வியாழன், 29 டிசம்பர், 2016

இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்கள் .. நாம மட்டும்தான் சொல்கிறோம் .. ஒரே மாதத்தில் எல்லாம் மறந்த அமைச்சர்கள் ,நிர்வாகிகள் ...

ஜெ. மறைந்த அன்று கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகேயுள்ள புலிவலம், பாசார், ஆவட்டி ஆகிய ஊர்களில் அதிமுக தொண்டர்கள் ஆண், பெண் அனைவரும் ஜெ. உருவப்படத்தை ஊர் பொது இடத்தில் வைத்து ஒப்பாரி வைத்து அழுதனர். ஆண்கள் மொட்டைபோட்டுக்கொண்டு அமைதியாக ஊர்வலம் வந்தனர். இப்படி தமிழகம் முழுவதும் கட்சித் தொண்டர்கள் பொதுமக்கள் கட்சி கடந்து மாற்றுக் கட்சியினர்களும் கலந்து கொண்டு படத்தை வைத்து அஞ்சலி செலுத்தி தங்கள் துக்கத்தை வேதனையை வெளிப்படுத்தினார்கள். ஆனால், கட்சியில் ஆட்சியில் பதவியில் இருந்தவர்கள், இருப்பவர்கள் எங்கே போனார்கள் என்றே தெரியவில்லை என்று குமுறுகிறார்கள் அடிமட்ட தொண்டர்கள்.
புலிவலம், பாசார், ஆவட்டி ஆகிய கிராமத்தில் உள்ளவர்கள் கூறியதாவது, எனக்கு 45 வயதாகிறது. அதிமுகவின் தீவிர தொண்டன். கட்சியின் கிளை செயலாளர். ஒன்றிய கவுன்சிலர் பொறுப்புகளில்இருந்து மக்கள் பணி செய்தவன். அம்மா மறைவு செய்தி கேட்டு பறந்து போனோம் சென்னைக்கு. கிட்டே போக முடியவில்லை.
கட்சிக்கு கட்டுப்பட்டு ஓட்டுபோட்ட நாங்கள் கண்ணுக்கு எட்டாத தூரத்தில் நின்றோம். நாங்கள் தேர்ந்தெடுத்த எம்பி, எம்எல்ஏக்கள் தெருவில் நின்றார்கள். மந்திரிகள் படிக்கட்டுகளில் கிடந்தார்கள். அம்மாவினால் விரட்டியடிக்கப்பட்ட கும்பல் அம்மாவை சுற்றி நின்றது.

எல்லாம் அதிகாரத்தை கைப்பற்ற நடக்கும் நாடகம். கட்சியிலும், ஆட்சியிலும் பதவி பெற்று சம்பாதித்த கூட்டம். அப்படியே அம்மாவை மறந்து போனது. வேதனையிலும் வேதனை. அம்மா பிறந்த நாள், பதவியேற்பு நாள், பிரச்சாரத்திற்க்கு வந்த நாட்களில் பக்கம், பக்கமா பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்தார்கள்.

அதனை பைல் செய்து காட்டி பதவி பெற்று பணம் சம்பாதித்தார்கள். அம்மா இறந்ததை எந்த நிர்வாகிகளும் கண்ணீர் அஞ்சலி என்று பத்திரிகைகளில் போடவில்லை. பக்கத்து மாநிலமான கேரள அரசு அம்மா மறைவுக்கு பத்திரிகையில் இரங்கல் தெரிவித்த விளம்பரம் கொடுத்தது. ஆனால் இங்கு விரல்விட்டு எண்ணக்கூடியவர்கள் மட்டுமே படம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
ஊருக்கு ஊர் பொதுமக்களும், கட்சி அடிமட்ட தொண்டர்களும், கட்சி கடந்த பலரும மனமுருகி படம் வைத்தம் ஒப்பாரி வைத்தும், அஞ்சலி செலுத்தினார்கள். பதவி பெற்று பலன் அனுபவித்த கும்பல் அப்படியே காணாமல் போய்விட்டது என்கிறார் கம்மாபுரம் ஒன்றியம் மருங்கூர் செல்வராசு. எனக்கு 57 வயதாகிறது. இன்று வரை ஏரிபுறம்போக்கில் குடிசை போட்டுத்தான் வாழ்கிறேன். எம்ஜிஆர் காலம் தொண்டு கட்சி தொண்டன். அரசு மீது எந்த சலுகையும் எதிர்பார்க்காமல் கட்சிக்காக பாடுபடுகிறவன். அம்மா இறந்த செய்தி கேட்டு துடித்துப்போனேன்.

கட்சி பொறுப்பில் இருந்த பெரிய நிர்வாகிகள் எங்கே போனார்கள் என்றே தெரியவில்லை. எங்கள் சொந்த உழைப்பில் பந்தல் போட்டு அம்மா படத்தை வைத்து மாலை போட்டு ஊர் மக்களோடு அஞ்சலி செலுத்தினோம் என்றார் மாரனோடை அந்தோணி. எங்க ஊரில் எம்ஜிஆர் கட்சி தொடங்கியபோது நாங்கள் இரண்டு பேர் மட்டுமே கொடி ஏற்றி கட்சியை துவங்கினோம். ஊரில் அவ்வளவு எதிர்ப்பு இப்போதுவரை கட்சி விசுவாசி தொண்டன். ஆனால் கட்சியில் அம்மாவின் பார்வை படாதா என்று காரின் முன்பு விழுந்து பதவி பெற்றனர் பலரும் ஆட்சியை பயன்படுத்தி பணம் சம்பாதிக்க மட்டுமே செய்தனர். பதவி போனவர்கள் திரும்பி பதவி பெறவும் புதிய ஆட்கள் பதவி வாங்கவும், பதவி கிடைக்காதா அதன் மூலம் பணம் சம்பாதிக்க மட்டுமே தவம் கிடந்தனர்.

அம்மா மறைந்த பிறகு இனி யாருக்கு பயப்பட வேண்டும் என்று துணிவு வந்துவிட்டது. அப்படிப்பட்டவர்கள் புதிதாக கட்சி பொறுப்பை யார் பெறுவார்கள் அவர்களுக்கு துதிபாடி கட்சி பதவி பெற காத்திருக்கிறார்கள்.

அம்மாவை ஒரே நாளில் மறந்த போலிகளை அடையாளம் கட்டு பதவிகளை பறிக்க வேண்டும். கட்சியை கரையான்கள் அறிக்கவிடக்கூடாது என்கிறார் செம்மனங்கூர் ரெங்கநாதன். அம்மா இறந்த துக்கத்தில் அதிர்ச்சி காரணமாக கட்சித் தொண்டர்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் இறந்துபோயுள்ளனர்.

அம்மா ஜெயிலுக்கு போனபோதும் சரி, இறந்த பிறகும் சரி கட்சியிலும், ஆட்சியிலும் பொறுப்பிலிருந்து சம்பாதித்தவர்கள் அதிகாரத்தின் மூலம் காரியம் சாதித்துள்ளனர் என்கிறார் மாம்பாக்கம் சேகர். மங்களுர், நல்லூர் ஒன்றியங்களில் பல கிராமங்களில் அம்மாவுக்காக மொட்டைபோட்டால் 2 ஆயிரம் ரூபாய் பணம்தரப்போகிறார்கள் என்று செய்தி பரவ பல ஊர்களில் வரிசையில வந்து மொட்டைபோட்டனர்.

பிறகு யாரோ கிளப்பிவிட்ட வதந்தி என்று தெரிந்து ஏமாற்றத்துடன் சென்றனர். சில ஊர்களில் அம்மா ஆதரவற்றவர்களுக்கு 1000 உதவி தொகை, இலவச அரிசி எல்லாம் கொடுக்கிறார்கள். அதிக போலிகள் நிறைந்த கட்சிகயாக உள்ளது எங்கள் கட்சி போலிகளை நீக்க வேண்டும் என்கிறார்கள் உண்மை தொண்டர்கள்.  நக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக