புதன், 14 செப்டம்பர், 2016

கலைஞர் ஓணம் வாழ்த்து :நல்லாட்சி நடத்திய மாவலி மன்னனை வஞ்சகத்தால் வீழ்த்தி விட்டார்களே!

சென்னை: ஓணம் கொண்டாடும் கேரள மக்கள் அனைவருக்கும் தி.மு.க. சார்பில் உளமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி உள்ளார். நல்லவன் ஒருவன் ஆட்சி நடத்துவதும், அது தொடர்வதும் பிடிக்காமல் தேவர்கள் அவனை சூழ்ச்சியால் வீழ்த்தி விட்டார்கள் என்றும் கருணாநிதி தெரிவித்துள்ளார். கேரள மக்கள் மிகச் சிறப்பாகக் கொண்டாடும் ஓணம் கேரளாவில் மட்டுமல்லாமல், தமிழகம் உட்பட அவர்கள் வாழும் இடங்கள் அனைத்திலும் வண்ண மயமாகக் கொண்டாடப்படும் திருநாளாகும். karunanidhi greets Onam festival கழக ஆட்சிக் காலத்தில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த செல்வி பாத்திமா பீவி தமிழக ஆளுநராக இருந்தபோது ஒருமுறை ஆளுநர் மாளிகையில் கொண்டாடிய ஓணம் திருநாளுக்கு விடுத்த அழைப்பை ஏற்று, அதில் கலந்து கொண்டேன்.
அப்பொழுது அந்த விழாவில் அச்சிட்டப்பட்ட ஒரு சிறு வெளியீடு வழங்கப்பட்டு, அதைப் படித்திருக்கிறேன். மகாபலி என்ற அசுரச் சக்கரவர்த்தியை மகா விஷ்ணு வாமன அவதாரம் எடுத்து வதைத்த கதைதான் ஓணம் என்று சொல்லப்பட்டதற்கு மாறாக; அந்த வெளியீட்டில், மலையாள ராஜ்யத்தை மாவலி என்ற மாமன்னன் ஆண்டு வந்தான். அவன் ஆட்சிக்காலம் மக்களுக்குப் பொற்காலமாக இருந்தது. அவனை அப்படியே விட்டுக் கொண்டிருந்தால் இன்னும் பல சாதனைகளைச் செய்து சரித்திர புரு‌ஷனாகி விடுவான். ஆகவே, அவனை இப்போதே ஒழிக்க வேண்டும். ஒழித்தால்தான் தேவர்கள் எனப்படும் பூசுரர்கள் வாழ முடியும் என்று மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிடுகிறார்கள். அதைக் கேட்ட விஷ்ணு; வாமன அவதாரம் எடுத்து வஞ்சகத்தால் மாவலி மன்னனை மண்ணோடு மண்ணாகும்படி வதைத்து விடுகிறார். நல்லவன் ஒருவன் ஆட்சி நடத்துவதும், அது தொடர்வதும் பிடிக்காமல் தேவர்கள் அவனை சூழ்ச்சியால் வீழ்த்தி விட்டார்கள். உயிர் விடும்போது அந்த மாவலி மன்னன் மகாவிஷ்ணுவிடம் கேட்ட வரம்தான், அவன் நினைவாக ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதாகும்" என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து, "நெஞ்சுக்கு நீதி" 5ஆம் பாகத்திலும் நான் எழுதியுள்ளேன். மக்களின் நல்வாழ்வு கருதி நல்லாட்சி நடத்திய மாவலி மன்னனை வஞ்சகத்தையே வாழ்வாகக் கொண்டவர்கள் சூழ்ச்சியால் அழித்து விட்டாலும், நன்றியுணர்வோடு கேரள மாநில மக்கள் அந்த மாவலி மன்னனின் புகழ் போற்றி, வீடுகளை அலங்கரித்து, வாசலில் "அத்தப்பூ" கோலமிட்டு, ஆண்டுதோறும் ஓணம் திருநாளைச் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்கிறார்கள். தமிழகத்தில் 14ம்தேதி (புதன்கிழமை) ஓணம் கொண்டாடும் கேரள மக்கள் அனைவருக்கும் தி.மு.க. சார்பில் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்.

Read more at://tamil.oneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக