வியாழன், 10 நவம்பர், 2016

வங்கிகள் திடீர் மூடல்:மக்கள் ஏமாற்றம்!

நேற்று முன்தினம் (08-11-2016) நள்ளிரவோடு 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டநிலையில், இன்று முதல் வங்கிகளில் அதை மாற்றிக் கொள்ளலாம் என்ற அரசின் உத்தரவுப்படி மக்கள் இன்று அதிகாலை முதலே வங்கிகளில் குவியத் தொடங்கினார்கள். ஆனால் மதியத்துக்குமேல் பல வங்கிகள் பணமில்லை என்று, தங்கள் கவுன்ட்டர்களை மூடிக்கொண்டதால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.இன்றைய பணப் பரிமாற்றத்தைப் பொருத்தவரை, வங்கிகளுக்குச் சென்ற மக்கள் பெரும்பாலும் எதிர்பார்த்தது நூறு ரூபாய் நோட்டுகளைத்தான். நபர் ஒருவர் நான்காயிரம் ரூபாய் பெற்றுக் கொள்ளலாம் எனும்நிலையில், பெரும்பாலும் 2 இரண்டாயிரம் ரூபாய் தாள்களாக நான்காயிரம் ரூபாய்களையே வங்கிகள் வழங்கின. இன்னொருபக்கம், ஒரே ஒரு இரண்டாயிரம் ரூபாய் நோட்டை வழங்கிய வங்கிகளும் உண்டு. ஆனால் இந்த இரண்டாயிரம் ரூபாயை புழக்கத்தில்விடுவதில் சிக்கல் உள்ளது. காரணம், நூறு ரூபாய் சந்தையில் இல்லை. கடந்த இரு நாட்களாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்க இதுவே காரணம் எனும்நிலையில், வங்கிகளில் மிகக் குறைந்த அளவில்தான் நூறு ரூபாய் நோட்டுகள் இருந்தன.
பெரும்பாலும் 2000 ரூபாய் நோட்டுகளே மக்களுக்கு வழங்கப்பட்டது. அதுவும் கிராமப்புற வங்கிகளின் நிலை பரிதாபமாக இருந்தது. நகர்ப்புற வங்கிகளுக்கே தேவையான அளவு பணம் அனுப்பப்படாதநிலையில் கிராமப்புற வங்கிகள் தடுமாறித்தான் போயின.
காலை 6 மணி முதல் மக்கள் திரண்டபோதிலும் அவர்கள் கைகளில் ஒன்றோ, இரண்டோ 2000 ரூபாய் நோட்டுகளே இருந்தன. வாடிக்கையாளர்கள் கேட்ட 50, 100, 20, 10 போன்ற நோட்டுகள் சுத்தமாக இல்லை. இதுதான் தமிழகம் முழுக்க உள்ள வங்கிகளின் நிலை. ஆனால் மதியம் மூன்று மணிக்கு முன்னரே பெரும்பாலான வங்கிகள் கவுன்ட்டர்களை மூடிவிட்டார்கள். காரணம் கேட்டபோது, ‘பணம் இல்லை காலியாகிவிட்டது. ரிசர்வ் வங்கியில் இருந்து புதிதாக பணம் வந்தால் மட்டுமே நாளை கொடுக்க முடியும்’ என்று சொன்னபோது, வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்கள். வங்கிகள் கூடுதல்நேரம் இயங்கும் என்றும் சனி, ஞாயிறு தினங்களின் விடுமுறை ரத்து செய்யப்பட்டிருக்கிறது என்றும் அரசு அறிவித்துள்ளநிலையில் இந்த சேவையை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பயன்படுத்த முடியவில்லை. minnambalam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக