செவ்வாய், 20 டிசம்பர், 2016

அதிமுக .... அப்படீன்னா? பாஜகவின் A டீம் பன்னீரு, B டீம் சசிகலா புஷ்பா, C டீம் தீபா,D டீம் சசிகலா நடராஜன் ,E டீம் ... மொத்தத்தில...


பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்துப் பேசுகிறார் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். நேற்று மாலை ஆளுநரையும் சந்தித்துப் பேசியிருக்கிறார். ‘மக்களால் தேர்வு செய்யப்பட்ட உங்களுக்கு, எந்த நேரத்திலும் துணையாக இருப்பேன்’ என ஆறுதல் கூறியிருக்கிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி, புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். அதேநேரம், அ.தி.மு.கவின் பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலாவை முன்னிறுத்தியுள்ளனர் கட்சியின் சீனியர்கள். சின்னமாவை பொதுச் செயலாளர் பதவிக்குக் கொண்டு வருவதற்காக, விதிகளைத் தளர்த்தவும் தயார்‘ எனப் பேசி வருகிறார் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சி.பொன்னையன். ‘ஆட்சிக்கு ஓ.பி.எஸ்; கட்சிக்கு சசிகலா’ எனப் பேசி வந்த அ.தி.மு.க அமைச்சர்கள் சிலர், நேற்று தங்கள் பாணியை மாற்றிக் கொண்டுவிட்டனர். ஜெயலலிதா சமாதியில் கூடிய அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு ஆகியோர், அம்மா பேரவை சார்பாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளனர்.< அந்தத் தீர்மானத்தில், ‘தமிழகத்தின் முதல்வராக சசிகலா பதவியேற்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளனர். இந்தத் தீர்மானத்தின் நகலை கார்டனுக்கே சென்று சசிகலாவிடம் வழங்கினார் உதயகுமார். ஆட்சி அதிகாரத்தைக் குறிவைக்கும் நோக்கில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை, ஓ.பி.எஸ் தரப்பினர்
ரசிக்கவில்லை.
 “மூன்று அமைச்சர்களைத் தூண்டிவிட்டு, ஜெயலலிதா பேரவை சார்பில் தீர்மானம் போட வைத்துள்ளனர். இது முழுக்க மன்னார்குடி உறவுகளின் வேலைதான். ‘நம்மால் பதவியைப் பெற்ற ஓ.பி.எஸ், முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிடுவார்’ என நம்புகின்றனர். அப்படியொரு சூழல் எழவில்லை. எம்.எல்.ஏக்களைத் தூண்டிவிட்டு, வலிந்து திணிக்கின்றனர். இதைப் பற்றி ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் விரிவாகப் பேசியுள்ளார் ஓ.பி.எஸ்” என விவரித்த அ.தி.மு.க நிர்வாகி ஒருவர்,
“ஆட்சி அதிகாரத்திற்குள் மன்னார்குடி உறவினர்களின் ஆதிக்கம் தொடர்ந்து கொண்டே வருகிறது. இப்படியே சென்றால், தமிழக அமைச்சரவையின் சார்பில் சுயமாக முடிவெடுக்க முடியாது என்பதையும் ஓ.பி.எஸ் உணர்ந்திருக்கிறார். நேற்று மாலை ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் தமிழக அரசியலில் நடக்கும் விஷயங்கள் குறித்து விவாதித்துள்ளார். அவரிடம் பேசிய ஆளுநர், ‘ நீங்கள் மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநிலத்தின் முதலமைச்சர். உங்களுக்கு ஆதரவாகத்தான் நான் இருப்பேன். நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தாலும், நீங்கள்தான் வெற்றி பெறுவீர்கள். ஆட்சிக்காலம் முடிவடைய இன்னும் நான்கரை ஆண்டுகாலம் மீதம் இருக்கிறது. ஒருவேளை நம்பிக்கை ஓட்டெடுப்பில் நீங்கள் தோற்றுப் போனாலும், அதற்கு அடுத்தபடியாக தி.மு.கவுக்குத்தான் வாய்ப்பு அளிப்பேன். உங்கள் கட்சிக்குள் வேறு ஒருவரை முதல்வராகக் கொண்டு வருவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். மக்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். சிறப்பாகச் செயல்படுங்கள்’ என ஆறுதலாகப் பேசினாராம். ஆளுநரின் வார்த்தைகளில் மகிழ்ந்து போய், பிரதமரைச் சந்திக்க உற்சாகமாக டெல்லி கிளம்பினார் ஓ.பி.எஸ்” என விவரித்தனர்.
‘முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்; நாடாளுமன்ற வளாகத்தில் வெண்கலச் சிலை வைக்க வேண்டும்’ என்ற அமைச்சரவையின் தீர்மானங்களைக் கையில் வைத்துக் கொண்டு பிரதமரை சந்திக்க இருக்கிறார் ஓ.பி.எஸ். ‘ஜெயலலிதாவை முன்னிறுத்தியே அவருடைய ஒவ்வொரு நடவடிக்கைகளும் அமைந்திருக்கிறது. ஓ.பி.எஸ் தலைமையில் ஆட்சியில் தொடர்வதைத்தான் மத்திய அரசும் விரும்புகிறது. கறுப்புப் பண விவகாரத்தில் மோடியை, சசிகலாவின் கணவர் நடராஜன் விமர்சித்ததையும் மோடி கவனித்திருக்கிறார். ஜெயலலிதா பேரவையின் தீர்மானங்களும் பொதுக்குழு முடிவுகளும் எப்படி அமைந்தாலும் ஆட்சி அதிகாரம் நிறைவடையும் வரையில் ஓ.பி.எஸ்தான் முதல்வராகத் தொடர்வார்’ என்கின்றனர் பா.ஜ.க வட்டாரத்தில்.
“தன்னை முதல்வர் பதவிக்கு முன்னிறுத்துவதை, சசிகலாவே விரும்பில்லை. இதுதொடர்பாக, அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை அழைத்துக் கண்டித்தார். ஓ.பி.எஸ் வசமே அதிகாரம் தொடரட்டும் என்றுதான் விரும்புகிறார். இதை தேவையில்லாமல் சிலர் அரசியல் ஆக்குகின்றனர்” என்கின்றனர் கார்டன் வட்டாரத்தில்.
ஆனால், மீடியாக்களில், ‘முதல்வர் பதவிக்கு சசிகலா வர வேண்டும்’ என தீவிரமாக முழங்கிக் கொண்டிருக்கின்றனர் அ.தி.மு.க சீனியர்களில் ஒருபிரிவினர். அதற்கு எதிர்முகாம் நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது!
-ஆ.விஜயானந்த்
vikatan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக