செவ்வாய், 1 நவம்பர், 2016

மோடியை நேருக்கு நேர் கேட்ட அர்விந்த் கேஜ்ரிவால் :நீதிபதிகளின் தொலைபேசிகளை ஒட்டு கேட்டு......


‘நீதிபதிகளின் தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக்கேட்பதன் மூலம் நீதித்துறை மீது ஆதிக்கம் செலுத்த முயல்கிறதா’ என்ற கேள்வியைப் பிரதமர் மோடியின் முன்னிலையிலேயே கேட்டு அதிர்வலைகளை எழுப்பியிருக்கிறார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.
டெல்லி உயர்நீதிமன்ற பொன்விழா கொண்டாட்டம் விஞ்யான் பவனில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தாக்கூர், சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். அந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் “தங்கள் தொலைபேசி அழைப்புகள் மத்திய அரசால் ஒட்டுகேட்கப்படுவதாக நீதிபதிகள் சிலர் கவலையில் இருக்கின்றனர் என்பதை நான் அறிவேன். நீதிபதிகளின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்படுவது உண்மையென்றால் அது கடுமையாக கண்டிக்கத்தக்கச் செயலாகும்.
ஒருவேளை ஒட்டுகேட்பது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இதைக்கொண்டு நீதிபதிகள் மீது ஆதிக்கம் செலுத்த முடியும். நீதிபதிகள் ஏதேனும் தவறு செய்தால்கூட அவர்களின் தொலைபேசி அழைப்புகள் ஒட்டுகேட்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. தவறு செய்வதை கண்டறிய பல வழிகள் உள்ளன. நீதிபதிகள் தொலைபேசி அழைப்பு ஒட்டுகேட்கப்படுவது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். நீதித்துறையின் சுதந்திரத்தில் அத்துமீறும் செயலாகும். உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதற்கு உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் வழங்கிய பரிந்துரைகளை ஒன்பது மாதங்களாக அரசு கிடப்பில் போட்டுள்ளது. கொலீஜியத்துடன் மோதல் போக்கை கடைபிடிப்பது உகந்தது அல்ல. அனைத்து அதிகாரங்களும் ஒருவரிடமே தேங்கிவிட்டால் நாடு சர்வாதிகாரத்தில் சிக்கக்கூடும். நீதிபதிகள் நியமனத்தில் காலம் தாழ்த்துவது அரசுக்கும் நீதித்துறைக்கும் இடையேயான இடைவெளியை மேலும் மேலும் அதிகரிக்கும்” என்றார்.
அவரைத் தொடர்ந்து பேசிய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், “ஒரு சட்ட அமைச்சர் என்ற முறையில் கெஜ்ரிவால் முன்வைக்கும் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுக்கிறேன். நீதிபதிகள் நியமனத்தில் சுமூகமான முடிவு எட்டப்படுவதற்கான அனைத்து சாத்தியக் கூறுகளும் ஆராயப்பட்டு வருகிறது. மேலும், நீதித்துறையின் சுதந்திரம் என்பது அடிப்படையானது. இதில் அரசு எந்த சமரசமும் செய்யாது” என்றார். பிரதமர், தலைமை நீதிபதி உள்ளிட்டோர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அர்விந்த் கெஜ்ரிவால் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதே விழாவில் பேசிய நீதிபதி தாக்கூர், “நம் நேர்மை பற்றி, மக்களின் கருத்து என்ன என்பது குறித்து நாம் ஆய்வு செய்ய வேண்டும். சில நிலையில் நடக்கும் தவறுகள் மொத்த நீதித்துறைக்குமே அவமானத்தை விளைவிப்பதைப் பார்க்க வேதனையாக இருக்கிறது. டெல்லி உயர்நீதிமன்றம் நிறைய சாதித்திருக்கிறது. ஆனால், மேலும் உழைக்க வேண்டும். நீதித்துறையின் நெறிமுறைகள் மற்றும் தொழில் தர்மம் ஆகியவையோடு ஒன்றிப்போகாத எவற்றுக்குமே சகோதர நீதிபதிகள் இடம் கொடுக்க மாட்டனர் என நான் நம்புகிறேன்” என்று நீதிபதி தாக்கூர் தெரிவித்தார். இந்திய நீதித்துறை வரலாற்றில் நடந்து முடிந்துள்ள இந்த விழா, பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது.  minnambalam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக