சனி, 1 அக்டோபர், 2016

தமிழக அரசு நிர்வாகம் இயல்பு நிலைக்குத் திரும்ப இன்னும் சில....

முதல்வர் ஜெயலலிதா அட்மிட்டாகி புதன்கிழமையோடு 6 நாட்கள் கடந்தன. காய்ச்சலும் நீர்ச்சத்து குறைபாடும்தான் காரணம் என்றும், வழக்கமான உணவு உட்கொள்கிறார் என்றும் அப்பல்லோ மருத்துவர்கள் தெரிவித்த நிலையிலும், புதன் இரவு வரை போயஸ்கார்டனுக்கு ஜெய லலிதா திரும்பாமல் இருந்தது அ.தி.மு.க தொண்டர்களுக்கு வருத்தத்தை அளித்தது என்றால், அரசுத் திட்டங்களையும் கட்சி வேட்பாளர் பட்டியலையும் ஜெ. தொடர்ச்சியாக அறிவித்தது அவர் களுக்கு ஆச்சரியத்தை அளித்தது./>அப்பல்லோவில் அட்மிட் ஆன அடுத்த நாளே இந்து அற நிலையத்துறை, தகவல் தொழில் நுட்பத்துறை சார்ந்த திட்ட அறிவிப்புகளை ஜெ வெளியிடு கிறார். உடல் நலம் குறித்து கவர்னர் உள்ளிட்டவர்கள் அனுப்பிய வாழ்த்துக்கடிதங்களுக்கு நன்றியும், ஜெயங்கொண்டம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் பலியானவர் களுக்கு நிதி உதவி அறிவிப்பையும் செய்த முதல்வர், உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவித்ததுமே கட்சியின் வேட்பாளர்கள் பட்டிய லையும் ரிலீஸ் செய்தார்..

காவிரி விவகாரத்தில் அதி காரிகளுடன் ஆலோசனை நடத்தி, மத்திய அரசு கூட்டும் கூட்டத்தில் கலந்துகொள்ள அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தலைமைச் செயலாளர் ராமமோகனராவ், பொ.ப.து.செயலாளர் பிரபாகர் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்வார்கள் எனவும் ஒரு அறிவிப்பு வருகிறது.  தமிழகப் பொதுத்துறை ஊழியர்களுக்கு 20 சதவீத போனசும் ஜெயலலிதாவால் அறிவிக்கப்படுகிறது. மருத்துவமனையில் இருந்தபடியே அரசுப் பணிகளை கவனிக்கிறார் என்று ஊடகங்கள், “முதல்வரின் முகாம் அலுவலகமானது அப்பல்லோ’’ என அடைமொழியிட் டன. வீட்டிற்கு செல்லும் வகையில் அவரது உடல் நலத்தில் முன்னேற்றமில்லை என்பதால்தானே இந்த 6 நாட்களும் மருத்துவமனையிலேயே ஜெயலிதாவை வைத்திருந்து டாக்டர்கள் அக்கறையுடன் கவனிக்கிறார்கள்?  அப்படி யுள்ள சூழலில் அவர் ஓய்வெடுக்காமல் தொடர்ச்சியாக அரசுப் பணிகளை கவ னிப்பது அவரது உடல்நலத்தைத்தானே பாதிக்கும்? இதன் பின்னணியில் மறைந் திருப்பது என்ன? அரசு நிர்வாகத்தை செயல்படுத்துவது யார்? என்கிற கேள்விகள் அனைத்து தரப்பிலும் எதி ரொலிக்கவே செய்தன. மத்திய அரசிடமும் இதே கேள்விதான் எழுந்தது. இது குறித்து சட்டரீதியான அம்சங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் இளங்கோவன், ""மாநிலத்தின் முதல்வர் மருத்துவமனையில் இருக்கும் நிலையில் அவரால் அரசுப்பணிகளை கவனிப்பது சாத்தியமில்லை. அவரது உடல் நலம் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய கடமை தலைமைச்செயலாளருக்கு இருக்கிறது. அவர்தான் முதல்வரின் உடல் நலம் குறித்து மருத்துவர்களோடு ஆலோசித்து உண்மையான அறிக்கையைத் தர வேண்டும். ஆனால், இங்கு மருத்துவமனை நிர்வாகம்தான் உடல் நலம் குறித்து தெரிவிக்கிறதே தவிர, தலைமைச்செயலாளருக்கு ரோலே இல்லாமல் இருக்கிறது. வழக்கமான அரசுப் பணிகளை கவனிக்க முடியாது என்பதால்தான் அவரை டிஸ்சார்ஜ் செய் யாமல் தங்கள் கண்காணிப்பிலேயே வைத்திருக்கிறார்கள் டாக்டர்கள். அப்படியானால் முதல்வர் அறிவிப்பு, முதல்வர் ஆலோசனை என வருகிற விசயங்களெல்லாம் திட்டமிட்டு செயல்படுத்தப் படுவதாகத் தோன்று கிறது. அந்த வகை யில், தற்போது ஒரு நிழல் அரசாங் கம்தான் நடக்கிறது. இதுகுறித்து கேள்வி எழுப்பத் தகுதி படைத்தவர்களெல் லாம் அமைதியாக இருப்பதுதான்  ஏன் என்று புரியவில்லை'' என்கிறார் அழுத்தமாக.        தொடர்ச்சியாக மருத்துவமனையிலேயே ஜெயலலிதா இருப்பது பல்வேறு சந்தேகங்களும் வதந்திகளும் பரவுவதற்கு வழி வகுத்திருக்கும் நிலையில், நம்மிடம் பேசிய வழக்கறிஞர் பாலாஜி, ""முதல்வரின் உடல்நலம் முழுமையாக குணமாகிவிட் டது என்பதை மக்களுக்கு புரிய வைக்க அரசு தரப்பு தவறி வரு வதுதான் வதந்திகளுக்கு காரணம். முதல்வரே தொலைக்காட்சி யில் தோன்றி பேசினால் தான் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி விழும். அந்த நிகழ்வு நடக்காமல், வருகிற செய்திகளுக்கெல்லாம் வலிமை இல்லை. முக்கியமான பிரச்சினைகள் பற்றி அதிகாரி களுடன் கோட்டையில் முதல்வர் விவாதித்தால் அதன் புகைப் படங்கள் மீடியாக்களுக்கு அரசு தரப்பில் அனுப்பி வைக்கப் படும்.  இப்போதும் அப்படி அனுப்பலாமே? அதிகாரிகளுடன் ஆலோசனை நடந்திருந்தால் அதனை ஃபோட்டோ எடுத்து ரிலீஸ் செய்வதில் அரசுக்கு என்ன கடினம் இருக்கப்போகிறது? இதேபோன்று உடல்நல பாதிப்பில் அறிஞர் அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர். உள்ளிட்ட தலைவர்கள் மருத்துவமனையில் அட்மிட்டாகியிருந்த சூழலில் அவர்கள் நன்றாக இருக்கிறார்கள் என்பதற்கு பல ஃபோட்டோ ஆதாரங்கள் வெளியிடப்பட்டன. அப்படி எதுவும் இப்போதைய முதல்வர் விசயத்தில் இல்லைங்கிற போது அவர் பெயரில் வரும் அரசு அறிவிப்புகளில் எல்லோருக்கும் சந்தேகம் வருவது இயல்பானதுதானே''  என்கிறார் மிக சூடாக.     ஜெயலலிதா அட்மிட் ஆனதால் அரசு நிர்வாகம் முற்றிலும் ஸ்தம்பித்துதான் கிடக்கிறது. கோட்டையில் எந்த ஒரு ஃபைலும் நகரவில்லை. இது குறித்து உய ரதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ""தலைமைச் செயலாளர் ராமமோகனராவ், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், முதல்வரின் செயலாளர்கள் எல்லோரும் மருத்துவமனையே கதியாக இருக்கிறார் கள். ஆனால் இவர்கள் யாரும் முதல்வரைப் பார்க்க வில்லை. பார்க்கவும் முடிவதில்லை. அப்பல்லோ, போயஸ்கார்டன், தலைமைச் செயலகம், அ.தி.மு.க தலைமை அலுவலகம் அனைத்தும் சசிகலாவின் கண்ட்ரோல்தான். சசிகலாவிடமிருந்தே உத்தரவுகள் தலைமைச்செயலாளருக்கு சொல்லப்படுகின்றன.. அதனை அவர் செயல்படுத்துகிறார். இதற்காக அவ்வப் போது கோட்டைக்கு வந்து போகிறார்கள் அதிகாரி கள். மற்றபடி, கோட்டை ஏரியாவில் அமைச்சர்கள், அதிகாரிகள் நடமாட்டம் குறைவாகவே உள்ளது. காவிரி விசயம் குறித்து இரண்டு மாநில முதல்வர்களிடம் மத்திய அரசு விவாதிக்க வேண்டும் என சொன்ன உச்சநீதிமன்றத்தின் உத்தரவை செயல் படுத்தும் விதமாக மத்திய அரசின் 29-ந் தேதி கூட்டம் தொடர்பாக தமிழக அதிகாரிகளு டன் ஒரு மணிநேரம் அவசர ஆலோசனை யை மருத்துவமனையிலேயே முதல்வர் நடத்தினார் என அறிவிக்கப்பட்டது. அப்படி எந்த ஒரு ஆலோசனையும் நடக்கவே இல்லை. பொதுவாக காவிரி விவகாரத்தில் எது நடந்தாலும் அதிகாரிகள் தரும் தகவல்களை வைத்தே கடிதமோ அறிவிப்போ ரெடி பண்ணச்சொல்வார் முதல்வர். அது முதல்வர் பெயரில் வரும். இது மரபு. இப்போது மத்திய அரசு கூட்டியிருக்கும் கூட்டத்தில் தமிழக அரசின் பங்களிப்பு இருந்தாக வேண்டுமென்பதால் கூட்டத்தில் தமிழகம் பங்கேற்க வேண்டியது கட்டாயம் என சசிகலாவிடம் உய ரதிகாரிகள் தெரிவித்தனர். முதல்வர் கலந்துகொள்ள இயலாததால் அவர் சார்பில் அமைச்சரும் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொள்வார்கள் என்கிற அறிவிப்பையும் முதல்வர் வாசிக்கும் உரையையும் தயாரிக்கும்படி சசிகலாதான் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்துதான் அரசிட மிருந்து அறிக்கை வெளியானது. அதேபோலத்தான் கடந்த 6 நாட்களில் வெளியான அறிக்கைகளும்'' என சுட்டிக்காட்டுகிறார்கள். ""பொதுவாக முதல்வர் டெல்லி சென்று கூட்டங்களில் கலந்துகொள்ள முடியாத நிலையில் அவரது உரையை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் படிப்பார். தலைமைச் செயலாளர் போன்ற உயரதிகாரி கள் படிப்பதும் உண்டு. ஆனால், இம்முறை பொதுப்பணித்துறை அமைச்சர் என்ற முறையில் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டி ருப்பது, காவிரி பிரச்சினைக்கு சரியானதுதான் என்றாலும், ஓ.பி.எஸ்.ஸுக்கு எதிரான சசிகலா தரப்பின் வெளிப்படையான காய் நகர்த்தல் இது'' என்கிறார்கள் கட்சியிலும் ஆட்சி வட் டாரத்திலும்.இதனிடையே, மாநகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர் வேட்பாளர்கள் பட்டியல் முதல்வரும் கட்சியின் பொதுச்செயலாளருமான ஜெய லலிதா பெயரில்தான் வெளியானது. அவர் மருத்துவமனை யில் இருக்கும் நிலையில், மந் திரிகளும் மா.செக்களும் சின்னம்மா தய வில் பட்டியலை வெளியிடவைத்து, தங்களுக்கு வேண்டி யவர்களுக்கு மட்டும் சீட் கிடைக்கும்படி செய்துவிட்டார்கள் என்ற அதிருப்தி தமிழகம் முழு வதும் பரவியது. போராட்டம், முற்றுகை, தீக் குளிப்பு' என ஆங்காங்கே அ.தி.மு.கவினர் கொந்தளித்த துடன், "அம்மா உடல்நிலை பற்றிய உண்மையை மறைக்கிறார்கள்' என்ற கோபத்தில் வெடித்தனர். வதந்திகளும் தீயாய் பரவி, கடையடைப்பு, கடை உடைப்பு என சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் சூழல் உருவானது.
  

இவை தொடர்பான ரிப்போர்ட்டுகளை டெல்லிக்குத் தொடர்ந்து அனுப்பியபடி இருந்தது உளவுத்துறை. மோடி அரசும் தமிழக நிலைமை குறித்து ஆலோசித்துள்ளது. மாநிலத்தின் நிர்வாகத்தை கண்காணிக்கும் பொறுப்பு ஆளுநருக்கு உண்டு என்றாலும் மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட ஒரு அரசு பதவியில் இருக்கும் போது மாநிலத்தின் ஒட்டு மொத்த நிர்வாகமும் முதல்வரிடம்தான் இருக்கும். அதே முதல்வர் உடல்நலன் குன்றி வழக்கமான பணிகளைப் பார்க்க முடியாத நிலையில், அவரால் நியமிக்கப் படும் ஒருவர் நிர் வாகத்தை கவனிப்பார். அப்படி நியமிக்காத அசாதாரணமான சூழலில் நிர்வாகத்தை கையிலெடுக்கும் அதிகாரம் கவர்னருக்கு இருக்கிறது. அந்த நிலை உருவாகி விடக்கூடாது என் பதற்காகத்தான் அப்பல்லோவில் இருந்தபடியே அரசு பணிகளை முதல்வர் கவனிக்கிறார் என அறிக்கை வெளியிடப்படுகிறது என்ற சென்னை நிலவரமும் டெல்லியை எட்டியுள்ளது. ஆறு நாட்களாக மருத்துவமனையில் ஒரு முதல்வர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்றால், அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்துவிட்டு, டாக்டர்களிடம் சிகிச்சைகள் குறித்து விவாதித்த பிறகு நாட்டு மக்களுக்கும் மத்திய அரசுக்கும் முதல்வரின் உடல் நலம் குறித்த உண்மைகளை  கவர்னர் தெரிவிப்பது மரபு. அதனடிப்படையில் தற்போதைய பொறுப்பு கவர்னர் வித்யாசாகர்ராவ் முதல்வரை சந்திக்க விரும்பியிருக்கிறார். இதற்காக அவரது செயலாளர்கள் முயற்சித்தனர். பாசிட்டிவ்வான பதில் மருத்துவமனையிலிருந்து கிடைக்காததால் முதல்வரை சந்திக்கும் எண் ணத்தை கைவிட்டார் பொறுப்பு கவர்னர். இந்த நிலையில்தான், தமிழக அரசு நிர்வாகம் எப்படி நடக்கிறது? யாரின் உத்தரவில் நடக்கிறது? என்பது குறித்து ரிப்போர்ட் அனுப்புமாறு கவர்னருக்கு அறிவுறுத்தியிருக்கிறது மத்திய அரசு என்கிறார்கள் கோட்டை அதிகாரிகள். ராஜ்பவனில் உள்ள அதிகாரிகளோ, ""தமிழக அரசியலும் ஆட்சிமுறையும் வித்தியாசமானது என்பது எங்க ளுக்குத்தான் தெரி யும். அதிலும் ஜெ. தலைமையிலான ஆட்சி என்றால் எல்லாமே மறை முகம்தான். இதில் மரபுகளை எப்படிக் கடைப்பிடிப்பது எனத் தெரியாமல் குழம்பியிருக் கிறோம். மத்திய அரசோ சட்ட மரபுப்படி செயல் படும்படி குடைச்சல் தருகிறது'' என் கிறார்கள். இதுபற்றி ஓய்வுபெற்ற ஐ.ஏ. எஸ். அதிகாரி தேவசகாயத்திடம் நாம் கேட்ட போது, ""முதல்வரின் உடல்நிலை முடியாத நிலையில் அரசு நிர்வாகத் துக்கு தலைமைச் செயலாளர்தான் பொறுப்பு. பொதுவாக ஆரோக்கியமான ஒரு அரசாங்கத்தில் கொள்கை சார்ந்த முடிவுகள், திட்டங்கள் சார்ந்த  விவகாரங்கள், மத்திய அரசோடு விவாதிக்க வேண்டிய அல்லது மத்திய அரசுக்கு பதில் தரக்கூடிய விசயங்கள், கேபினெட்டில் எடுக்கப்படும் முடிவுகளை செயல்படுத்துதல் உள்ளிட்ட பிரச்சனைகளை  மட்டும்  முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று உயரதிகாரிகள் விவாதித்தால் போதுமானது. ஆனால், இங்கு ஒரு சின்ன துரும்பை நகர்த்துவதாக இருந்தாலும் முதல்வரின் அனுமதி தேவைப்படுவது போல இருக்கிறது. மொத்தத்தில், தமிழகத்தில் அரசு நிர்வாகம் ஆரோக்கியமாக இல்லை'' என்கிறார் கோபமாக. ""இயல்பு நிலைக்குத் திரும்ப இன்னும் சில நாட்கள் பொறுத்துதான் இருக்க வேண்டும்'' என்கிறார்கள் உயரதிகாரிகள்.

-இரா.இளையசெல்வன்
படங்கள் : ஸ்டாலின்
அட்டைப் படம் : ஸ்டாலின் நக்கீரன்,இன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக