சனி, 1 அக்டோபர், 2016

ஜெயலலிதா சொன்ன வசந்தத்தில் வெறும் ரூ.1,000க்கு ஒரு தாய் தன் மகளை விற்றுவிட நேர்கிறது. மாலெ தீப்பொறி

அதனால்தான் தேர்தல்களைச் சந்திக்கக் பயப்படுகிறார் ஜெயலலிதா”
ஜெயலலிதா ‘பூரண குணம்’ பெற வாழ்த்துக்கள் என்ற தலைப்பில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் ஏடான மாலெ தீப்பொறி வெளியிட்டுள்ள பதிவு:
ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் வந்து கருணாநிதி முதல் தமிழ்நாட்டின் அரசியல்வாதிகள் அத்தனை பேரும் அவர் நலம் பெற்று பணிக்குத் திரும்ப வாழ்த்துச் சொன்னார்கள். மாபெரும் அரசியல் நாகரிகத்தை வெளிப்படுத்திவிட்டதாக அனைவரும் தமக்குத் தாமே முதுகுத் தட்டிக் கொண்டிருந்தபோது அந்த அறிவிப்பு வந்தது. அக்டோபர் 17 மற்றும் 19 தேதிகளில் தமிழ்நாட்டின் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படும்! யாருக்கும் எந்த கால அவகாசமும் இன்றி, உடனடியாக மனுத்தாக்கல்!! திருமாவளவன் உண்மையிலேயே தான் உணர்ந்ததை வெளிப்படுத்தினார். அறிவிப்பு அதிர்ச்சி தருகிறது என்றார். தமிழ்நாட்டின் மூத்த, இளைய, சாணக்கிய, மெக்கியவில்லிய அரசியல்வாதிகள் அனைவரையும், யாரும் எதிர்பாராத இந்த அறிவிப்பை வெளியிட்டு ஜெயலலிதா ஒரே வீச்சில் வீழ்த்தினார். படுத்துக் கொண்டே ஜெயிப்பேன் என்று காமராஜர் சொன்னதாகச் சொல்வார்கள். எம்.ஜி.ராமசந்திரன் ஜெயித்தார். ஜெயலலிதா அப்படி ஒன்றை முயற்சி செய்து பார்ப்பதாகத் தெரிகிறது.

தேர்தல் அறிவிப்பே அதிர்ச்சி தந்தது எனும்போது இனிதான் மற்ற அரசியல் கட்சிகள் சுதாரித்துக் கொண்டு ஏதாவது செய்தாக வேண்டும். திமுக – காங்கிரஸ் கூட்டணி இதற்கு மேல் கூட்டணி பற்றி பேசப் போவதில்லை. அந்த அணி சற்று சமாளித்துக் கொள்ளலாம். ஒரே நேரத்தில் அஇஅதிமுக, திமுக இரண்டு கட்சிகளையும் எதிர்க்க முடியாது என்பதற்கு திருமாவளவன் நீண்ட விளக்கம் தந்துகொண்டிருக்கும்போது, மறுபுறம், மக்கள் நலக் கூட்டணி இப்போதுதான் சில நிகழ்ச்சிகளில், மிகவும் துவக்கமாக, ஒரே மேடையில் காட்சி அளித்தது. அவர்கள் இனிதான் மற்றவர்களை அழைக்க வேண்டும். அதிமுக, திமுக இரண்டையும் எதிர்த்து நிற்பதற்கு திருமாவளவன் மாற்று விளக்கம் அளிக்க வேண்டும். இன்னும் எவ்வளவோ இருக்கிறது.
ஆனால், அனைவரையும் விட ஜெயலலிதாதான் மிகவும் பயந்திருப்பதைப்போல் தெரிகிறது. மேயர் பதவிக்கு, நகராட்சி, பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு இருந்த நேரடி தேர்தலை ரத்து செய்தபோதே அது தெளிவாகத் தெரிந்தது. ஜெயலலிதா தனது விருப்பம்போல் அமைச்சர்களை, அதிகாரிகளை மாற்றுவதுபோல், மேயர்களை, நகராட்சித் தலைவர்களை, பேரூராட்சித் தலைவர்களை மாற்ற முடிவதில்லை. இந்தப் பதவிகளுக்கு நேரடி தேர்தலை ரத்து செய்திருக்கிற ஜெயலலிதா, அவர்களை மாற்றுவதற்கான அதிகாரத்தையும் கையில் எடுத்துக்கொள்ள அடுத்து அமைப்புரீதியான மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகள் பற்றியும் யோசிக்கலாம். நமக்கு ஒன்று தெளிவாகத் தெரிகிறது. அய்ந்து ஆண்டுகளுக்கும் தமிழ்நாட்டின் மாநகராட்சிகளில் ஒரே மேயர் இருந்துவிட்டார் என்றால் பெரிய விசயம்தான். அடுத்தடுத்த பதவிகளுக்கும் இது பொருந்தும்.
இந்தப் பதவிகளுக்கு நேரடி தேர்தல் முறையை ரத்து செய்ததில் ஜெயலலிதா தனது விருப்பம்போல் பதவிப் பறிப்பு நடத்தலாம் என்பதை விட, நேரடி தேர்தலைச் சந்தித்தால் தோற்கடிக்கப்படக் கூடும் என்ற பயமே விஞ்சி நிற்கிறது. ஏனென்றால், வெளியில் என்ன பேசினாலும், வண்ணவண்ண அறிவிப்புகள் வெளியிட்டாலும், தான் நடத்துவது மிகமிக மோசமான, மக்கள் விரோத, எதேச்சதிகார ஆட்சி என்று அவருக்கே மிக நன்றாகத் தெரிகிறது. மக்கள் மத்தியில் சென்று அஇஅதிமுகவுக்கு வாக்களியுங்கள் என்று கேட்கும் துணிச்சல் அவருக்கே இல்லை.
திருவாரூரைச் சேர்ந்த 11 வயது சிறுமி, காஞ்சிபுரம் அருகில் உள்ள ஒரு வீட்டில் சுவர் ஏறிக் குதித்து தப்பித்து வெளியேறி, வெளியில் இருந்த ஆட்டோ ஓட்டுநர்களிடம் ஊருக்குச் செல்ல காசு வேண்டும் என்று நடுநடுங்கிய நிலையில் கேட்டிருக்கிறார். அவர்கள் அந்தச் சிறுமியை காவல் நிலையத்தில் ஒப்படைக்க, அந்தச் சிறுமியை அவரது தாய் ரூ.1,000க்கு விற்றுவிட்டதாகத் தெரிய வந்தது. அந்தச் சிறுமி இப்போது அரசு காப்பகத்தில் இருக்கிறார். அரசு காப்பகங்கள் பாதுகாப்பற்றவை என்பதையும் நாம் பார்த்தோம். அந்தச் சிறுமியை 20 மணி நேரம் வேலை வாங்கினார்களாம். மிகவும் கடுமையான வேலைகளைச் செய்யச் சொன்னார்களாம். சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டதாக ஜெயலலிதா சொன்ன வசந்தத்தில் வெறும் ரூ.1,000க்கு ஒரு தாய் தன் மகளை விற்றுவிட நேர்கிறது. ஜெயலலிதா மக்களுக்கு என்ன பதில் சொல்வார்? வசந்தம் என்றால் இதுதான் என்றா பதில் சொல்ல முடியும்? அதனால்தான் தேர்தல்களைச் சந்திக்கப் பயப்படுகிறார்.
சிறைக்குச் சென்று திரும்பிய பச்சமுத்து உடலில் ஒரு சிறு கீறல் இல்லை. அப்படித்தான் இருக்க வேண்டும். பிணையில் வந்தபிறகு கையெழுத்து போடச் சென்ற அவரை காவல் துறையின் மிக உயர்ந்த பொறுப்பில் இருக்கும் ராஜேந்திரன் வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார். பச்சமுத்து அங்கு வருவதற்கு முன்பு அவருக்கு சரவண பவனில் இருந்து சிற்றுண்டி வரவழைக்கப்பட்டிருந்ததாகச் செய்திகள் வந்தன. ஆனால் கண்ணகி நகர் கார்த்திக், காவல் நிலையத்தில் இருந்து பிணமாகத்தான் வீடு திரும்பினார்.
காவல்துறை கண்ணியமாகவும் கறாராகவும் நடந்துகொள்வதாக இந்த இரண்டு சம்பவங்களையும் ஜெயலலிதா விளக்க முற்படுவாரானால், கரூர் காவல்துறையினர் மூன்று பேர் செய்த வழிப்பறி கொள்ளை பற்றி, அது கட்டுப்பாடு வகையைச் சேர்ந்ததா என்று அவர் விளக்க வேண்டும். இந்த கேடு கெட்ட காவல் துறைக்கு ஜெயலலிதாதான் நேரடி பொறுப்பு. மக்களுக்கு என்ன பதில் சொல்வார்? அதனால்தான் தேர்தல்களைச் சந்திக்கப் பயப்படுகிறார்.
இன்னும் எந்தவித விளக்கமும் தராப்படாமல் உடற்கூறாய்வு கூட நடத்தப்படாமல் கிடக்கிறது ராம்குமாரின் உடல். மின்கம்பியாம். இழுத்தாராம். கடித்தாராம். செத்தாராம். பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டும். ஹிலாரி கிளின்டனுக்கு ‘முன்மாதிரியாக’ இருக்கிற ஜெயலலிதா ஆட்சியில் இது நடந்துள்ளது என்றால், என்ன பதில் சொல்வார்? அதனால்தான் தேர்தல்களைச் சந்திக்க பயப்படுகிறார்.
ஜெயலலிதாவின் நம்பகமான அமைச்சர்களில் ஒருவராக இருந்த நத்தம் விசுவநாதன் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.100 கோடிக்கு மேல் கணக்கில்லாத சொத்துக்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. எப்படி வந்தது என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. என்ன பதில் சொல்வார்? அதனால்தான் தேர்தல்களைச் சந்திக்கப் பயப்படுகிறார்.
கொத்தடிமைகள் மீட்கப்பட்டதாக வாரம் ஒரு செய்தி வருகிறது. அவர்கள் பிற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்தவர்கள் அல்ல. தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இன்னொரு மாவட்டத்தில் கூட்டம் கூட்டமாய்க் கொத்தடிமைகளாக வேலை செய்கிறார்கள். சுமங்கலித் திட்டமே தமிழ்நாட்டில் இல்லை என்று சட்டமன்றத்திலும் வெளியிலும் அமைச்சர்கள் சொல்வதுபோல் தமிழ்நாட்டில் கொத்தடிமைகளே இல்லை என்று ஜெயலலிதா சொல்வாரா? இல்லை என்றால், அவர்கள் யார்? விருப்பப்பட்டு வேலைக்குப் போனவர்களா? மக்களுக்கு வேறு என்ன பதில் சொல்வார்? அதனால்தான் தேர்தல்களைச் சந்திக்கக் பயப்படுகிறார்.
ஒரு குடும்பத்தில் வறுமை தாளாமல் மூன்று பேர் மொத்தமாக தற்கொலை செய்து கொள்கிறார்கள். வயிற்று வலி அதனால் தற்கொலை செய்துகொண்டார்கள் என இனி ஜெயலலிதா சொல்ல முடியாது. வறுமையால் தற்கொலை என்று போதுமான அளவுக்கு செய்திகள் வந்துவிட்டன. ஜெயலலிதாவோ, அவரது ஆலோசகர்களோ மூன்று உயிர்கள் போனதற்கு என்ன காரணம் கண்டுபிடிப்பார்கள்? வேறு என்ன பதில் சொல்வார்? அதனால்தான் தேர்தல்களைச் சந்திக்கப் பயப்படுகிறார்.

கொத்தடிமைகளாக வேலை செய்யச் செல்லும் பெற்றோர் தங்கள் குழந்தைகளாவது படிக்கட்டும் என்று அரசு உண்டு உறைவிடப் பள்ளிகளில் சேர்த்துவிட்டுப் போய்விடுகிறார்கள். திரும்பி வந்து பார்க்கும்போது சிலரது குழந்தைகள் உயிருடன் இருப்பதில்லை. அந்தப் பள்ளிகளை நடத்துபவர்கள் கவனிக்க வேண்டியவர்களை கவனித்துவிட்டால், அந்தக் குழந்தைகள் உயிரிழப்புக்கு என்ன காரணம் என்று கூட வெளியில் தெரிவதில்லை.
விழுப்புரத்தில் சந்தப்பேட்டையில் சமீபத்தில் இரண்டு மாணவர்கள் உயிரிழப்பில் இன்னும் ‘மர்மம்’ அவிழவில்லை. மற்றவர்கள் மறந்துவிட்டு அடுத்த வேலை பார்க்கச் சென்றுவிடலாம். பெற்றவர்கள் கேள்வி கேட்பார்கள். ஜெயலலிதா என்ன பதில் சொல்வார்? அதனால்தான் தேர்தல்களைச் சந்திக்கப் பயப்படுகிறார்.
இந்தச் சம்பவங்களில் பல அடுத்தடுத்து ஒரே வாரத்தின் சில நாட்களில் நடந்தவை. இந்த நூறு நாட்களில் அய்ந்து இளம்பெண்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள். இதுபோன்ற இன்னும் பல சம்பவங்களில், பல்வேறு காரணங்க ளால், மக்கள் உயிரிழப்பது ஜெயலலிதாவின் நூறு நாள் சாதனை ஆட்சியில் நடந்து முடிந்துவிட்டன. இதுவரை எதற்கும் எந்தத் தீர்வும், எந்தப் பதிலும் ஜெயலலிதா சொல்லவில்லை. இந்த உயிரிழப்புகளுக்குக் காரணமானவர்கள், சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள், காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவும் இல்லை. சில இடைநீக்கம், சில இடமாற்றம் ஆகியவைதான் நடவடிக்கைகள் என்றால், அது அவர்களுக்கு மயிலிறகால் வருடப்படுவது போன்றதே. யார் மீதும் எந்த கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படாததே கடுமையான குற்றம் எதுவும் நடக்கவில்லை என்பதற்கு சாட்சி என்றா சொல்வார்?
புதிதாக அறிவிக்கப்பட்ட 107 அம்மா உணவகங்களில் பணியில் யாரும் அமர்த்தப்படாத தால் அருகில் உள்ள அம்மா உணவகங்களில் இருந்து வந்த உணவு தரப்பட்டுள்ளது. இப்படி தொடர்ந்து செய்ய முடியாததால் அவற்றில் சில மூடப்பட்டு விட்டன. பெரம்பூரில் சமுதாய நலக் கூடம் அம்மா உணவகமாக மாற்றப்பட்டது. புரசைவாக்கத்தில் குப்பைத் தொட்டி இருந்த இடத்தில் அம்மா உணவகம் வந்துள்ளது!
விவசாயத்துக்கு தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் கர்நாடகத்துடன் போராடிக் கொண்டு இருக்கிறார்கள். காவிரி தாண்டி வேறு ஏற்பாடு பற்றி ஜெயலலிதா ஏதும் சொல்ல மறுக்கிறார். நூறு நாட்கள் வேலைத் திட்டத்தில் அய்ந்து மாதங்களாக கூலி தரப்படவில்லை. ஜெயலலிதா இதற்கு என்ன பதில் சொல்வார்?
தமிழ்நாடு இப்படி கொந்தளித்துக்கொண்டிருக்கும்போதுதான் ஜெயலலிதாவுக்குக் காய்ச்சல் வந்துள்ளது. காய்ச்சல் எதனால் வந்ததென அப்போலோ மருத்துவர்கள் எல்லா கோணங்களிலும் ஆய்ந்தறிந்து அதற்கேற்ற சிகிச்சை அளித்திருப்பார்கள். ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைவிட, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையிலோ, அல்லது ‘அந்த’ ஓமந்தூரார் மருத்துவமனையிலோ ஏன் அனுமதிக்கப்படவில்லை? அந்த மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்த ஜெயலலிதா அயராது ஆற்றிய பணிகள் பற்றி அவரே கூட கடந்த அய்ந்து ஆண்டுகளில் பல முறை பேசியிருக்கிறார். அப்படி தரமுயர்த்தப்பட்ட அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படாமல் ஏன் ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார்? ஜெயலலிதாவின் இன்றைய ஆகிருதிக்கு அவர் ஒரு பார்வை பார்த்திருந்தாலே அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்திருப்பார்களே. ஆதிபராசக்தி கடைக்கண் பார்க்க ஏன் மறுத்து விட்டார் என்று அவர் குணம் பெற்று பணிக்குத் திரும்பிய பின் தமிழக மக்களுக்கு விளக்க வேண்டிய கடமை அவருக்கு இருக்கிறது. சட்டம், ஒழுங்கு, பிற நோயாளிகளுக்கு இடையூறு என எந்தக் காரணத்தையும் அவர் சொல்ல முடியாது. இந்த பிரச்சனைகள் அப்போலோ மருத்துவமனையிலும் இருந்தன.
ஜெயலலிதா குணம்பெற்று ‘பணிக்குத்’ திரும்பிய பிறகாவது, அவர் குணம் பெற வாழ்த்திய அரசியல் தலைவர்கள் அனைவரும் இந்தக் கேள்விகளை எல்லாம் தமிழக மக்கள் சார்பாக மேலும் வலுவாகக் கேட்க வேண்டும். ஜெயலலிதா ‘பூரண குணம்’ பெற வாழ்த்துக்கள்!
(மாலெ தீப்பொறி 2016 அக்டோபர் 01 – 15 தொகுதி 15 இதழ் 5)   /thetimestamil.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக