ஞாயிறு, 27 நவம்பர், 2016

மக்கள் துயரம்: மோடியை பாராட்டிய கோபாலசாமிக்கு முத்தரசன் கண்டனம்!


minnambalam.com :மத்திய அரசின் கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைக்கு திடீர் ஆதரவு கொடுத்த மதிமுக பொதுச் செயலாளரும், மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ-வுக்கு, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். கறுப்புப் பணம் ஒழிப்பு நடவடிக்கை என்று கூறி ரூபாய் 500, 1000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த 8ஆம் தேதி பிரதமர் மோடி திடீரென அறிவிப்பு செய்தார். அதையடுத்து, அந்த ரூபாய் நோட்டுகளை மாற்றுவது குறித்து தினந்தோறும் ஒரு அறிவிப்பு விடுத்து பொது மக்களை குழப்பி வந்தனர். ஏற்கனவே போதிய திட்டமிடல் இல்லாத காரணத்தால் வங்கிகளிலும், ஏடிஎம்களிலும் பணமின்றி கடந்த 19 நாட்களாக பொதுமக்கள் பெரும் தவிப்படைந்து வந்தனர். இந்நிலையில், பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு குறித்து, மதிமுக பொது செயலாளர் வைகோ நேற்று மோடியை பாராட்டி கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையில் மோடி செயல் துணிச்சலான செயல் என்றும், மோடி எடுத்த நடவடிக்கை சரியானதே என்றும் பாராட்டு தெரிவித்தார்.
அதையடுத்து, வைகோ-வின் அறிவிப்புக்கு மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலைச் சிறுத்தை, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு போன்ற கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது கூறுகையில், “மோடியின் அறிவிப்புக்கு வைகோ திடீரென ஆதரவு கொடுப்பது ஏன்? பெருமுதலாளிகளின் கடன் தொகை ரூ.7,௦16 கோடி தள்ளுபடி செய்யப்பட்டதை வைகோ வரவேற்கிறாரா?” என்று அவர் கேள்வி எழுப்பினார். மேலும், “கடந்த 2௦ நாட்களாக பொதுமக்கள் படும் துயரம் வைகோ கண்களுக்கு தெரியவில்லையா?கறுப்புப் பணம் என்பதை பதுக்கி வைத்திருப்பவர்கள் தங்கமாகவோ, நிலமாகவோ, வெளிநாடுகளிலோ பதுக்கி வைத்திருப்பார்கள். கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் யாரும் இதில் பாதிக்கப்படவில்லை. வங்கிகளில் கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. விவசாயக்கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை, ஆனால், மோசடி செய்து வாங்கிய கடனை திருப்பி கொடுக்கக்கூடாது என்று செயல்படும் பெரும் நிறுவனங்களின் ரூ.7,000 கோடி கடனையும், கடந்த இரண்டு மாதங்களில் ரூ.11 லட்சம் கடன் தொகையை மோடி தள்ளுபடி செய்ததை வைகோ வரவேற்பாரா?
கறுப்புப் பணம் ஒழிப்பு நடவடிக்கைக்கு நாங்கள் மறுப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், அதை செயல்படுத்தும் விதம்தான் வேறுவிதமாக மக்களை பாதிக்கும் வகையில் உள்ளது. கருத்து தெரிவிப்பதில் ஒவ்வொருவருக்கும் உரிமை உள்ளது. மத்திய அரசின் பல்வேறு கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த வைகோ, நிச்சயம் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிக்க மாட்டார்” என்று கூறினார். அதேபோல், “ரூபாய் நோட்டு பிரச்னை குறித்து வெளியே பேசும் மோடி, ஏன் நாடாளுமன்றத்துக்குள்ளே சென்று பேச மறுத்து வருகிறார்?” என்றும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக