வியாழன், 10 நவம்பர், 2016

மீத்தேன் திட்டம் ரத்து .. மக்கள் போராட்டத்திற்கு மாபெரும் வெற்றி !

மின்னம்பலம்.காம்: தமிழகத்தில் ஷேல் எரிவாயு எடுக்கும் திட்டத்தைக் கைவிடுவதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், பூமிக்கு அடியில் மீத்தேன் எரிவாயு அதிகமாக இருப்பதாகக் கூறி, எரிவாயு எடுக்க மத்திய அரசு முடிவுசெய்தது. இந்தத் திட்டத்துக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தது. மீத்தேன் எரிவாயுத் திட்டத்தை அமல்படுத்தினால் அது காவிரி பாசனப் பகுதியை பாலைவனாமாக்கிவிடும். எனவே, அதை ரத்துசெய்து காவிரி பாசனப் பகுதியை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்திவந்தது குறிப்பிடத்தக்கது.
காவிரி பாசனப் பகுதியை பாலைவனமாக்கி சுமார் 50 லட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்குவது மட்டுமின்றி, வேளாண்மைத் தொழிலையே அழிக்கும் திட்டம்தான் மீத்தேன் எரிவாயுத் திட்டம் ஆகும்.
கிலோமீட்டர் கணக்கில் துளையிட்டு, வேதி கரைசல்களை உயர் அழுத்தத்தில் பூமிக்குக்கீழ் செலுத்தி பாறைப் படிமங்களை உடைக்க வேண்டும். ‘நீரியல் விரிசல் முறை' என்று அழைக்கப்படும் இந்தத் திட்டத்தை செயல்படுத்தும்முன்பாக அந்த இடத்தில் நிலத்தடி நீரை முற்றிலும் வெளியேற்ற வேண்டும். நிலத்தடி நீரை வெளியேற்றி, மீத்தேன் எடுத்து முடிப்பதற்குள் அந்தப் பகுதி முழுவதும் நிலத்தடி நீர்வளம் குறைந்துவிடும்.
மேலும் பூமியின் கீழே இரசாயனக் கழிவுகள் செலுத்தப்படுவதால், பூமியின் மேற்புறம் நஞ்சாக மாறிவிடும். இதனால் விவசாய சாகுபடி நிலம் முற்றாக அழிந்து, விவசாயிகள் தங்கள் தொழிலையே கைவிட்டுவிட்டு இடம்பெயரும் பெரும் ஆபத்து சூழும். தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட காவிரிப் பாசன மாவட்ட மக்களின் வாழ்வைப் பாதிக்கும் மீத்தேன் எரிவாயுத் திட்டத்தை எதிர்த்து பசுமைத் தீர்ப்பாயத்தில் தொடுத்த வழக்கைத் தொடர்ந்து, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் தலைமையில் 2015ஆம் ஆண்டு ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு 2015 அக்டோபர் 8ஆம் தேதி தாக்கல்செய்த அறிக்கையின்படி, மீத்தேன் திட்டத்துக்கு அனுமதி கொடுப்பது இல்லை என்று தமிழக அரசு முடிவு எடுத்தது.
அதையடுத்து, வைகோ உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் மீத்தேன் திட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடத்தினர். இருப்பினும், குத்தகை அடிப்படையில் நிலங்களை அரசு கையகப்படுத்தி வந்தது. ஆனால் போராட்டங்கள் காரணமாக இந்தத் திட்டத்தை நடத்த முடியாமல் கிடப்பில் போட்டன.
இந்நிலையில், டெல்லியில் பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று நிருபர்களிடம் கூறுகையில், ‘தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில், ஷேல் எரிவாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட முடிவுசெய்துள்ளது. டெல்டா மாவட்ட விவசாயிகள் எதிர்ப்பு மற்றும் நில கையகப்படுத்துதலில் நிலவிய குழப்பம் போன்றவற்றை கருத்தில் கொண்டு திட்டத்தை கைவிடுகிறோம். திட்டம் தொடர்பாக இனிமேல் ஆய்வுகளும் நடத்தமாட்டோம். அதேநேரம், கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி தர வேண்டும், ஒத்துழைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம். கரும்பிலிருந்து எத்தனால் எரிபொருள் தயாரிக்கும் திட்டத்துக்கும் தமிழக அரசு ஒத்துழைப்பு தர வேண்டும்.
கெயில் எரிவாயு குழாய் பதிப்புக்கு முதலில் எதிர்ப்புத் தெரிவித்த கேரளா இப்போது, பாதகம் இல்லை என்பதால் ஒத்துழைப்புத் தர முன்வந்துள்ளது. தமிழகமும் அதேபோன்ற ஒத்துழைப்பை தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.’ இவ்வாறு தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். மத்திய அரசின் இந்த முடிவுக்கு டெல்டா மாவட்ட விவசாயிகள் சங்கத்தினர் பாராட்டுகளையும் வரவேற்பையும் தெரிவித்துவருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக