திங்கள், 19 செப்டம்பர், 2016

ராம்குமார் மரணத்தால் சக கைதிகள் பயம் பதற்றம்

சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார், புழல் சிறைக்குள்ளேயே மர்ம மரணம் அடைந்தது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவரை தனிமைப்படுத்தியதே இறப்புக்கு காரணம் என்ற புதிய தகவலும் வெளியாகி இருக்கிறது.
இதுகுறித்து சிறைத்துறை வட்டாரங்கள் கூறுகையில், "ராம்குமார் அடைக்கப்பட்ட டிஸ்பென்சரி பிளாக்கில் 6 சிறை அறைகள் உள்ளன. அதில் ஒரு அறையில்தான் ராம்குமார் அடைக்கப்பட்டு இருந்தார். அவருடன் இருந்த இரண்டு கைதிகளிடம் அவர் ஒருசில வார்த்தைகளை மட்டுமே பேசியுள்ளார். மேலும் ராம்குமாரிடம் சக கைதிகள் யாரும் பேசக்கூடாது என்பது சிறைத்துறை நிர்வாகத்தின் வாய்மொழி உத்தரவு. இதனால் தனிமை அவரை கடுமையாக வாட்டியது. கடந்த வாரம் கூட ராம்குமாரிடம், கைதி ஒருவர் பேச முயன்றுள்ளார். அதைப்பார்த்த சிறைக்காவலர்கள் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். ராம்குமாரை நேரில் சந்தித்தவர்களிடமும் இந்த தகவலை அவர் சொல்லி கதறியுள்ளார். இந்த சூழ்நிலையில் ஏற்கனவே தற்கொலைக்கு முயன்றதாக கதை அளக்கப்பட்டது . ராம்குமார், மீண்டும் தற்கொலை செய்ய அதிக வாய்ப்புள்ளதாக உயரதிகாரிகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்ற நாடகமும் அரங்கேற்ற படுகிறது
.  ஆனால் அதை அதிகாரிகள் பெரிதாக கருதவில்லை. ராம்குமாரின் அறையை நேற்று மாலை 4 மணிக்கு சிறைக்காவலர் திறந்துள்ளார். அதன்பிறகு சிறைக்காவலர் அங்கிருந்து சென்று விட்டார். யாருமே அந்த பிளாக்கில் இல்லை என்பதை தெரிந்த ராம்குமார், தற்கொலைக்கு முயன்று உயிர் இழந்துள்ளார். இந்த சம்பவம் நடந்ததும், உயரதிகாரிகளுக்கு வாக்கி டாக்கியில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிலும் சில உயரதிகாரிகளுக்கு தாமதமாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராம்குமார் விவகாரத்தில் கூடுதல் அதிர்ச்சித் தகவலை சிறைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். "அதாவது, ராம்குமார் அடைக்கப்பட்டுள்ள சிறை அறை திருநங்கைகளை அடைக்க ஒதுக்கப்பட்டுள்ளதாம். இதுவரை எந்த திருநங்கைகளும் அடைக்கப்படாத நிலையில் அங்கு ராம்குமார் அடைக்கப்பட்டு இருந்தார்" என்றார்.
மின்சாரம் தாக்கிய ராம்குமார் தற்கொலை செய்ததாக சிறைத்துறை நிர்வாகம் தரப்பில் கூறப்படும் தகவல்கள் உண்மையல்ல என்கிறார்கள் பல ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்தவர்கள். "சிறையில் மின்சாரம் மூலம் தற்கொலை செய்தது இதுவே முதல்முறை. இதற்கு முன்பு தூக்கு, கழுத்தை அறுத்து, உயரமான இடத்திலிருந்து குதித்து, தலையை சுவரி பயங்கரமாக மோதி என பல கைதிகள் தற்கொலை செய்துள்ளனர். ஆனால் ராம்குமார், மின்சாரத்தைப் பயன்படுத்தி தற்கொலை செய்திருக்கும் தகவல் நம்பும்படியாக இல்லை. எனவே ராம்குமார் மரணத்துக்கு நீதி விசாரணை வேண்டும். ஒரு சுவிட்ச் பாக்ஸை உடைக்க குறைந்தது இரண்டு நிமிடங்களாகும். அந்த நிமிடங்களுக்குப் பிறகு மின்கம்பியை வாயால் கடிக்க வேண்டும் என்றால் அதற்குரிய மன உறுதி என்பது எல்லோருக்கும் எளிதில் வராது. ஏனெனில் மின்சாரம் உடலில் பாய்ந்தவுடன் அதிலிருந்து விடுபடதான் பொதுவாக தற்கொலைக்கு முயல்பவர்களின் மனநிலை இருக்கும். அதுபோல ராம்குமாரின் மனநிலையும் இருந்திருக்கலாம். இந்த இடைப்பட்ட நேரத்தில் ராம்குமாரை கண்காணிக்கத் தவறியுள்ளது சிறை நிர்வாகம். டிஸ்பென்சரி பிளாக்கில் உள்ள சுவிட்ச் பாக்ஸ்கள் அனைத்தையும் யாரும் எளிதில் தொட முடியாது. லைட்டை ஆன் செய்ய வேண்டும் என்றால் கூட லத்தியைதான் சிறைகாவலர்கள் பயன்படுத்துவார்களாம். அப்படியிருக்கும் போது எப்படி வாயால் ராம்குமார், மின்வயரை கடித்தார் என்று சிறை சொல்வது நம்பும்படியாக இல்லை" என்றனர்.
ராம்குமார் மரணத்தில் பல மர்மமுடிச்சுக்கள் இருப்பதாக சிறைவாசிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. ராம்குமாருக்கு நேர்ந்தது தங்களுக்கு நேரலாம் என்று பல சிறைவாசிகள் கருதுகின்றனர். இதனால் புழல் சிறையில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இந்நிலையில் ராம்குமாரின் மரணத்துக்கு சிறை நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும் என்று சிறைவாசிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ராம்குமாரை கண்காணிக்க வேண்டிய காவலரின் மெத்தன போக்கே அவர் உயிர் இழக்க காரணமாகி விட்டது என்ற குரலும் மேலொங்கி நிற்கிறது. அவர் தற்கொலைக்கு முயலும் போதே சம்பந்தப்பட்ட சிறைகாவலர்கள் பார்த்திருந்தால் அதை தடுத்து இருக்கலாம். ஆனால் மின்சாரம் பாய்ந்த நிலையில் ராம்குமாரின் அலறல் மற்றும் சக கைதிகளில் சத்தம் கேட்ட பிறகே சிறைகாவலர்கள் அங்கு வந்துள்ளனர். இதன்பிறகே ராம்குமார் மீட்கப்பட்டுள்ளார்.
இந்த விவகாரத்தை தற்போது மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து விசாரணை நடத்துகிறது. இதுதொடர்பாக விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று சிறைத்துறை ஏ.டி.ஜி.பிக்கு உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக