செவ்வாய், 11 அக்டோபர், 2016

பக்கவிளைவுகள் இல்லாத சித்த மருத்துவம்!

மின்னம்பலம்.காம் : சித்தா, ஆயுர்வேதம், யுனானி, இயற்கை மருத்துவம் ஆகிய நான்கும் நமது பாரம்பரிய மருத்துவத்தில் அடங்கும். இதைச் சுருக்கமாக, ‘ஆயுஷ்’ என்றழைப்பார்கள். இவற்றில், இயற்கை மூலிகைகளே மருந்துகளாக பயன்படுத்தப்படுகின்றன. இன்று பயங்கர நோய்களாக சொல்லப்படும் பலவற்றுக்கும் மருந்தாகும் மூலிகைகளை நமது முன்னோர் அன்றே ஓலைச்சுவடிகளில் எழுதி வைத்திருக்கிறார்கள்.
நோய்களைத் தீர்ப்பது மட்டுமல்ல, நோய் எதனால் வருகிறது என்று அதன் மூலத்தையும் கண்டறிந்து, மறுபடி அது தலைதூக்காமல் சரிப்படுத்துவதும் நம் பாரம்பரிய மருத்துவ முறையின் சிறப்பு. சித்த மருத்துவம் என்பது நமது மண்ணின் மருத்துவம். இதை மருத்துவமுறை என்பதைவிட ‘வாழ்வியல் கோட்பாடு’ என்றே சொல்லலாம்.

நவீன மருத்துவத்தில் நோய் வந்தபிறகுதான் மருந்துகள் கொடுக்க முடியும். சித்த மருத்துவ மருந்துகளை நலமோடு இருக்கும்போதே உட்கொண்டு வந்தால், எந்த நோயும் வராமல் தடுத்துவிடலாம். நாவல் கொட்டை, சிறு குறிஞ்சால், ஆவாரம்பூ ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் பொடியை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் நீரிழிவைக் கட்டுப்படுத்தலாம். பொன்குரண்டியும், பூலா விருட்சமும் நேரடியாக நம் உடலில் சுரக்கும் ஹார்மோன்களில் வேலை செய்து நோய்களைக் கட்டுப்படுத்தும் தன்மை உடையவை.
புற்றுநோயை கட்டுப்படுத்தும் சக்தியும் இவற்றுக்கு உண்டு. காக்கட்டான், நீல அவுரி, கரிசலாங்கண்ணி, வல்லாரை, கரந்தை ஆகிய ஐந்து கர்ப்ப மூலிகைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நோய்களே வராது; மூளையும் சுறுசுறுப்பாக இயங்கும் என்கிறது சித்தர்களின் ஓலைச்சுவடி. துளசி, திருநீற்றுப் பச்சிலை, ஆடாதொடா, தூதுவளை போன்ற மூலிகைகளை வீட்டிலேயே வளர்த்து பயன்பெறலாம். மூச்சு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு தூதுவளை பயனளிக்கும். நெஞ்சு சளியையும் குறைக்கும்.
வல்லாரை நல்ல தூக்கத்தை வரவழைக்கும். கண்டங்கத்தரியையும், முசுமுசுக்கையையும் உணவில் சேர்த்துக்கொண்டால் நாள்பட்ட சளியைக்கூட போக்கிவிடும். மணத்தக்காளி வயிற்றில் உள்ள அமிலத்தன்மையைக் குறைக்கும். இதில் உள்ள அல்கலைன் மலத்தை இளக்கிவிடும். உணவு செரிமானத்தையும் சரிப்படுத்தும். வாய்ப்புண், வயிற்றுப்புண் இரண்டையும் சரியாக்கும். அசோக மரத்தின் பட்டைகள் பெண்களின் பிரச்னைகள் பலவற்றுக்கும் மருந்தாகும்.
வீட்டிலேயே இவ்வகை மூலிகைகளை எளிதில் வளர்த்து உணவில் சேர்த்து வருவதன்மூலம் பல நோய்கள் வராமல் தடுக்கலாம். இப்படிச் செய்யாமல், நோய் வந்தபிறகு ஆங்கில மருத்துவத்தை நாடுவதையே பெரும்பாலான மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். அதோடு, மாறிவரும் நவீனச் சூழலும் மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையும் நோய்களை அதிகரிக்கின்றன.
சிக்குன்குனியா, டெங்கு போன்ற ஜுரங்களுக்குத் தகுந்த மருந்துகள் ஆங்கில மருத்துவத்தில் கிடையாது. சித்த மருத்துவத்திலோ, அப்போதே 64 வகை ஜுரங்களை வரையறுத்து, அதற்கான தீர்வையும் சொல்லியுள்ளனர். நிலவேம்பு குடிநீர் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதோடு, விஷ ஜுரத்துக்கு எதிராகவும் செயல்படக்கூடியது. நிலவேம்பு குடிநீரின் மகத்துவத்தை இன்று ஆங்கில மருத்துவர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
சித்த மருத்துவத்தில் நோய்களை வாதம், பித்தம், கபம் என வகை பிரித்து, அதற்கான மருத்துவ முறைகளையும் சொல்லிச் சென்றுள்ளார்கள். பெரும்பான்மையானவர்கள் எல்லா வகை ஆங்கில மருத்துவ முறைகளையும் பார்த்து, சிகிச்சை பலனளிக்காமல் போனவுடன்தான் சித்த மருத்துவத்துக்கு வருகிறார்கள். அப்போது நோய் மிகவும் முற்றியநிலையில் இருக்கும். அதனால் அந்தநிலையில் நோயை சரியாக்குவது சவால் நிறைந்த விஷயமாக மாறிவிடுகிறது. நோயின் ஆரம்பநிலையிலோ அல்லது நோய் பெரிதாகப் பரவாதநிலையில் சித்த மருத்துவம் எடுத்துக் கொண்டால் நல்ல பலன் உருவாகும் என்று சொல்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக