வியாழன், 10 நவம்பர், 2016

சில்லறை தட்டுப்பாடு: ரூ.500-க்கு 100 கமிஷன்! இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?

பிரதமர் மோடி கறுப்புப்பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக திடீரென நேற்று முன்தினம் ரூபாய் 500, 1000 நோட்டுகளை செல்லாது என்று அறிவிப்பு செய்தார். ஆனால், ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்துகளில் இந்த நோட்டுகள் செல்லும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ஊருக்கு செல்லும் பயணிகள் நிம்மதியாக ரயில் நிலையங்களுக்கு வந்தனர். ஆனால், அங்கே சில்லறை தட்டுப்பாட்டால் பட்ட அவஸ்தை அவர்களை நிம்மதி குலைய வைத்தது. நேற்று சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வந்த பயணிகள் அனைவரும் ரூபாய் 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் ரூபாய் 500, 1000 ரூபாய் நோட்டுகளை டிக்கெட் கவுன்ட்டரில் கொடுத்தனர்.

இதனால் டிக்கெட் கவுன்ட்டர்களில் கடும் சில்லறை தட்டுப்பாடு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் கவுன்ட்டர்களில் இருக்கும் சில்லறையும் தீர்ந்ததால் பயணிகளுக்குச் சில்லறை கொடுக்க முடியாமல், கவுன்ட்டர்களில் சில்லறை இல்லை என்று கூறினர். அதனால் பயணிகள் டிக்கெட் எடுக்க முடியாமல் தவிப்புக்குள்ளாயினர்.
சில்லறை குறித்து, கவுன்ட்டரில் டிக்கெட் கொடுப்பவருக்கும் பயணிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பின்பு போலீஸ் பாதுகாப்புடன் டிக்கெட் கவுன்ட்டர்கள் நேற்று செயல்பட்டன. இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி சில மர்ம நபர்கள் ரூபாய் 500க்கு, ரூபாய் 100 கமிஷன் பெற்று கொண்டு சில்லறை கொடுத்தனர். பயணிகளும் டிக்கெட் எடுக்க வேண்டும் என்பதால், வேறு வழியில்லாமல் கமிஷன் கொடுத்து சில்லறை வாங்கினார்கள்.  minnambalam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக