திங்கள், 28 நவம்பர், 2016

சிறையிலிருந்து தப்பிய காலிஸ்தான் ஹர்மிந்தர் சிங் கைது.. தாடி மீசையை வழித்து மாறு வேஷம்..

இந்தியாவின் பஞ்சாப் மாநில சிறைச்சாலையிலிருந்து தப்பிய காலிஸ்தான் விடுதலை முன்னணியின் தலைவர் ஹர்மிந்தர் மின்ட்டூ, புதுடில்லியில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். ரயில் நிலையத்திற்கு அருகே அவர் கைதானதாக, பஞ்சாப் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். பயங்கரவாதக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள மின்ட்டூ உள்ளிட்ட ஆறு கைதிகளை, ஆயுதந்தாங்கிய குழு ஒன்று நேற்று, நாபா என்னும் ஊரிலுள்ள சிறையிலிருந்து விடுவித்துச் சென்றது. பாட்டியாலா மாவட்டத்திலுள்ள சிறைக்குள், போலீசாரைப் போல் உடையணிந்த மர்ம நபர்கள் கையெறிகுண்டுகளை வீசியும் துப்பாக்கியால் சுட்டும் கைதிகளை விடுவித்துச் சென்றனர். அதனையடுத்து, பக்கத்து மாநிலங்களில் விழிப்புநிலை உயர்த்தப்பட்டது. எஞ்சிய 5 கைதிகளைத் தேடும் பணி தொடர்கிறது.


 இதற்கிடையே, சிறைக் கைதிகள் தப்பிச் சென்ற சம்பவத்தின் தொடர்பில், சிறைத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தற்காலிகப் பதவிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். பஞ்சாப் மாநிலத் துணைமுதல்வர் திரு. சுக்பீர் சிங் பாதல் அதனைத் தெரிவித்தார். மேலும் சிறைக் கண்காணிப்பாளரும், துணைக் கண்காணிப்பாளரும் வேலைநீக்கம் செய்யப்பட்டனர். கைதிகள் தப்பிய சம்பவம் குறித்த புலன் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறிய துணைமுதல்வர், ஓரிரு நாட்களில் மேல்விவரங்கள் தரமுடியுமென்றார்  தினமணி,காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக