செவ்வாய், 1 நவம்பர், 2016

கீழடியிலும் அரிச்ச நல்லுரிலும் அருங்காட்சியகம் வேண்டும்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

‘கீழடி மற்றும் ஆதித்தநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்’ என்று மத்திய தொல்பொருள் இலாகாவுக்கு கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். சிவகங்கை மாவட்டம் கீழடியும், தூத்துக்குடி மாவட்டம் ஆதித்தநல்லூரும் தொன்மை சிறப்பு வாய்ந்த பழங்கால பொருட்கள் அடங்கிய பண்பாட்டு சிறப்புமிக்க இடங்களாகும். இந்த இடங்கள் தற்போது அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. வட இந்தியாவில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பல முக்கிய சான்றுகள் கண்டெடுக்கப்பட்டன. பின்னர் அதேபோல தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் ஆதித்தநல்லூர் மற்றும் கீழடி ஆகிய இடங்களில் வரலாற்று சிறப்புமிக்க பல முக்கிய சான்றுகள் கண்டெடுக்கப்பட்டன. அங்கே கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள் மைசூரில் உள்ள இந்திய அகழ்வாராய்ச்சி மையத்துக்கு எடுத்து செல்ல முயற்சிகள் நடந்தன.
அதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் பொதுநல ஆர்வலர் ஒருவர் தொடர்ந்த வழக்கின்பேரில், அந்த முயற்சியை கைவிட நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் தமிழக கல்வி மற்றும் அகழ்வாராய்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நேற்று கீழடிக்கு வந்திருந்தார். இவருடன் அமைச்சர் பாஸ்கரன், சிவகங்கை தொகுதி எம்.பி. செந்தில்நாதன் மற்றும் சிவகங்கை ஆட்சியர் மலர்விழி ஆகியோரும் வந்திருந்தனர். பின்னர் பேசிய பாண்டியராஜன், “இந்திய அகழ்வாராய்ச்சி இலாகா சார்பில் இந்தியா முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 44 அருங்காட்சியகங்களில் ஒன்று மட்டுமே தமிழ்நாட்டில் உள்ளது. அது சென்னை புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்துக்குள் அமைந்துள்ளது. ஆதித்தநல்லூர் மற்றும் கீழடியில் தொன்மை சிறப்பு வாய்ந்த பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தமிழர்களின் வாழ்கை முறை, பண்பாடு போன்றவற்றை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ள இச்சான்றுகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. எனவே ஆதித்தநல்லூர் மற்றும் கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க இந்திய தொல்பொருள் இலாகாவை தமிழக அரசு சார்பாக கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறினார். minnambalam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக