ஞாயிறு, 23 அக்டோபர், 2016

ஜெ' சிகிச்சை - ரிச்சர்ட் பேல் மீண்டும் சென்னை வருகை!

மின்னம்பலம்.காம் : முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை முன்னேற்றம் கண்டு வரும் நிலையில் இன்று மீண்டும் நுரையீரல் சிறப்பு மருத்துவர் ரிச்சர்ட் பேல் சென்னைக்கு வருகை புரிந்துள்ளார். இதுகுறித்து, ‘லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பேல் வந்த பிறகுதான் அடுத்த கட்ட திட்டம் தெளிவாகும்’ என மின்னம்பலத்தில் ஏற்கனவே சொல்லியிருந்தோம்.
அதேபோல் இன்று லண்டனில் இருந்து வந்த நுரையீரல் சிறப்பு மருத்துவரான ரிச்சர்ட் பேல், முதல்வரின் உடல்நிலையை பரிசோதனை செய்துள்ளார். முதல்வரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். ரிச்சர்ட் பேல் முதல்வருக்கு சிகிச்சையளிக்க சென்னை வருவது இது மூன்றாவது முறையாகும். இதுவரை மூன்று முறை வந்துள்ள பேல், ஒவ்வொரு முறை லண்டன் திரும்பும்போதும் முதல்வரின் உடல்நிலை குறித்த நல்ல செய்தியை தான் கூறி விட்டு சென்றுள்ளார்.

ரிச்சர்ட் பேல், உலகிலுள்ள முக்கிய நுரையீரல் நோய் நிபுணர்களில் மிகவும் முக்கியமானவர். மரணத்தின் அருகே சென்ற பலர் இவரது சிகிச்சையால் நலம்பெற்று வீட்டுக்குத் திரும்பியிருக்கின்றனர். எவ்வளவு சிக்கலான நுரையீரல் நோய்களையும் சிறப்பாகக் கையாண்டு சிகிச்சை அளிக்கக்கூடியவர், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறப்பு மருத்துவர் என பொதுவாக சொல்லப்பட்டாலும்கூட குறிப்பாக, இவர் நுரையீரலில் சீழ் பிடிப்பு மற்றும் நுரையீரலில் ஏற்படும் காயங்கள், ‘மல்டிபிள் ஆர்கன் பெயிலியர்’ எனப்படும் ஒன்றுக்கும் மேற்பட்ட உள்ளுறுப்புகள் செயலிழப்பது போன்ற பிரச்னைகளில் சிகிச்சை அளிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர். லண்டனில் இவரது அப்பாயின்ட்மெண்ட் வாங்குவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. மாதக்கணக்கில் இவரது அப்பாயின்ட்மெண்டுக்காக காத்திருப்பவர்கள்கூட உண்டு.
முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை தொடங்கியதில் இருந்து பல்வேறுவிதமான யூகங்கள் நிலவின. சிங்கப்பூருக்குச் சென்று மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை கொடுக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், ஜெயலலிதா வெளிநாட்டுக்குக் கொண்டு செல்லப்படவில்லை. தேவைப்பட்டால் வெளிநாட்டு மருத்துவர்கள் இங்கு வந்து சிகிச்சை கொடுக்கச் செய்யலாம் என்று சசிகலா பிடிவாதமாக இருந்தார். அப்பல்லோவின் சிறப்பு மருத்துவக்குழுவினர் தங்களால் முடிந்தவரை முதல்வரின் உடல்நலம் முன்னேற முயற்சி செய்தனர். அப்போதுதான் லண்டனில் இருந்து நுரையீரல் நோய் சிகிச்சை நிபுணர் ரிச்சர்ட் பேல் ஒருநாள் அப்பல்லோவுக்கு வருகை புரிந்தார். அவருடைய தீவிர பரிசோதனைக்குப் பிறகு லண்டனில் இருந்து சிறப்பு மருந்துகளை வரவழைத்து தந்தார். அதன்பிறகு முதல்வரின் உடல்நிலை சிறிது முன்னேற்றம் கண்டது. அதன் பிறகு எய்ம்ஸ் மருத்துவர்கள் டாக்டர் கிலானி தலைமையில் சிகிச்சை அளிக்க ஆரம்பித்தனர். அவர்களும் ரிச்சர்டும் இணைந்து கொடுக்கப்படும் மருந்துகளில் மாற்றம் செய்து புதிய மருந்துகளை தந்தனர். அதன் பிறகு முதல்வரின் உடல்நிலையில் படிப்படியான முன்னேற்றம் ஏற்பட ஆரம்பித்தது.கடந்த 22ஆம் தேதி அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து இதுவரை அப்பல்லோ நிர்வாகம் 11 அறிக்கைகளை வெளியிட்டிருக்கிறது. முதல்வர் உடல்நிலை குறித்து கடந்த 10/10/2016 அன்று அப்பல்லோ மருத்துவ அறிக்கையை வெளியிட்டது. அதன் பிறகு (21/10/2016) வெள்ளிக்கிழமை மாலைதான் அப்பல்லோ மருத்துவ நிர்வாகம், முதல்வர் ஜெயலலிதா குறித்த மருத்துவ அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. ‘மாண்புமிகு முதல்வர் அவர்கள் பேசுகிறார்கள். அவரது உடல்நலம் படிப்படியாக முன்னேற்றமும் அடைந்து வருகிறது’ என்று அந்த அறிக்கையில் சொல்லப்பட்டு இருந்தது. இப்போது ரிச்சர்ட் பேலின் வருகையும் அதை உறுதிபடுத்தியுள்ளது.ரிச்சர்ட் பேலின் வருகைக்குப் பிறகுதான் முதல்வர் ஜெயலலிதா, அப்பல்லோவிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி எப்போது போயஸ் கார்டனுக்கு கொண்டு செல்லப்படுவார் என்ற முடிவு தெரியும் என சொல்லப்படுகிறது. அது தீபாவளிக்கு முன்பாகவா அல்லது தீபாவளிக்குப் பிறகா என்பது விரைவில் தெரிந்துவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக