திங்கள், 19 செப்டம்பர், 2016

திமுக கூட்டணியில் வாசன் கட்சி !

vikatan.com தி.மு.க அணியில் அங்கம் வகிப்பதை உறுதி செய்துவிட்டது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி. ' உள்ளாட்சியில் மட்டுமல்ல, அடுத்து வரக் கூடிய தேர்தல்களிலும் லட்சிய அணியாக நாங்கள் உருவெடுப்போம்' என உற்சாகமாகப் பேசுகின்றனர் த.மா.கா தொண்டர்கள். சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியோடு இணைந்து தேர்தலை சந்தித்தது த.மா.கா.தேர்தலில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோற்றது மட்டுமல்லாமல், மாநிலம் முழுவதும் 0.5 சதவீத ஓட்டுக்களையே அக்கட்சி பெற்றிருந்தது. ' கட்சிக்காரர்கள்கூட நமக்கு ஓட்டுப் போடவில்லையா?' என அதிர்ந்து போனார் ஜி.கே.வாசன். இதன்பிறகும், கட்சியின் சீனியர் தலைவர்களான ஞானசேகரன், கோவை மகேஸ்வரி, சாருபாலா உள்ளிட்டவர்கள், அ.தி.மு.கவுக்குச் சென்றனர். ' பதவிக்காக போகிறவர்கள் போகட்டும். உண்மையான தொண்டர்களுக்குக் கட்சிப் பதவிகளைப் பகிர்ந்தளிப்போம்' என கட்சிக்காரர்களை உற்சாகப்படுத்தினார். இந்நிலையில், இன்று காலை தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார் ஜி.கே.வாசன். ' அரசியல்ரீதியான சந்திப்புதான் இது' என காங்கிரஸ் கட்சியை கலவரப்படுத்திவிட்டே சென்றார். 

'தி.மு.க அணியை எவ்வாறு தேர்வு செய்தீர்கள்?' என்றோம் த.மா.கா மாநில நிர்வாகி ஒருவரிடம். " இது புதிய கூட்டணி அல்ல. 96-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கவும் த.மா.காவும் எப்படி லட்சிய அணியாக உருவெடுத்ததோ அதைப் போலத்தான். அண்மையில், மதுரையில் நடைபெற்ற திருமண விழாவில் ஸ்டாலினும் வாசனும் சந்தித்துப் பேசினார்கள். அப்போதே கூட்டணி உறுதியாகிவிட்டது. பொதுவாக, உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சி உள்பட பிரதான கட்சிகள் அனைத்தும் தனித்துப் போட்டியிடவே விரும்பும். த.மா.காவும் தனித்துப் போட்டியிட்டால், கட்சிக்காரர்கள் மத்தியில் மீண்டு வர முடியாத சோர்வைக் கொடுத்துவிடும் என நினைக்கிறார் தலைவர் வாசன். தி.மு.கவோடு கூட்டணி ஏற்பட்டால், வரக் கூடிய தேர்தல்களிலும் கட்சிக்காரர்கள் உற்சாகமாக வேலை பார்ப்பார்கள். கூட்டணிக்காக நேரம், காலத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பதைவிட, அதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கிவிட்டார் ஜி.கே.வாசன். உள்ளாட்சித் தேர்தலோடு கூட்டணியைத் தொடங்கிவிட்டால், நாடாளுமன்றத் தேர்தலில் நல்ல இடங்களைப் பெற்று வெற்றிக் கூட்டணியாக மாற முடியும் என நம்புகிறார். 
தவிர, தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி மீதான மக்களின் எதிர்ப்பு குறைந்து போய்விடவில்லை. சட்டமன்றத் தேர்தலில் அதிகப்படியான இடங்களில் தி.மு.க வென்றது. காங்கிரஸ் கட்சியால் எட்டு இடங்களையே பெற முடிந்தது. ' நாடாளுமன்றத் தேர்தலில் எதாவது ஒரு தேசிய கட்சி கூட்டணியில் இருக்க வேண்டும்' என்ற மனநிலையில்தான், இதுவரையில் திராவிடக் கட்சிகள் இருந்து வந்தன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 37 எம்.பிக்களை அ.தி.மு.க பெற்றது. ' தேசியக் கட்சிகளின் தயவு அவசியம்' என்ற எண்ணத்தையும் இது தகர்த்தது. இதை முன்வைத்து வரக் கூடிய தேர்தல்களில், காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் இடங்களை அளிப்பதைவிடவும், மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைத்துப் போட்டியிடுவதையே தி.மு.க விரும்புகிறது. காங்கிரஸை தவிர்த்து இப்படியொரு மாநிலக் கட்சிகளின் அணி உதயமானால், எங்களோடு திருமாவளவனும் இடதுசாரிகளும் வருவதற்கான வாய்ப்புகளே அதிகம். 
அந்த நேரத்தில், எங்கள் அணியே மாபெரும் வெற்றிக் கூட்டணியாக உருவெடுக்கும். அதற்கு முன்னோட்டமாகத்தான் ஸ்டாலினுடன் இன்றைய சந்திப்பு நடந்தது" என்றவர், " உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சிகளில் சில வார்டுகள் எங்களுக்கு அளிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி வார்டுகளில் இடங்களைப் பெறுவது குறித்து, அந்தந்த மாவட்ட செயலாளர்களிடம் பேசச் சொல்லிவிட்டனர். தி.மு.க தலைவர் சந்திப்புக்குப் பிறகு, மாநகராட்சியில் எங்களுக்கு எவ்வளவு இடங்கள் ஒதுக்கப்படும் என்பதும் தெரியும். இன்றைய சந்திப்பால், சோர்ந்து கிடந்த த.மா.கா தொண்டர்கள் உற்சாகமாகிவிட்டனர்" என்றார் விரிவாக. 
தென்னந்தோப்புக்குள் சூரிய ஒளியை வேண்டி நிற்கிறது த.மா.கா. உள்ளாட்சி தேர்தலின் வழியாக ஒளி கிடைக்குமா என்பது போகப் போகத் தெரியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக