடன்     அ.தி.மு.க-வுடன் ஒட்டிக்கொள்ள வந்த சலாவுதீனை சந்திக்க மறுத்தார் ஜெயலலிதா.
அப்துல் ரகுமான் மறைவுக்குப்பின் அவருடைய வாரிசுகள் சலாவுதீனை டம்மியாக்கிவிட்டு, மன்னார்குடி குடும்பத்துடன் நட்பு ஏற்படுத்திக் கொண்டார்கள்.
இதோடு பல ஏற்றுமதி நிறுவனங்களுடன் பார்ட்னராகப் பல நாடுகளில் தொழில் செய்கிறார்கள் இவர்கள். தற்போது இ.டி.ஏ குருப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட சிலர் கொடுத்த தகவல்கள் அடிப்படையில் இந்த ரெய்டுகள் நடத்தப்பட்டதாம்’’ என்ற கழுகார், மேலும் இரண்டு பெட்டிச் செய்திகளைக் கொடுத்துவிட்டு அவசரமாகப் பறந்தார்.
அட்டை ஓவியம்: கார்த்திகேயன் மேடி விகடன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக