செவ்வாய், 11 அக்டோபர், 2016

ஹிலாரிக்கே வெற்றி: நியூயார்க் டைம்ஸ்!

மின்னம்பலம்,காம் ; கடந்த சில நாட்களுக்கு முன் ‘சிஎன்என்’ தொலைக்காட்சியும், ‘ஓஆர்சி’ என்ற அமைப்பும் சேர்ந்த நடத்திய கருத்துக்கணிப்பில் ‘ஹிலாரியை முந்துகிறார் டிரம்ப்’ என்று செய்தி வெளியிட்டது. அதை முறியடிக்கும் விதமாக நேற்று நியூயார்க் டைம்ஸ் தேசிய அளவில் நடத்திய கருத்துக்கணிப்பில் ‘ஹிலாரிக்கே வெற்றி’ என்று உரக்க அறிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 8ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனும் குடியரசு கட்சி சார்பில் தொழிலதிபர் டொனால்டு டிரம்பும் போட்டியிடுகின்றனர். ‘சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவேன். அயல்நாட்டு பணி ஒப்படைப்பைத் தடுப்பேன். அமெரிக்காவில் முஸ்லிம்கள் நுழைய தடை விதிப்பேன்’ என்று பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளை டொனால்டு டிரம்ப் வெளியிட்டு வருகிறார்.
இதனால் சர்வதேச அளவில் அவருக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. ஆனால், உள்நாட்டில் அவரது மதிப்பு உயர்ந்து வருவது அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. சிஎன்என் தொலைக்காட்சி, ஓஆர்சி அமைப்பு இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் டொனால்டு டிரம்புக்கு ஆதரவாக 45 சதவிகிதம் பேர் வாக்களித்துள்ளனர். ஹிலாரி கிளிண்டனுக்கு 43 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதற்கு முன்பு கடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளில் ஹிலாரி முன்னிலையில் இருந்தார். ஆனால், தற்போதைய கருத்துக்கணிப்பில் டொனால்டு டிரம்ப் அவரைப் பின்னுக்குத் தள்ளியுள்ளார். அதன் பிறகு பெண்களைப் பற்றி ஆபாசமாக டிரம்ப் பேசியது சர்ச்சைக்குள்ளானது. இந்நிலையில் தேசிய அளவில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையும் வேறு சில பத்திரிகைகளும் சேர்ந்து நடத்திய தேசிய அளவிலான ஆய்வில் ஹிலாரி கிளிண்டனுக்கு 45% வாக்குகளும் டிரம்ப்புக்கு 40% வாக்குகளும் மட்டுமே கிடைத்துள்ளது. ஆகவே, நடக்கவிருக்கும் தேர்தலில் ஹிலாரி வெற்றி பெறுவது உறுதி என்று அழுத்தமாக கூறுகிறது நியூயார்க் டைம்ஸ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக