சனி, 1 அக்டோபர், 2016

வதந்திகளை உருவாக்கி உள்ளாட்சி தேர்தலில் பலனடையப் பார்க்கிறதா அதிமுக?

ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து வதந்திகளை பரப்புவோருக்கு எதிராக
காவல்துறை தினமும் கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. பிரான்ஸில் வசிக்கும் தமிழச்சி மீது ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்தே இந்த வதந்திகள் மிகப்பெரிய அளவில் தொடர்ந்து பரவிக்கொண்டே இருக்கின்றன. இதை யார் பரப்புகிறார்கள்? இவை வைரலாக எப்படி தொடர்ந்து மக்களிடம் சென்று சேர்கின்றன? வதந்திகளை பரப்புவோரின் நோக்கம் என்ன?
வதந்திகள் என்பவை தானாக உருவாகின்றவை அல்ல. அவற்றிற்குப் பின்னே திட்டவட்டமான நோக்கங்கள் இருக்கின்றன. இந்தியாவில் நடந்த பல மதக் கலவரங்கள், சாதிக்கலவரங்களுக்குப் பின்னே திட்டமிட்டு உருவாக்கி பரப்பப்பட்ட வதந்திகளே பெரும் பங்காற்றியிருக்கின்றன. வதந்திகள் பரவ வேண்டும் என்றால் அதற்குப் பின்னே ஒரு செல்வாக்கு மிக்க குழு இருக்க வேண்டும்.
கர்நாடகாவில் வட மாநில தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக ஒரே இரவில் வெளியேற காரணம் அவர்கள் தாக்கப்படலாம் என்ற ஒரே ஒரு எஸ்.எம்.எஸ் காரணமாக இருந்தது. வட மாநில தொழிலாளர்கள் செல்போன்களை குறிவைத்தது எப்படி அந்த குறுஞ்செய்திகள் பரவின? இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தொலை தொடர்பு நிறுவனங்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என அப்போதே ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் குறிப்பிட்டேன். ஆனால் அந்த விவகாரம் அப்படியே மறக்கப்பட்டுவிட்டது.
ஜெயலலிதா விவகாரத்திற்கு வருவோம். அவர் சாதாரண காய்ச்சலுக்காக அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட அன்று அமைச்சர்களும் கட்சித் தொண்டர்களும் பெருமளவு திரண்டு க்ரீம்ஸ் ரோடையே ப்ளாக் செய்தார்கள். அதன் மூலமாகவே முதல்வரின் உடல் நலக்குறைவு பதற்றத்திற்குரிய செய்தியாக மாற்றப்பட்டது. முதல்வர் குணமடைந்துவிட்டார் என்று ஊடகங்களும் அவர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார் என்று அப்பல்லோ மருத்துவர்களும் சம்பந்தமில்லாமல் சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஆனால் வேறுவிதமான வதந்திகள் தீயாகப் பரவிக்கொண்டே இருக்கின்றன. அமைச்சர்கள், ஊடகங்கள், மருத்துவர்கள் கூற்றுப்படி முதல்வர் நலமாகவே இருக்கிறார் என்று நாம் நம்ப வேண்டும். ஏனெனில் நாம் செய்தியை அறிய நமக்கு வேறு வழிமுறைகள் கிடையாது. தமிழச்சி போன்றவர்கள் சொல்லும் கூற்றுகளை நாம் எந்த அடிப்படையிலும் பொருட்படுத்த வேண்டியதில்லை. ஆனால் குணமடைந்து வரும் மருத்துவமனையிலிருந்தே தன் பணிகளை செய்துகொண்டிருக்கும் முதல்வரின் ஒரு புகைப்படமோ அல்லது காணொளியோ அல்லது குரல் பதிவோ ஏன் மக்கள் முன்னால் வைக்கப்படவில்லை? இதன் முலமாக எல்லா வதந்திகளும் முடிவுக்கு வந்துவிடுமே? அப்படியெனில் இந்த வதந்திகள் நீடிக்க வேண்டும் என்று விரும்புகிறார்களா?
இங்குதான் வதந்தியின் பலன்கள் பற்றி யோசிக்க வேண்டியிருக்கிறது. இந்த வதந்தி பரவப்பரவ ஜெயலலிதா அவர்களின் உடல் நலம் குறித்த கவலை மக்களிடம் பெருமளவு அதிகரிக்கிறது. இந்த அனுதாபம் அரசியல்ரீதியாக அதிமுகவிற்கு உள்ளாட்சி தேர்தல்களில் பலன்களை உருவாக்கக்கூடியது. வதந்திகளுக்குப் பின்னே யாரோ இருக்கிறார்கள். அவர்கள் யார் என்பதுதான் இங்கே கேள்வி.
சென்னை வெள்ளத்தின் துயரங்களுக்கு நடுவே ‘பீப்’ சாங் எப்படி வைரலாக மாறியது என்ற கேள்விக்கு இன்றுவரை நமக்குப் பதில் தெரியாது. மக்களை முக்கியமான பிரச்சினைகளிலிருந்து கவனத்தைத் திசை திருப்புவதற்காக கடந்த ஓராண்டில் என்னவெல்லாம் செய்யப்பட்டிருக்கின்றன என்பதை நினைக்காமல் இருக்க முடியவில்லை.
இதுவும் ஒரு ‘கான்ஸ்பிரஸி தியரி’ தான். உண்மை என்ற ஒன்று இருக்கிறதா என்ன?
மனுஷ்யபுத்திரன், கவிஞர்; அரசியல் செயற்பாட்டாளர்   /thetimestamil.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக