வியாழன், 29 டிசம்பர், 2016

தமிழக அரசின் டெண்டர்கள் தலைமை செயலர் RMR இன் மகன் விவேக்கின் நிறுவனங்கள் மூலம்தான்..

‘கம்பெனி’ விவேக் - நெட்வொர்க் - 5 தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில், வருமானவரித் துறை அதிகாரிகள் அள்ளிய தங்கம், பணத்தைவிட, அவருடைய மகன் விவேக் வீட்டில் அள்ளியதுதான்
அதிகம். குறுகிய காலத்தில், விவேக்கின் வளர்ச்சி அந்தளவுக்கு ஜெட் வேகம். சென்னையில் உள்ள பத்மசேஷாத்ரி பாலபவன் பள்ளியில் படித்தவர் விவேக். 2005-ல் கிண்டி பொறியியல் கல்லூரியில், ‘எலெக்ட்ரிகல் அண்டு எலெக்ட்ரானிக்ஸ்’ படித்துவிட்டு அமெரிக்கா பறந்துவிட்டார். அங்கு, ‘ரைட்’ பல்கலைக்கழகத்தில், ‘மனித வாழ்வியல் காரணிகள்’ என்ற தலைப்பில் ‘எம்.எஸ்’ முடித்தார். அத்துடன், ‘மைக்ரோசாஃப்ட்’ நிறுவனத்திலும் சீனியர் சர்வீஸ் இன்ஜினீயராக வேலை பார்த்துள்ளார். அங்கிருந்து இந்தியா திரும்பியவருக்கு, வரும் காலங்களில் தமிழகத்தின் டெண்டர்களைத் தீர்மானிக்கப் போகும் சக்தியாக மாறுவோம் என்று அப்போது தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.


ஐந்து வருடங்களுக்கு முன்பு தேனாம்பேட்டையில் அலுவலகம் திறந்த விவேக்குக்கு, தொழில் வாய்ப்புகள் தேடி வரத் தொடங்கின. காரணம், சேகர் ரெட்டி. இருவரும் எந்த அளவுக்கு நெருக்கம் என்றால், 0005 என்ற ஒரே பதிவு எண் கொண்ட கார்களைத்தான் வைத்திருக்கிறார்கள்.

 தமிழ்நாட்டில் எந்த டெண்டரும் ராம மோகன ராவ் கைப்படாமல் நகராது. அதற்கான கமிஷனைப் பெற மகனுக்கு ஒரு நிறுவனத்தைத் தொடங்கிக் கொடுக்கிறார் ராவ். அப்படி, விவேக் முதலில் தொடங்கியது, ‘மேன்பவர் கன்சல்டிங்’ நிறுவனம். இந்த நிறுவனம் மூலம் மூவாயிரம் பேர் தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் கான்ட்ராக்ட் ஊழியர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.

அவர்களின் ஊதியத்தில் இருந்து 10 சதவிகித கமிஷனை அந்த நிறுவனம் எடுத்துக்கொள்ளும்.

அதற்கு அடுத்து ஆரம்பித்தது லாஜிஸ்டிக் நிறுவனம். தூத்துக்குடி துறைமுகத்தில் நிலக்கரி எடுத்துச்செல்லும் பணி இந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. 2,500 லாரிகள் வரை சொந்தமாக வைத்து இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார் விவேக்.

அடுத்து ஆரம்பித்தது சாஃப்ட்வேர் தொடர்பான தொழில்கள். 14 லட்சம் இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தையும் விவேக்கின் நிறுவனம்தான் எடுத்துள்ளது.

எல்காட் நிறுவனத்தில் அதிகமாக டெண்டர்களை இவரது நிறுவனம் கைப்பற்றியது. இதேபோன்று ஆந்திர மாநிலத்திலும் பல்வேறு தொழில்கள் நடத்தி வருவதாக விசாரணையில் தெரிய வந்திருக்கிறதாம்.

 தடா பகுதியில் 5 ஆயிரம் ஏக்கர் நிலத்தை ஒரு ஏக்கர் ஒரு லட்சம் ரூபாய் என வாங்கி, பல கோடிகளுக்கு விற்றுள்ளதாகவும் இந்தத் தொழிலில் விவேக்குடன், ஆந்திர முன்னாள் முதல்வரின் மகனும் பார்ட்னராக இருந்துள்ளதாகவும் செய்திகள் வெளி வருகின்றன.

 மேற்கண்ட நிறுவனங்கள் எல்லாம் பணப்பரிவர்த்தனைக்குப் பயன்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட நிறுவனங்கள்தான். இந்த நிறுவனங்கள் காட்டியுள்ள வருமானம் என்பது விவேக்கின் மொத்த வருமானத்துடன் ஒப்பிடும்போது கொசுறு என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

 ‘எஸ்.ஆர்.எஸ் மைனிங்’ நிறுவனத்தின் ஆவணங்களை சோதனையிட்டபோது, விவேக்குடன் கொடுக்கல் வாங்கல் தொடர்பு இருந்தது தெரிந்தது. விவேக், குறுகிய காலத்தில், பல நிறுவனங்களைத் தொடங்கியுள்ளார். அதற்கு, பதுக்கல் பணம் உதவியாக இருந்ததும் தெரியவந்தது. அது மட்டுமன்றி, திருவான்மியூரில், விவேக் வசிக்கும் சொகுசு பங்களா, பல கோடி ரூபாய் மதிப்புடையது. தந்தையுடன் தங்கியிருந்த விவேக், அந்த சொகுசு பங்களாவுக்கு, சில மாதங்களுக்கு முன்புதான் குடிவந்துள்ளார்.

‘விர்து டெக்னாலஜிஸ்’, ‘3 லாக்’ என்ற நிறுவனங்களின் மேலாண் இயக்குநராக விவேக் உள்ளார். பெங்களூரிலும் விவேக் சில நிறுவனங்களை நடத்தி வருகிறார். சென்னை நந்தனம் சேமியர்ஸ் சாலையில் பிரபல ஆங்கில நாளிதழ் இயங்கி வரும் கட்டடத்தின் 3-வது மாடியில் இயங்கி வரும் தொழில்நுட்ப நிறுவன அலுவலகம், கப்பல் போக்குவரத்து ஏற்றுமதி - இறக்குமதி நிறுவன அலுவலகம் உட்பட மூன்று அலுவலகங்கள் விவேக்குக்குச் சொந்தமானவை.

விவேக்கின் நிறுவனத்துக்கு பாஸ்கர் நாயுடு என்பவர் இயக்குநராகக் காட்டப்பட்டுள்ளார். பத்மாவதி என்ற மருத்துவம் மற்றும் மருத்துவ மேலாண்மை சேவைகள் சார்ந்த நிறுவனத்துடன், தமிழக அரசின் சுகாதாரத் துறை கடந்த ஏப்ரல் மாதம் 25-ம் தேதி ஓர் ஒப்பந்தம் போட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தின்படி, 63 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளுக்குத் தேவையான ஒப்பந்தப் பணியாளர்களை வழங்க, பாஸ்கர் நாயுடுவின் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

இதற்காக, ஆண்டு ஒன்றுக்கு 129 கோடியே 86 லட்சத்து 52 ஆயிரத்து 203 ரூபாய் வரை டெண்டர் வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டதும் தற்போது விசாரிக்கப்படலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. - பிரம்மா படம்: மீ.நிவேதன்  விகடன் <

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக