ஞாயிறு, 13 நவம்பர், 2016

7.8 ரிச்டர் அளவில் நியூஸிலாந்தில் நிலநடுக்கம்: சுனாமி அலை தாக்கியது

நியூஸிலாந்தில் நள்ளிரவு நேரப்படி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவுகோலில் 7.8 என்று பதிவான இந்த பூகம்பத்தின் தாக்கமாக முதல் சுனாமி அலை தெற்குத் தீவின் வடகிழக்கு கடற்கரையைத் தாக்கியது. நாட்டின் ஒட்டுமொத்த கிழக்கு கடற்கரைப்பகுதிகளை சுனாமி அலைகள் தாக்கும் என்று நியூஸிலாந்தின் சிவில் டிபன்ஸ் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடலுக்கு அடியில் 10 கிமீ தூரத்திலேயே நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி அலைகள் தாக்கியது. மேலும் நாடு முழுதுமே இதன் தாக்கம் உணரப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. நிலநடுக்க மையத்திற்கு அருகில் உள்ள சிறிய ஊரான செவியட்டில் கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது


மேலும் பின்னதிர்வுகளும் ஏற்பட்டுள்ளது. தெற்குத் தீவான வடக்கு கேண்டர்பரி பகுதியில் 1 மீட்டர் உயரத்திற்கு முதல் சுனாமி அலைகள் தாக்கியுள்ளன. கிறைஸ்ட் சர்ச் நகருக்கு 91 கிமீ வடகிழக்கே இதன் மையம் இருந்தது. உயிரிழப்பு மற்றும் சேத விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை. எலிசபத் என்ற பெண்மணி ரேடியோ நியூஸிலாந்துக்குக் கூறும்போது, தன் வீடு பாம்பு போல் சுழன்றது, சில சேதங்கள் ஏற்பட்டுள்ளன. மின்சாரம் இல்லை என்றார்.

வெலிங்டன் நகரில் சில கட்டிடங்களின் கண்ணாடிகள் சிதறி சாலையில் விழுந்துள்ளது. பின்னதிர்வுகள் ரிக்டர் அளவு கோலில் 6.1 என்று பதிவாகியுள்ளது. நியூஸிலாந்து நாடு ஆஸ்திரேலிய மற்றும் பசிபிக் டெக்டானிக் பிளேட்டுகள் மீது உள்ளது, இது ரிங் ஆஃப் ஃபயர் என்று அழைக்கப்படும் பகுதியில் உள்ளதால் ஆண்டுக்கு சுமார் 15,000 நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன.  tamilthehindu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக