வியாழன், 10 நவம்பர், 2016

நடுத்தர கீழ்மட்ட மக்களின் சேமிப்பை சூறையாடி அம்பானி, அதானி ,வங்கிகள் ...? வசதியான திட்டம்?

நம் புழக்கத்தில் இருந்த ரூபாய் 500, 1000 நோட்டுகள் இனி செல்லாது என்று அறிவித்துள்ள இந்தியப் பிரதமர் மோடி, அதற்குச் சொல்லியிருக்கும் காரணம், ‘கறுப்புப்பணத்தை ஒழிக்க இந்த நடவடிக்கை’ என்கிறார். சாதாரண பாமர மக்கள் மனதில் எழும் கேள்விகளுக்கு எப்போதுமே பொருளாதார வல்லுநர்களோ, மத்தியதர வர்க்க கோட்பாட்டாளர்களோ பதில் சொல்வதில்லை. அவர்கள் கேட்கும் மிக எளிமையான ஒரு கேள்வி ரூபாய் 500, 1000 நோட்டுகள் உற்பத்தி செய்யப்பட்ட பின்னர்தான் கள்ளப்பணம் உருவானதா என்பதுதான்.
இந்திய மக்கள் முதன்முதலாக இந்த இன்னலை அனுபவிக்கிறார்கள். காரணம், முன்னறிவிப்பு எதுவும் இன்றி திடீரென இரவு 8 மணிக்கு ரூபாய் 500, 1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்து, மறுநாள் வங்கிகளை மூடி, இரண்டு நாட்கள் ஏ.டி.எம்-களை மூடி, மக்களை முடக்கி நிலைமையை சமாளிக்கிறது அரசு. இந்த அணுகுமுறைதான் சர்வாதிகாரத்தனமாக இருக்கிறதேயொழிய கறுப்புப்பணத்தை ஒழிக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகள் சரி. ஆனால் வழிமுறை இதுவல்ல;
இந்திய வரலாற்றில் ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெற்ற வரலாறு இதற்கு முன்னரும் உண்டு.

(ஒழிக்கப்பட்ட ரூபாய் 5000 நோட்டு)
நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிவரை நாம் பார்த்த அதிகபட்ச பணமே ரூபாய் 1000 தான். நாளை ரூபாய் 2000 நோட்டுகள் புழக்கத்துக்கு வரும்வரை துரதிருஷ்டவசமாக ரூபாய் நூறு நோட்டுகள் பெருமதிப்புமிக்கதாக மாறிவிட்டது.
அந்த வகையில், இந்தியாவில் எழுந்துள்ள இந்த குழப்பம் தற்காலிகமானதுதான் என்றாலும் இதற்கு முன்னரும் இதுபோன்ற நடவடிக்கைகள் இருந்திருக்கின்றன. இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்தே கறுப்புப்பணம் மிகப் பெரிய பிரச்னையாக இருந்து வந்தது. இந்திய ரூபாய்களை அச்சிடுவதற்காக உருவாக்கப்பட்ட ரிசர்வ் வங்கி 1938ஆம் ஆண்டு ரூபாய் 1000, 10,000 நோட்டுகளை அச்சிட்டது. ஆனால் மிகப்பெரிய சவாலாக இருந்த கறுப்புப்பணத்தை ஒழிக்க 1946இல் புழக்கத்தில் இருந்த ரூபாய் 10,000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தது இந்திய அரசு. மீண்டும் ரூபாய் 1000, ரூபாய் 10,000 நோட்டுகளை புழக்கத்துக்கு கொண்டுவந்த ரிசர்வ் வங்கி கூடுதலாக ரூபாய் 5,000 நோட்டுகளையும் 1954ஆம் ஆண்டு நடைமுறைக்குக் கொண்டுவந்தது. ஆனால், கறுப்புப்பணத்தை ஒழிக்க முடியாத நிலையில், 1978ஆம் ஆண்டில் ஆட்சி செய்த ஜனதா கட்சி தலைமையிலான அரசு ஜனவரி 16ஆம் நாள் அவசரச்சட்டம் மூலம் ரூபாய் 5,000 மற்றும் ரூபாய் 10,000 நோட்டுகள் இனி செல்லாது என அறிவித்தது. கறுப்புப்பணத்தை ஒழிக்க அப்போதைய மத்திய அரசால் அமைக்கப்பட்ட வான்சு கமிட்டி செய்த பரிந்துரைகளின் பேரிலேயே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ரூபாய் 5,000, 10,000 நோட்டுகள் காணாமல்போன நிலையில், 1987ஆம் ஆண்டு ரூபாய் 500 நோட்டும், மில்லேனியம் பிறந்த 2000இல் ரூபாய் 1000 நோட்டும் அச்சடிக்கப்பட்டன. அப்படி அச்சடிக்கப்பட்ட ரூபாய் 500, 1000 நோட்டுகள்தான் கறுப்புப்பணப் புழக்கத்துக்கு காரணம் என்கிறது மோடி சர்க்கார்.
கறுப்புப்பணப் புழக்கத்துக்கு காரணம் என்று ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவது முதன்முறை அல்ல. ஆனால், ஒவ்வொரு முறையும் செல்லாது என அறிவிக்கும்போது கறுப்புப்பணத்தை காரணமாகச் சொல்வதே வேடிக்கையாக இருக்கிறது.
ரூபாய் 500, 1000 நோட்டுகள்தான் கறுப்புப்பண புழக்கத்துக்குக் காரணம் என்றால், இந்திய வரலாற்றில் இதற்கு முன்னர் கறுப்புப்பணம் இருந்ததில்லையா என்ற கேள்விக்கு யார் பதில் சொல்வார்கள்.
இதற்கு முன்னரும், இதே கறுப்புப்பண ஒழிப்பு என்ற காரணத்தைக் காட்டித்தான் ரூபாய் நோட்டுகளை ஒழித்தது இந்திய அரசு. ஆனால் பதவியேற்ற புதிதில் ரூபாய் 28 லட்சம் கோடி வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருப்பதாக மோடியே குற்றம் சுமத்தினார். ஆக, கறுப்புப்பணத்தை ஒழிக்க ரூபாய் நோட்டுகளை ஒழிப்பது பலன் கொடுக்குமா என்ற கேள்வி இயல்பாகவே உருவாகிறது.

(செல்லாமல் போன ரூபாய் 10,000 நோட்டு)
கறுப்புப்பண ஒழிப்பும் இந்திய ஆளும்வர்க்கங்களும்
கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது, ஜந்தர்மந்தரில் கறுப்புப்பண ஒழிப்பு என்ற கோஷத்தோடு அன்னா ஹசாரே போராட்டத்தை தொடங்கியபோது அதற்கு பாஜக-வின் முழு அளவிலான ஆதரவு இருந்தது. மிகத் துல்லியமாக காங்கிரஸ் கட்சிக்கு எதிரான போராட்டமாக அது மாற ஹசாரேவோடு பாஜக தலைவர்கள் நட்புகொண்டதே காரணமாக இருந்தது. இந்த நட்புதான் ஹசாரேவுக்கும் கெஜ்ரிவாலுக்கும் இடையே பிளவை உருவாக்கியது. காரணம், கெஜ்ரிவால் அரசியலில் தனக்கென்று தனித் திட்டம் ஒன்றை வைத்திருந்தார். ஹசாரே பாஜக-வோடு நெருங்குவதால் அதற்கு பங்கம் வரலாம் என்று கருதிய கெஜ்ரிவால், ஹசாரேவிடம் இருந்து விலகி தனிப் பாதையில் பயணத்தை தொடங்கினார்.
இந்நிலையில்தான், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கறுப்புப்பண ஒழிப்பை பிரதான தேர்தல் கோஷமாக முன்வைத்தது பாஜக. அந்த தேர்தல் பிரச்சாரத்தில்தான் “பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப்பணத்தை மீட்டு உங்கள் ஒவ்வொருவர் வங்கிக்கணக்கிலும் ரூபாய் 15 லட்சத்தை டெபாசிட் செய்வேன்” என்றார். ஆனால் இப்போது மோடி குறிவைத்துள்ளது கறுப்புப்பணத்தையா அல்லது இந்திய கீழ், மத்தியதர வர்க்க மக்களிடம் உள்ள சேமிப்புப் பணத்தையா என்பதுதான் முக்கியமாக எழுந்துள்ள கேள்வி.
கறுப்புப்பண வங்கிகள்
சுவிஸ் வங்கியில் மட்டுமேதான் இந்தியப் பெருமுதலைகளின் கறுப்புப்பணம் இருக்கிறதென்றும் அதை மத்திய அரசால் மீட்டுவிட முடியும் என்றும் இவர்கள் மக்களை நம்பவைக்கிறார்கள். சரி, அது என்ன சுவிஸ் வங்கி? நம்மூரில் உள்ள இந்தியன் வங்கி, மெர்க்கண்டைல் வங்கி மாதிரியா என்றால் இல்லை. உலகெங்கிலும் உள்ள பெரும் பணக்காரர்கள் தேவைக்கதிகமான பணத்தை என்ன செய்வதென்று தெரியாமல் திண்டாடிக் கொண்டிருந்தபோது, சுவிட்சர்லாந்து அரசோ ஒரு குறிப்பிட்ட தொகைக்குமேல் கறுப்புப்பணத்தை தங்கள் நாட்டு வங்கிகளில் முதலீடுபவர்கள் எங்களுக்கு வரி செலுத்த வேண்டியதில்லை என்பதோடு, அவர்கள் குறித்த ரகசியங்களும் பேணப்படும் என்று அதற்கான சட்ட உத்திரவாதத்தையும் வழங்கி, தங்கள் நாட்டு வங்கிகளில் பணம் முதலீடு செய்ய உலகெங்கிலும் உள்ள கறுப்புப்பண முதலைகளை அழைத்தது. உலகெங்கிலும் உள்ள கோடீஸ்வரர்கள் தங்களின் கறுப்புப்பணத்தை கொண்டுபோய் சுவிஸ் நாட்டு வங்கிகளில் பதுக்கினார்கள். சுவிஸ் நாட்டிலுள்ள வங்கிகளில் மட்டுமல்ல; உலகெங்கிலும் உள்ள குட்டிக்குட்டி தீவுகளில்கூட இம்மாதிரி வங்கிகள் இருக்கின்றன. நரசிம்மராவின் ஆட்சிக்காலத்தில் பெரும் சர்ச்சையை உருவாக்கிய செயின்ட் கிட்ஸ் வழக்குகூட இம்மாதிரியான ஒன்றுதான். செயின்ட் கிட்ஸ் என்பது மத்திய அமெரிக்காவில் உள்ள கரீபியன் தீவுக் கூட்டங்களில் ஒன்று. செயின்ட் கிட்ஸ் மாதிரி செயின்ட் நேவீஸ், கிறிஸ்டோபர், லூசியா, டிரினிடாட் என்று பல பெயர்களால் இத் தீவுகள் அழைக்கப்படுகின்றன. பெரும்பாலான ரஷ்ய, இந்திய முதலாளிகள் கறுப்புப்பணத்துக்கு பாதுகாப்பு கருதி, இத்தீவுகளில் உள்ள வங்கிகளில் ரகசியக் கணக்கு தொடங்குவதைக் காட்டிலும் சுவிட்சர்லாந்து வங்கிகளே கறுப்புப்பணத்துக்குப் பாதுகாப்பு என்று நினைத்து அங்கு கொண்டுபோய் பத்திரமாகப் பதுக்கி வைத்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. அந்த வகையில், சுவிஸ் நாட்டில் உள்ள முக்கியமான வங்கியான யூ.பி.எஸ். வங்கியில் மட்டும் சுமார் 30 லட்சம் கோடி அளவிலான தொகை இந்திய விஐபி-க்களால் வைக்கப்பட்டுள்ளது என்று அந்த வங்கியே அமெரிக்காவுக்கு வழங்கிய ஆவணம் ஒன்றில் தெரிவிக்க, அதுதான் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக-வின் ஒரு கோஷமாக மாற்றப்பட்டது.
மன்மோகன் சிங் தலைமையிலான கடந்த காங்கிரஸ் அரசில் அப்போது நிதியமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி, கண் துடைப்புக்காக சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் வைத்துள்ள கறுப்புப்பணம் குறித்த விவரங்களை சுவிட்சர்லாந்து அரசிடம் கேட்டபோது சுவிஸ் அரசு, ‘இந்திய அரசு தனது நாட்டு டெலிபோன் டைரக்டரியை எங்களிடம் தந்து, அதில் உள்ளவர்களின் பெயரில் ரகசிய கணக்கு இருக்கிறதா என்று கேட்கலாம் என்று நினைத்தால், அது நடக்காது. அதை சுவிஸ் நாட்டு சட்டமும் அனுமதிக்காது. எனவே, ரகசியக் கணக்கு வைத்துள்ளவர்களின் பட்டியலைக் கேட்டு இந்தியா எங்களை அணுக வேண்டாம்’ என்று நெத்தியடியாகக் கூறியது. இது, மோடிக்கும் தெரியும். சுவிஸ் உள்ளிட்ட பல தீவுகளில் உள்ள இந்த வங்கிகளில் உள்ள பெருமுதலாளிகளின் கறுப்புப்பணத்தில் இந்திய அரசு மட்டுமல்ல; எவருமே கை வைக்க முடியாது. ஆனால், சேமிப்பு மரபில் வாழப் பழகிய இந்திய மக்களின் மரபார்ந்த பழக்கமாக உள்ள சொந்த சேமிப்பு என்னும் பணத்தை குறிவைத்திருக்கிறார்கள்.
லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை குறிவைத்துள்ள பன்னாட்டு நிறுவனங்கள் நீண்ட நாட்களாக எல்.ஐ.சி. தொழிலாளர் பிராவிடண்ட் பண்டு உள்ளிட்ட நிறுவனங்களில் குவிந்துகிடக்கும் இந்திய மக்களின் பணத்தை கடனாகவோ, பங்குச் சந்தை முதலீடாகவோ கேட்டு வருகின்றன. அதுபோல, இந்திய குடிமக்கள் அனைவரும் வங்கிக்கணக்கு வைத்திருக்க வேண்டும் என்பது மோடியின் திட்டம். இன்னொரு பக்கம், பெருமுதலாளிகள் வங்கிகளில் வைத்திருந்த வாராக் கடனை வசூலிப்பதற்குப் பதில் தள்ளுபடி செய்தார் மோடி. வாராக் கடனை வசூலிப்பதில் தீவிரம் காட்டிய முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் அவமானப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
இப்போது, மக்கள் தங்களின் வீடுகளில் வைத்திருக்கும் சேமிப்புகளை வங்கிகளில் திரட்டி அதைக் கடனாக கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கும் தந்திரம்தான் இதுவேயன்றி, கறுப்புப்பணத்தை ஒழிக்க ரூபாய் 500, 1000 நோட்டுகளை ஒழித்தோம் என்பது பச்சையான பொய். ஏனென்றால், கறுப்புப்பணம் கறுப்பாக இருப்பதில்லை. அது தங்கமாக, நிலமாக, கட்டடங்களாக தொழில் முதலீடுகளாக பல வண்ணங்களில் நமது நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ளன. அதனால், கறுப்புப்பணம் ரூபாய் 500, 1000 ரூபாய் தாள்களில் இருந்து தொடங்கவும் இல்லை. இப்போது வந்திருக்கும் ரூபாய் 2000 தாளோடு முடியப்போவதும் இல்லை.
டி.அருள் எழிலன்  minnambalam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக